"நான் , நிழல்களின் இராணுவத்துடன் , தோல்வியின் வீதி ஓரமாக திரும்பிக் கொண்டிருக்கிறேன்
இபொழுது எல்லாமே முடிந்துவிட்டன , என்னுடைய பயணத்தின் இறுதி கட்டம் -உறுதியானது - நெருங்கிவிட்டது."
( சேகுவாரா தனது மனைவிக்கு தன்சானியாவில் இருந்து எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டது )
இலங்கையில் ஜே வீ பீ எனப்படும் மக்கள் ஐக்கிய முன்னணியின் ஸ்தாபகரும் தலைவருமான ரோகண விஜயவீரா மாறு வேடத்தில் தலைமறைவாக உலப்பனையில் வாழ்ந்த பொழுது பிரிகேடியர் ஜானக பெரேராவினால் கைது செய்யப்பட்டார்.
அங்கிருந்து கொழும்புக்கு கொண்டு வரப்பட்டார் , சித்திரவதை செய்யப்பட்டார் , பின்னர் பொரள்ளையில் உள்ள கனத்தை மயானத்துக்கு , அரைகுறை உயிருடன் எடுத்துச் செல்லப்பட்டு அங்கு உயிருடன் எரிக்கப்பட்டார் என்று அண்மையில் செய்திகள் மிக விரிவாக வெளி வந்துள்ளன.
அவரை கனத்தை மயானத்தில் வைத்தே கொன்றார்கள் என்று எனது இடதுசாரி நண்பர் 1990 களில் இலங்கையில் கொழுபில் எனது வீட்டில் வைத்தே என்னிடம் கூறினார் . அதுபற்றி நான் முன்னமே எழுதியும் இருந்தேன்(http://www.bazeerlanka.com/2011/03/description-whither-jvp-racist-party.html.)எனக்கு கூறிய நண்பரும் என்றோ ஒருநாள் தான் அதுபற்றி எழுதப் போவதாகவும் கூறினார். ஆனால் இதுவரை அவர் எழுதவில்லை .
படத்தில் 1980 களில் விஜேவீர தன் மனைவி குழந்தைகளுடன்
ஆனால் விஜேவீரா கொல்லப்பட்ட விதம் குறித்த செய்திகள் மாயானக் காப்பாளராக அப்பொழுது தொழில் புரிந்தவர் , இராணுவத்தில் தொழில் புரிந்த ஜே வீ பீ அனுதாபி என்பவர்களால் அப்பொழுதைய பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜயரத்தினா உட்பட உளவுத்துறையின் உயர் மட்ட உத்தியோகத்தவர்கள் வரை செயற்பட்ட விதம் குறித்து மட்டுப்படுத்தப்பட்ட செய்திகளே வெளி வந்துள்ளன.
ஒருவேளை இன்னமும் , பல மறைக்கப்பட்ட சங்கதிகளை வெளிக் கொணரும் நபர்களுக்கு தகுந்த பாதுகாப்பு இல்லாமல் இருக்கலாம் என்பது ஒன்று.
மற்றொன்று, உத்தியோகபூர்வமாக விஜேவீராவின் கொலை குறித்து விசாரணை செய்ய யாரும் முயற்சிக்கவில்லை , ஜே வீ பீ உட்பட.
விசாரணைகள் எதுவும் முன்னெடுக்கப்படாத நிலையில் , பல புதைக்கப்பட்ட உண்மைகள் விஜவீரா போன்ற பலரைப் பற்றி தோண்டப்படாதவரையில் , தெரிவிக்கப்பட்டவை மட்டுமே சரித்திரம் ஆகின்றன!.
எது எப்படியாயினும் , இலங்கையின் சரித்திரத்தில் சமூகப் புரட்சியில் ஆயுதத்தின் மீது நம்பிக்கை வைத்தவர் விஜேவீரா , அவரைப் போலவே பிரபாகரனும் இன விடுதலைக்கு ஆயுதத்தின் மீது நம்பிக்கை வைத்தார். இருவரும் எப்படியோ கொல்லப்பட்டு போனார்கள்.
ஆனால் இவர்கள் இருவரும் பலரைக் கொன்றனர் , அப்பாவிகள் கருத்து முரன்பட்டோரைக் கொன்றனர்.
சமூக மாற்றங்களுக்கான ஆயதப் புரட்சி சேகுவாரா காலத்து ஆட்சிக் கெதிரான போராட்டங்களிலிருந்து மாறுபட்டு வந்திருக்கிறது. மக்களுக்கான ஆயுதப் போராட்டங்கள் , சகிப்புத்தன்மையற்ற , மாற்றுக் கருத்துக் கெதிரான , சுய இன அழிப்பு செய்யும் , அப்பாவிகளை அழித்தொழிக்கும் பண்பியல்புகளை நியாயங்களாக்கிக் கொண்டன.
ஆனால் இலங்கையின் அரசியல் வரலாற்றில் விஜெவீராவும் முறையான ஒப்பீடின்றி சேகுவரா என்றே அழைக்கப்பட்டார். அவரின் மனைவி பிள்ளைகள் அவருடன் ஏதோ ஒரு விதத்தில் புதைக்கப்பட்டுப் போனார்கள் , அல்லது புதைக்கப்பட விரும்பினார்கள்
சேகுவராவையும் விஜயவீராவையும் கட்டிப்போட்ட மண வாழ்க்கையும்,கட்டுப்போடப்படாத காயங்களும்
“சில வலிமைமிகு அக்கறைகளின் கருவியாகவே நீதி இருக்கிறது, ஒடுக்கும் சக்திகளின் வசதிகேற்றவாறே சட்ட வியாக்கியானங்கள் செய்யப்படுவதும் தொடரும்”சேகுவேரா
1989 நவம்பர் 13, ஆம் திகதி ரோஹன விஜயவீரா கொல்லப்பட்டு நேற்றுடன் 26வருடங்கள் உருண்டோடிவிட்டன. விஜவீராவின் கொலை ஒரு அரசியல் படுகொலை, அதுவும் அன்றைய பிரேமதாசா ஆட்சியினர்,நீதி விசாரணை இன்றி,தன்னிச்சையாக அவரைக் கொல்லவே வேண்டும் என்று, அவர் கைது செய்யப்பட்டு 24மணித்தியாலத்துள் முடிவு எடுத்தனர் கொன்றனர்.
அப்பொழுது அவருக்கு ஐந்து பிள்ளைகள் இருந்தனர், அவரின் ஆறாவது பிள்ளை தாயின் வயிற்றில் இருந்தது. உலகம் அறியாத,கணவனின் அரசியல் சித்தாந்தம் பற்றி அக்கறையும் தெளிவும் அற்ற,தனது கணவனின் ஒளிவு மறைவு வாழ்க்கையில் “கைதியாக “வாழ்ந்த ஒரு சாமான்ய இளம் பெண் செய்வதறியாது, சமூகத்துக்குள் மீள் பிரவேசம் செய்ய முடியாது, தனது குழந்தைகளுடன் இராணுவத்திடம் சரண் அடைந்தாள்.
தற்பொழுதுவரை அவரின் வாழ்க்கை இரானுவம முகாம்களிலே சிறைபட்டு இருக்கிறது.
இலங்கையில் ஒரு சமவுடமை அரசினை ஆயுத புரட்சி மூலம் வென்றெடுக்க முடியும் என்று நம்பியவர் விஜயவீரா, ஆயிரமாயிரம் சிங்கள இளைஞர்களை ஆகர்சித்த ஒரு தலைவனின் மனைவி விஜயவீராவின் படுகொலையின் பின், விஜயவீராவின் மனைவி பிள்ளைகள் என்பதற்காய் வழங்கிய விலை, மிகத் துன்பமானது. இன்றுவரை நீடித்திருப்பது.
விஜேவீராவின் மனைவி சிரிமதி சித்திராங்கனியின் என்று ஆவர் விஜயவீராவின் மனைவி ஆனாரோ, அன்றிலிருந்து இன்றுவரை “சிறை” வாழ்க்கையையே அவர் வாழ்ந்து வருகிறார்.
சமூகம் அவரை மீளவும் உள்ளீர்க்க தயாரில்லை, கடந்த 26வருடங்களாக உபத்திரவங்கள் அவரின் குழந்தைகளையும் (அவர்கள் இப்பொழுது பெரியவர்களாகிய, சுதந்திர தனி மனிதர்களாகிய பொழுதும்) துரத்தி வருகிறது !
அவரின் கணவனால் தாபிக்கப்பட்ட கட்சி ஜனநாயக நீரோட்டத்தில் நுழைந்து, விஜேவீரா எழுதிய ஏழு நூல்களையும் வெளியிடும் மற்றும் விற்பனை செய்யும் உரிமையையும் தனதாக்கிக் கொண்டு செயற்படும் நிலையில், எவ்வித வருமானமுமின்றி அரசின் அற்ப தயவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் சித்திராங்கனி. கட்சி ஜே வீ பீ யின் தலைவர் விஜயவீராவைக் கொன்றவர்கள் பற்றி விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எதனையும் முன் வைக்க வில்லை, மாறாக அது பற்றி விசாரணை செய்யப்பட வேண்டும் என்று சித்திராங்கனி இப்பொழுது கோருகிறார். ஆனால் யாரும் அதை செவிமடுப்பதாக இல்லை.
தனது கணவனின் புலமைச் சொத்துரிமைக்காக, அவர் கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்தில் வழக்கொன்றை சென்ற வாரம் தாக்கல் செய்திருந்தார். குறித்த மனுவை எதிர்வரும் 27ம் திகதி விசாரிக்க கொழும்பு வர்த்தக நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. அன்றையதினம் நீதிமன்றத்தில் ஜே வீ யின் தலைவர்கள் ஆஜராக வேண்டும் எனவும் பணிக்கப்பட்டுள்ளது.
சித்திராங்கனி விஜயவீரா தனது சுய சரிதை பற்றி எழுதபோவதாக கூறி வருகிறார் ஆனாலும் பல சங்கதிகளை அவர் ஏற்கனவே சில நேர்காணல்களில் கூறியும் வருகிறார். ஜே வீ பீ யின் இன்றைய தலைவர்களைப் பற்றிய அவரின் விமர்சனங்கள், இப்பொழுது தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு என்பன ஜே வீ பீ கட்சியின் வெளிப்படைத்தன்மை குறித்து சர்ச்சைகளை கிளப்பப் போகின்றன !
விஜெவீராவுக்கும் தனக்குமிடையிலான திருமண பந்தம் சந்தோசமாக அமையவில்லை ஆனாலும் விஜேவீர மீது தனக்கு ஒரு மரியாதை இருந்தது என்று அவர் சொல்லுகிறார். மறுபுறத்தில் இலங்கையில் ஜே வீ பீயினருக்கு மொத்தத்தில் இலங்கை அரசு சூட்டிய பெயர் “Che Guevara-karayos “ செகுவராக்காரர்கள் அதுவே மக்களிடத்திலும் பிரபலம் பெற்றது.
அந்த காலகட்டத்தில் யார் செகுவாரா என்று சாமான்ய பாமர மக்கள் நன்கு அறிந்திருக்கவில்லை , படித்தவர்களும் அன்று தெரிந்துகொள்ள விரும்பவில்லை. மக்கள் சேகுவாரா என்றால் கம்யுனிஷ பயங்கரவாதிகள் என்று நம்ப வைக்கப்பட்டார்கள்.
ஒருபுறம், ஜே வீ பியின் பயங்கரவாத நடவடிக்கைகள் சேகுவரா எனும் சென்ற நூற்றாண்டின் வரலாற்று முக்கியத்துவமிக்க ஒரு புரட்சியாளனை மலினப்படுத்தின! மறுபுறத்தில் விஜேவீராவின் கெட் அப் (தோற்றம்) சேயின் தோற்றத்தை ஒத்ததாக காட்டப்பட்டது.
1970 களில் தொடங்கிய முதல் ஜே வீ. பீ இயக்க நடவடிக்கைகள்,அதனைத் தொடர்ந்த ஆயுத தாக்குதல்கள், அதன் விளைவான கைதுகள் காரணமாக விஜேவீரா கைது செய்யப்பட்ட பொழுது ,அவரையும் இன்றைய கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியரும் அன்றைய ஜே வீ பீ மாணவ தலைவர்களில் ஒருவரான ஜெயதேவா உயங்கொடவையும் காவல் நிலையத்தில் சட்ட உதவி புரிந்தவர் விஜயவீராவை பிணையில் நீதிமன்றில் விடுதலையாக துணை புரிந்தவர் இடதுசாரி கட்சியான -சமசமாஜ கட்சியின் – சட்டத்தரணி. அவர் விஜேவீராவின் விட்தலையின் பின்னர் அவரின் வீட்டிற்கு சென்றது பற்றியும் விஜேவீராவின் தாய் உபசரித்து பற்றியும் இன்றுவரை ஞாபகப்படுத்தி கொள்பவர்.
அதுபோலவே 1990 இல் விஜேவீராவின் கொலை பற்றி எழுதப் போவதாக சொன்னவர் எனது இடதுசாரி தமிழ் நண்பர் -அவரும் ஒரு சட்டத்தரணி! விஜேவீராவின் படுகொலை பற்றிய தகவல்கள் பல கடந்த இரண்டு வருடங்களுக்குள் வெளி வந்தவை, அவரின் கொலை பற்றிய சான்றுகளாக அவை அமைகின்றன.
அன்றைய பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜயரட்ன விஜயவீராவின் மரணம் பற்றி சொன்ன பொய்யும் அதனை ஒத்தூதிய அமைச்சர் ஏ சி எஸ். ஹமீதும் இன்றில்லை!
இலங்கை அரசு செய்த நூற்றுக்கணக்கான நிராயுதபானிகளின் படுகொலைகளில் விஜயவீராவின் மற்றும் அவருடன் கூடவே கைதான ஹேரத்தின் படுகொலையும் அடங்கும்.
விஜயவீராவைக் கொன்ற குற்றவாளிகளில் சிலரே இன்று உயிருடன் இருக்கின்றனர். ஆனாலும் கொலை செய்யக் கட்டளையிட்டவர்கள் இன்று உயிருடன் இல்லை அவர்கள் பலரின் சாவுகளும் மிகக் கொடூரமானவையாக அமைந்தன. புலிகள் அவர்களின் உயிரைக் குடித்தனர். ஜே வீ பீ யினரின் அரச எதிரிகள் பின்னாளில் புலிகளின் எதிரிகளுமானார்கள்.
ஆனால் விஜயவீராவின் மனைவி சித்திராங்கனி ஒரு பரிதாபத்துக்குரிய பெண் , ஒரு நிர்ப்பந்த திருமணபந்தத்துள் இணைந்த“கைதி”, இன்றுவரை இராணுவ முகாமில் வாழ்ந்து கொண்டிருக்கும் கைதி. அதை எல்லாவற்றையும் விட சிங்கள சமூகம் தங்களை ” ஒரு சிங்கள பிரபாகரனின் குடும்பத்தவரைப் போலவே எங்களைப் பார்கிறார்கள், விஜயவீரா கொல்லப்பட்ட நாளில் நாங்களும் கொல்லப்பட்டிருந்தால் இந்த துன்பங்களை நாங்கள் அனுபவித்திருக்க மாட்டோம் “ என்று இலங்கையை விட்டே எங்காவது ஓடிவிட நினைக்கிற ஒரு அபலை !
இங்குதான் சேகுவராவின் மனைவியும் (அலீடா மார்ச்) , தனது குழந்தைகளுடன் ஒளிவு மறைவு வாழ்க்கையில் அனுபவித்த துன்பங்கள் கவனத்துக்கு வருகின்றன. ஆனாலும் சித்தாந்த ரீதியாக அவர் சேயுடன் இணைந்தவர் ஆயுதமும் தூக்கி போராடியவர். கியூபா புரட்சியினை வெற்றிகரமாக முடித்த பின்னரும் சேகுவரா தனது பணி முடியவில்லை என்று நம்பினார். ஆபிரிக்காவிற்கு பயணமானார். ஆனாலும் அவரின் மனைவியால் செகுவாராவின் தொடரும் பயணங்களை -பணியை- தடுக்க முடியவில்லை.
சீ ஐ ஏ எனப்படும் அமெரிக்க உளவு இஸ்தாபனத்தின் அரசியல் படுகொலை நிரலில் சேயின் இடம் தென்னமரிக்காவில் முதன்மை இடத்தில் இருந்த காலகட்டங்களில் சேகுவரா மாறுவேடத்திலே தனது சொந்தக் குழந்தைகளுக்கே, தான் சேகுவராவின் நண்பர் என்று பழக்கம் ஏற்படுத்தி அவர்களுடன் பொழுதைக் கழித்துள்ளார். தகப்பன் இவர்தான் என்று அறியாமல் அவரின் சொந்தக் குழந்தைகள் நால்வரும் அவரிடம் நெருக்கமாக பழகும் சூழலை உருவாக்கி இருக்கிறார். சேகுவரா கொல்லப்பட்டதும் , தன்னையும் குழந்தைகளையும் வளர்க்க தான் பட்ட இன்னல்களை சேகுவராவின் மனைவி நூலக வெளியிட்டுள்ளார். அவர் சித்திராங்கனி போல் சமூகப் பிரதிஷ்டத்தை அனுபவிக்கவில்லை.
விஜேவீராவின் குடுமபம் போலல்லாது சேகுவராவின் குடும்பம் பிடல் காஸ்ட்ரோவின் கியூபா அரசால் பாதுகாக்கப்பட்டனர்.
பிள்ளைகள் மீது விஜேவீரா மிகுந்த பாசம் கொண்டிருந்தார், அந்த விதத்தில் அவர் மாறு வேடத்தில் ஒரு எஸ்டேட்டில் வாழ்ந்த பொழுதும் தமது பிள்ளைகள் மீது அபரித அன்பு கொண்டிருந்தார். ஒரு நல்ல தந்தையாகத் திகழ்ந்தார். இறுதியில் தான் கைது செய்யப்பட்டு,விசாரணையின் பொழுது தன் மீது பரிவு காட்டிய ஒரு உயர் இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் சரத் முனசிங்கவிடம் தனது மனைவிக்கும் குழந்தைகளுக்கும் சில பிரத்தியேக செய்திகளை சொல்லுமாறு பணிவுடன் வேண்டிக் கொண்டுள்ளார். அவர் பின்னர் கொல்லப்படப் போவதை அறிந்தும் கூட தனது குடுபத்தினருக்கு எதுவும் செய்துவிட வேண்டாம் என்றும் வேண்டிக் கொண்டுள்ளார்.
சேகுவராவின் மனைவி, அலீடா மார்ச் எழுதிய செகுவராவுடன் எனது வாழ்க்கை என்ற நூல் சொல்லுகின்ற செய்திகள் சேகுவராவின் மனைவி குழந்தைகள் ” இலங்கை சேகுவாரா” எனப்பட்ட விஜேவீராவின் மனைவி குழந்தைகள் , அதனையொத்த பலரின் வாழ்க்கை மீது ஒரு ஈர்ப்பினை ஏற்படுத்தும் . அவர்களின் துயரங்களும் சக மனிதர்களின் வாழ்வியல் துன்பங்களின் துயரங்களுக்கு எந்த விதத்திலும் குறைந்தவையல்ல !