இலங்கையில் நல்லாட்சி, மனித உரிமை விவகாரங்களில் புதிய அரசுக்கு உதவத் தயாராக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்தது.
அமெரிக்காவின் வெளியுறவுத் துறை துணை அமைச்சர் நிஷா தேசாய் பிஸ்வால் இரண்டு நாள் பயணமாக இலங்கை வந்துள்ளார். இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீர அவரை திங்கள்கிழமை சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
இதையடுத்து, நிஷா தேசாய் பிஸ்வால் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, இலங்கையின் புதிய அரசுடன் நல்லுறவு ஏற்படுத்தவே தான் வந்திருப்பதாகத் தெரிவித்தார்.
இலங்கையின் வளர்ச்சிக்கு உதவும் உற்ற துணையாக அமெரிக்கா திகழும் எனவும் நல்லாட்சி, மனித உரிமை விவகாரங்களில் உதவ அமெரிக்கா தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
செய்தியாளர்கள் சந்திப்பின்போது இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீர உடனிருந்தார். அவர் கூறுகையில், பல்வேறு விவகாரங்களில் அமெரிக்காவுடன் நெருங்கிச் செயல்பட இலங்கை விரும்புவதாகக் கூறினார்.
முன்னாள் அதிபர் ராஜபட்சவின் ஆட்சியின்போது, இலங்கை-அமெரிக்க உறவு மோசமடைந்தது.
மனித உரிமை மீறல் தொடர்பாக, 2012-ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கு எதிராக 3 தீர்மானங்களை அமெரிக்கா கொண்டு வந்துள்ளது என்பது நினைவுகூரத் தக்கது.
அதே வேளையில, ஆட்சி மாறினாலும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய விவகாரத்தில் இலங்கையின் கொள்கையில் மாற்றமில்லை என்று புதிய அரசு தெரிவித்துள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிப்பதில்லை என்ற முந்தைய ஆட்சியின் கொள்கையை தொடரும் என அதிபர் மைத்ரிபால சிறீசேனா தலைமையிலான புதிய ஆட்சியும் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.
Aucun commentaire:
Enregistrer un commentaire