dimanche 12 avril 2015

தூங்கிக்கொண்டிருந்த 20 தொழிலாளர்கள் சுட்டுக்கொலை

பாகிஸ்தானில் தூங்கிக்கொண்டிருந்த 20 தொழிலாளர்களை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது.

பலுசிஸ்தான்

பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணம், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளின் எல்லையில் அமைந்துள்ளது. ஏழ்மையான இந்த மாகாணம், தலீபான் தீவிரவாதிகள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள், ஆட்கடத்தல்காரர்கள் உள்ளிட்டவர்களின் சொர்க்கபுரியாக திகழ்ந்து வருகிறது.

இங்கு அவ்வப்போது தீவிரவாதிகள் அப்பாவி மக்களை கடத்துவதும், கொல்வதும், கியாஸ் ஆலைகள், ராணுவ சோதனை சாவடிகளில் தாக்குதல்கள் நடத்துவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.

தீவிரவாதிகள் வெறிச்செயல்

இந்த நிலையில் அங்குள்ள டுர்பாத் நகரில் இருந்து 15 கி.மீ. தொலைவில், காக்டன் என்ற இடத்தில் ஒரு பாலம் கட்டும் பணியில் சிந்து மாகாணத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தார்கள்.

நேற்று அதிகாலையில் அவர்கள் தங்கள் ஓய்விடத்தில் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த தீவிரவாதிகள் அவர்கள் மீது வெறித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு தப்பினர். சற்றும் எதிர்பாராத நிலையில் நடந்த இந்த தாக்குதல்களால் தொழிலாளர்கள் நிலை குலைந்து ஓலமிட்டனர்.

20 பேர் உயிரிழப்பு

ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்த தொழிலாளர்கள் உடனடியாக மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டனர். ஆனாலும், 20 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 3 தொழிலாளர்கள் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம், அந்த பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

திட்டமிட்ட சதி

இது குறித்து மாவட்ட போலீஸ் அதிகாரி இம்ரான் குரேஷி கூறும்போது, “இந்த தாக்குதல் சம்பவம், திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட தொழிலாளர்களுக்கு உடலில் பல இடங்களில் குண்டு காயங்கள் ஏற்பட்டுள்ளன” என கூறினார்.

இந்த தாக்குதலுக்கு எந்தவொரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. பலியானவர்களின் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. 

Aucun commentaire:

Enregistrer un commentaire