மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரினால் இலங்கை தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கை குறித்து, பாராளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் இலங்கை தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து இலங்கையின் முன்னாள் அரச தலைவர் என்ற வகையில் நான் கொண்டுள்ள நிலைப்பாட்டை மக்களுக்கு தெளிவுப்படுத்த விரும்புகிறேன்.
நடத்தப்பட்ட விசாரணைகளுக்கு எனது அரசாங்கத்தின் எவ்வித ஒத்துழைப்புகளும் கிடைக்கவில்லை. இதற்கு பல காரணங்கள் இருந்ததுடன் ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமை பேரவையின் நடைமுறைகளுக்கு புறம்பாக இந்த விசாரணை நடத்தப்பட்டமை இதில் பிரதான காரணமாகும்.
சம்பந்தப்பட்ட யோசனை ஐ.நா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட பின்னர், பேரவையின் தலைவரால் விசாரணை நடத்த மூன்று பேரை கொண்ட சுயாதீன குழுவை நியமிப்பதே இது சம்பந்தமான வழமையான நடைமுறையாகும்.
எனினும் இலங்கை தொடர்பில் அப்படியான சுயாதீன குழுவினால் விசாரணை நடத்தப்படவில்லை என்பதுடன் ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் இந்த விசாரணையை நடத்தியது. இவ்வாறான முறை நடந்துள்ளமை இதுவே முதல் சந்தர்ப்பமாகும்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்தின் சுயாதீனம் தொடர்பில் பிரச்சினைகள் உள்ளன.
இந்த அலுவலகத்தை நடத்தி செல்வதற்கான நிதி ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொது நிதியில் இருந்து வழங்கப்படுவதில்லை. பல்வேறு மேற்குலக நாடுகளிடம் இருந்த கிடைக்கும் நன்கொடைகள் மூலமே அலுவலகம் நடத்தி செல்லப்படுகிறது.
இந்த மேற்குலக நாடுகளே இலங்கைக்கு எதிரான யோசனையை மனித உரிமை பேரவையில் முன்வைத்தன. அத்துடன் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் பெரும்பாலான முக்கிய பதவிகளில் மேற்குலக நாடுகளை சேர்ந்தவர்கள் வகித்து வருகின்றனர். அத்துடன் அலுவலகத்தில் பணிப்புரியும் ஊழியர்களில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் மேற்குலக நாடுகளின் பிரஜைகளாவர்.
ஐ.நா மனித உரிமை பேரவையின் அனைத்து கூட்டத் தொடர்களிலும் ஆணையாளர் அலுவலகத்தின் பதவிகள் உலகின் ஏனைய பிராந்தியங்களுக்கும் பகிரப்பட வேண்டும் என்ற யோசனைகள் நிறைவேற்றப்பட்ட போதிலும் அந்த நிறுவனத்திற்குள் காணப்படும் மேற்குலக ஆதிக்கம் தொடர்ந்தும் இருந்து வருகிறது.
ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்தின் இந்த நிலைமை காரணமாக இலங்கை தொடர்பாக சுயாதீனமான விசாரணையை எந்த விதத்திலும் எதிர்பார்க்க முடியாது.
2014 ஆம் ஆண்டு இந்த விசாரணை நடத்த கொண்டு வரப்பட்ட யோசனை தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய பாகிஸ்தான் பிரதிநிதி சமீர் அக்ரம், “ஆத்ம கௌரவம் இருக்கும் எந்த நாடும்” இந்த யோசனையில் கூறப்பட்டுள்ள “தலையீடுகளுக்கு” இணங்காது என கூறியிருந்தார்.
மனித உரிமை சம்பந்தமான ஆணையாளரின் அலுவலகத்திற்கு நிதி கிடைக்கும் விதம் பற்றி கேள்வி எழுப்பிய அவர்,
இலங்கைக்கு எதிராக யோசனை நிறைவேற்றிய நாடுகளின் செல்வந்தர்களிடம் இருந்தே விசாரணைகளுக்கான நிதி கிடைக்குமாயின் அதன் ஆரம்பமே சந்தேகத்திற்கிடமானது என அக்ரம் மேலும் கூறியிருந்தார்.
அதேவேளை தேசிய இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இவ்வாறு நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடக் கூடாது என மனித உரிமை பேரவைக்கான இந்திய பிரதிநிதி திலிப் சிங்ஹா கூறியிருந்துடன் பேச்சுவார்த்தை மற்றும் இணக்க நடைமுறையே இங்கு தேவைப்படுகிறது எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்தியாவும் இந்த விசாரணையை எதிர்த்தது. இந்த யோசனைக்கு பின்னால் இருந்த பலமிக்க மேற்குலக நாடுகள் எவ்வாறான அழுத்தங்களை கொடுத்த போதிலும் மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்கும் 47 நாடுகளில் 23 நாடுகளே யோசனைக்கு ஆதரவு வழங்கின. இவ்வாறான பின்னணியிலேயே இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்துள்ளதன் காரணமாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் அறிக்கையில் “காரம் குறைக்கப்பட்டு”ள்ளது என சிலர் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
2014 ஆம் மார்ச் மாதம் 27 ஆம் திகதி மனித உரிமை பேரவையில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான யோசனை தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய பாகிஸ்தான் பிரதிநிதி அக்ரம்,
“ இந்த யோசனை மனித உரிமை தொடர்பான பிரச்சினையல்ல அரசியல் தொடர்பான பிரச்சினை” என சுட்டிக்காட்டியமையாது நாம் கேட்கும் இந்த பிரசாரங்கள் மூலம் உறுதியாகியுள்ளது.
எவ்வாறாயின் அறிக்கையில் காரம் குறைக்கப்பட்டுள்ளதாக எனக்கு புலப்படவில்லை. இவ்வாறான விசாரணை மூலம் போர் குற்ற விசாரணை நீதிமன்றம் ஒன்றை ஸ்தாபிக்குமாறு யோசனை முன்வைக்க மாத்திரமே முடியும்.
அறிக்கையில் அவ்வாறான யோசனையை முன்வைத்துள்ளதன் மூலம் அவர்கள் செல்ல வேண்டிய தூரத்திற்கு சென்றுள்ளதை காணமுடிகிறது.
ஐ.நா மனித உரிமை பேரவைக்கோ, ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்திற்கோ சர்வதேச போர் குற்ற நீதிமன்றத்தை ஸ்தாபிக்க முடியாது. ஐ.நா பாதுகாப்புச் சபைக்கு மாத்திரமே அந்த அதிகாரம் உள்ளது.
ஐ.நா பாதுகாப்புச் சபையில் சீனா,ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இருக்கும் வீட்டோ அதிகாரம் பிரச்சினையாக அமையலாம். நெதர்லாந்தின் ஹேக் நகரில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் என்ற பெயரில் நிரந்தர போர்க்குற்ற நீதிமன்றம் இருந்த போதிலும் அந்த நீதிமன்றம் தொடர்பான ரோம் இணக்கப்பாட்டில் இலங்கை கையெழுத்திடவில்லை என்பதால், அந்த நீதிமன்றத்தில் இலங்கைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடியாது.
போர்க்குற்ற நீதிமன்றத்தை ஏற்படுத்தும் மூன்றாவது இறுதியுமான முறை, சம்பந்தப்பட்ட நாட்டின் அரசாங்கம், ஐக்கிய நாடுகள் அமைப்புடன் கலப்பு நீதிமன்றத்தை ஏற்படுத்த இணங்குவதாகும்.
இதனடிப்படையிலேயே போர் குற்ற நீதிமன்றத்தை ஏற்படுத்தும் ஒரே ஒரு செயற்பாட்டு ரீதியான முறைக்கு அமைய ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் தனது அறிக்கையில் அவ்வாறான நீதிமன்றத்தை ஏற்படுத்த பரிந்துரை செய்துள்ளது. இதன் மூலம் இந்த அறிக்கையில் காரம் குறைக்கப்படவில்லை என்பது அனைவருக்கும் தெளிவாகியுள்ளது.
அறிக்கையில் சம்பவங்களுடன் தொடர்புடைய எவரது பெயரும் குறிப்பிடப்படாததன் மூலம் அதன் காரம் குறைக்கப்பட்டுள்ளது என்பதை சாட்சியமாக சிலர் சுட்டிக்காட்டுகின்றனர்.
நடந்ததாக கூறப்படும் சம்பவங்களை ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்தினால் உறுதிப்படுத்த முடியாத காரணத்தினாலேயே சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எவரது பெயரையும் குறிப்பிட முடியாது போயுள்ளது.
அறிக்கையில் சரியான சம்பவங்கள் தொடர்பில் எவரது பெயரும் குறிப்பிடப்படாவிட்டாலும் போர் குற்றங்களுக்கு பொறுப்புக் கூறவேண்டும் என்று உணர்த்தும் விதமாக அறிக்கையில் வேறு ஒரு இடத்தில் பாதுகாப்பு படை அதிகாரிகள் மற்றும் இராணுவ பிரிவுகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாக அரசியல் ஆய்வாளரான டி.பி.எஸ். ஜெயராஜ் சுட்டிக்காட்டியுள்ளார்.
அறிக்கை எண்ணியதை விட கெடுதியானது அல்ல என சிலர் கூறினாலும் அது குறித்து நான் வேறு நிலைப்பாட்டை கொண்டுள்ளேன்.
அறிக்கையில் காரம் குறைக்கப்பட்டுள்ளதால், நாட்டின் படையினர் வெளிநாடுகளில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டின் அடிப்படையில் சிறையில் அடைக்கப்படும் ஆபத்து இல்லை என சில அமைச்சர்கள் கூறினாலும் உண்மை நிலைமை இதற்கு மாறானது.
இலங்கை படையினரை வெளிநாடுகளில் கைது செய்து வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்ற பரிந்துரை அறிக்கையின் 252 பக்கத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அறிக்கை தொடர்பான உண்மையை மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டியது முக்கியமானது.
ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட்டிருக்காவிட்டால், அறிக்கையை பயன்படுத்தி இலங்கைக்கு எதிராக பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டிருக்கலாம் என சிலர் கூறுகின்றனர்.
ஆனால், ஐ.நா மனித உரிமை பேரவைக்கோ, ஐ.நா மனிதஉரிமை ஆணையாளரின் அலுவலகத்திற்கோ பொருளாதார தடைகளை விதிக்க முடியாது. அப்படியான அதிகாரம் ஐ.நா பாதுகாப்புச் சபைக்கு மாத்திரமே உள்ளது.
உலக அமைதிக்கு குந்தகம் ஏற்படக் கூடிய பாரதூரமான நிலைமையின் போது அல்லாமல்,பாதுகாப்புச் சபை எந்த நாட்டுக்கு எதிராகவும் பொருளாதார தடைகளை விதிக்காது.
எந்த நாட்டுடன் தொடர்புகளை வைத்து கொள்ள வேண்டும் என்று சுதந்திரமாக தீர்மானிக்கும் உரிமை நாடுகளுக்கு உள்ளது. இதனால், அமெரிக்காவும் ஐரோப்பாவும் எமக்கு எதிராக எந்த சந்தர்ப்பத்திலும் ஒரு தலைப்பட்சமான பொருளாதார தடைகளை விதிக்க முடியும்.
அதற்காக அறிக்கை வெளியிடப்படும் வரை காத்திருக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை. பொருளாதார தடைகளுக்கு உள்ளாகும் நாட்டு மக்களுக்கும் பொருளாதார தடைகளை விதிக்கும் நாடுகளும் இடையில் நிரந்தர பகை ஏற்படும் என்பதால்,
அப்படியான தீர்மானத்தை எடுப்பதில் எப்படியான பலமிக்க நாடாக இருந்தாலும் தீர்மானத்தை எடுப்பதில் மிகவும் கவனமாக இருக்கும். எனது ஆட்சிக்காலத்தில் இலங்கைக்கு எதிராக தன்னிச்சையாக தடைகள் குறித்து எவ்வித அச்சுறுத்தலும் எந்த சந்தர்ப்பத்திலும் ஏற்பட்டதில்லை என்பதை கூறவேண்டும்.
எனது அரசாங்கத்துக்கும் சில மேற்குலக நாடுகளுக்கும் இடையில், ஓரளவு முரண்பாடுகள் இருந்தது என்பது உண்மையே. எனினும் எமது பிரச்சினையை புரிந்து கொண்ட முக்கியமான தலைவர்களும் மேற்குலக நாடுகளில் இருந்தனர்.
ஜோன் கெரி அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகார தொடர்புகள் சம்பந்தமான குழுவின் தலைவராக இருந்த போது, ஒபாமாவின் அரசாங்கம், மனித உரிமை பிரச்சினைகளுக்கு மாத்திரம் தன்னை மட்டுப்படுத்திக்கொள்ளாது,
அதற்கு மேல் பொருளாதார, அரசியல் மற்றும் பாதுகாப்பு விடயங்களை முன்னிலைப்படுத்தி, இலங்கையுடன் உறவுகளை அதிகரிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். ஜோன் கெரி,
2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், “இலங்கையின் போருக்கு பின் அமெரிக்காவின் வழிமுறைகளை மாற்றுதல்” என்ற தலைப்பில் அமெரிக்க அரசாங்கத்திடம் விசேட அறிக்கை ஒன்றை வழங்கியிருந்தார்.
போர் நடைபெற்ற காலத்தில் அமெரிக்காவும் இலங்கையும் மிகவும் நட்புறவுடன் பாதுகாப்பு தகவல்களை பரிமாறிக்கொண்டன. அமெரிக்க குடியரசு கட்சியின் அரசாங்கம், இலங்கை தொடர்பில் ஓரளவு மாறுப்பாடான கொள்கையை கொண்டிருந்தது.
சர்வதேச உறவுகள் என்பது மனித உரிமைகளை பற்றி மாத்திரம் பேசுவதல்ல. அரசாங்கம் மேற்கொள்ளும் கொள்வனவுகள், வழங்கும் ஒப்பந்தங்கள், முதலீட்டு சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக்கொடுத்தல் போன்ற விடயங்கள் மனித உரிமை பிரச்சினைகளை விட சர்வதேச உறவுகளுக்கு வழிவகுக்கும்.
இதனால், எனது அரசாங்கம் ஆட்சியில் இருந்தால், அறிக்கை வெளியிடப்பட்டதும் பொருளாதார தடை விதிக்கப்படும் என கூறும் கதையை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.
நான் ஆட்சியில் இருந்த காலத்தில், பங்குச் சந்தையிலும் இலங்கையின் நீண்டகால திறைசேரி முறிகளிலும் அமெரிக்காவும் ஐரோப்பாவுமே அதிகளவில் முதலீடு செய்தது. நான் ஆட்சியை இழந்த பின்னரே, இந்த முதலீட்டாளர்களை தமது பணத்தை திரும்ப எடுத்துச் செல்ல ஆரம்பித்தனர்.
மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக ஆட்சியாளர்கள் சில சந்தர்ப்பங்களில், பலமிக்க நாடுகள் கூறுவதற்கு எதிராக செல்ல நேரிடும்.
1952 ஆம் ஆண்டு பிரதமர் டட்லி சேனாநாயக்க, சீனாவுடன் இறப்பர் – அரிசி உடன்படிக்கையை கையெழுத்திட்ட சந்தர்ப்பத்தில், அமெரிக்கா, சீனா கம்யூனிஸ்ட் அரசாங்கத்திற்கு எதிராக பொருளாதார தடைகளை விதித்திருந்ததுடன் தடைசெய்யப்பட்டவற்றில் இறப்பரும் அடங்கியது.
எனினும் இலங்கை மக்களுக்கு அரிசி தேவை என்பதால், அமெரிக்காவின் தடையை மீறி, பிரதமர் டட்லி சேனாநாயக்க, சீனாவுக்கு இறப்பரை ஏற்றுமதி செய்தார். இதே விதமாக பயங்கரவாதத்தை தோற்கடித்து நாட்டிற்கு சமாதானத்தை கொண்டு வருவதற்காக சில நாடுகள் கூறுவதை செவிமடுக்காது செயற்பட நேரிட்டது.
ஏதோ ஒரு விதத்தில் எனது ஆட்சிக்காலத்தில் அமெரிக்காவும் ஐரோப்பாவும் இலங்கைக்கு எதிராக ஒரு தலைப்பட்சமாக பொருளாதார தடைகளை விதித்திருந்தால், அதனை எனது அரசாங்கம் எதிர்நோக்க நடவடிக்கை எடுத்திருக்கும்.
ஐரோப்பாவில் உள்ள பலமிக்க தமிழீழ குழுக்களின் அழுத்தங்கள் காரணமாக ஐரோப்பிய ஒன்றியம் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை நிறுத்திய போதிலும் வருடந்தோறும் ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஆடை உற்பத்திகள் அதிகரித்தனவே அன்றி குறையவில்லை.
1930 ஆம் ஆண்டுகளுக்கு பின்னர், உலகில் கடும் பொருளாதார நெருக்கடி 2008 ஆம் 2009 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்டது.
எனினும் இலங்கையில் அவ்வாறான பிரச்சினை இருப்பதாக மக்கள் உணராதபடி எனது அரசாங்கம் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது. எனது அரசாங்கத்தின் பொருளாதார முகாமைத்துவம் குறித்து நான் உண்மையாக பெறுமையடைகிறேன்.
இந்த நிலையில், மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் அறிக்கையில் அடங்கியுள்ள பாரதூரமான பிரச்சினைகளுக்குரியது.
நடந்ததாக கூறப்படும் போர் குற்றங்களை விசாரிக்க வெளிநாட்டு நீதிபதிகளின், சட்ட வல்லுநர்கள், விசாரணை அதிகாரிகளின் பங்களிப்புடன் ஸ்தாபிக்கப்பட வேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்டுள்ள கலப்பு நீதிமன்றத்தை ஏற்படுத்தக் கூடாது.
பாதுகாப்பு படைகளின் சில உறுப்பினர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் இருந்தால், அந்த குற்றச்சாட்டுக்கள், இலங்கையில் நடைமுறையில் உள்ள சட்டம், நீதிமன்ற கட்டமைப்பின் கீழ் எமது நீதிபதிகள் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் மாத்திரமே விசாரிக்கப்பட வேண்டும்.
எமது வீர தீர படையினர் தமது உயிர்களை பணயம் வைத்து நாட்டை பயங்கரவாதத்தில் இருந்து மீட்க செய்த அர்ப்பணிப்பை நாம் நினைவுக்கூறவேண்டும்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் அலுவலகத்தின் இலங்கைக்கான நிரந்திர பிரதிநிதியை நியமித்து மனித உரிமை நிலைமையை கண்காணிக்க வேண்டும் என முன்வைக்கப்பட்டுள்ள யோசனை அர்த்தமற்றது என்பதே எனது உணர்வாகும்.
நாட்டில் அமைதியை ஏற்படுத்தி 6 வருடங்கள் கடந்துள்ள நிலையில், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் இல்லாத சூழ்நிலையில், இலங்கையில் இவ்வாறான அர்த்தமற்றது என்பது எனது நிலைப்பாடு.
இலங்கையில் வழக்காடி தீர்ப்பு வழங்கக் கூடிய வகையில், ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவிற்கு அதிகாரத்தை வழங்கக்கூடிய விதத்தில், இலங்கையின் உயர்நீதிமன்றத்தை இணங்க வைக்க அழுத்தம் கொடுக்கும் யோசனையும் உள்ளது.
இலங்கை பிரித்தானிய முடியாட்சியின் கீழ் டொமினிக்கன் குடியரசாக இருந்த போது, பிரித்தானியாவின் சட்டத்தரணிகள் சங்கம் இலங்கையில் வழக்காடுவதற்கான இவ்வாறான உரிமை இருந்தது. இலங்கை தற்போது சுதந்திரமான நாடு என்பதால், அப்படியான வேலைத்திட்டம் ஒன்றினால், பிரயோசனம் இல்லை.
மனித உரிமை மீறல்களுடன் சம்பந்தப்பட்டுள்ள சந்தேகிக்கப்படும் பாதுகாப்பு படை அதிகாரிகளை பதவியில் இருந்து நீக்குவதற்கான உரிய வேலைத்திட்டம் ஒன்றை இலங்கை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும் எனவும் மனித உரிமை ஆணையாளர் அலுவலத்தின் அறிக்கையில், 250 பக்கத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
உறுதிப்படுத்தாத குற்றச்சாட்டு அல்லது சந்தேகத்தின் அடிப்படையில் எவரையும் பதவிகளில் இருந்து நீக்கக் கூடாது.
போர் இறுதிக்கட்ட நடவடிக்கை நிறுத்த முயற்சித்து தோல்வியடைந்த தரப்பினரே இந்த யோசனையை முன்வைத்துள்ளனர் என்பதை அரசாங்கம் நினைவில்கொள்ள வேண்டும்.
பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் மக்கள் பாதுகாப்பு தொடர்பான கட்டளைச் சட்டங்களை முற்றாக இரத்துச் செய்து விட்டு, சர்வதேச சட்டத்திற்கு இணங்க புதிய பாதுகாப்புச் சட்டம் உருவாக்கப்பட வேண்டும் எனவும் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தினால், இலங்கை ஒரு நாடாக இருக்க முடியாது போகும். அத்துடன் சுதந்திரமான நாடு ஒன்று தனக்குள்ள அச்சுறுத்தல்களுக்கு அமையவே பாதுகாப்பு சம்பந்தமான சட்டத்தை உருவாக்க வேண்டுமே அன்றி,
பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் சம்பந்தமில்லாத சர்வதேச அமைப்புகளின் பரிந்துரைகளுக்கு அமைய அல்ல.
எனது அரசாங்கத்தினால், நியமிக்கப்பட்ட காணாமல் போனவர்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு சேர் டெஸ்மன்ட் டி சில்வா, சேர் ஜெப்ரி நைஸ், ரொட்னி டிக்சன், டேவிட் கிரோன் மற்றும் போல் நிவ்டன் ஆகிய சர்வதேச சட்ட அறிஞர்கள் போர் சட்டம் தொடர்பில் வழங்கிய சட்ட ஆலோசனைகள் பற்றிய கடிதங்களை ஆராய்ந்து அவற்றை ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவில் சமர்ப்பிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.
சேர் டொஸ்மன் டி சில்வா, அண்மையில், காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு வழங்கிய விபரமான அறிக்கை இங்கு முக்கியமானது.
அத்துடன் அரசாங்கம் மனித உரிமை ஆணைக்குழுவிற்கு அனுப்பும் பதில் அறிக்கையில் அனைத்து சட்ட வல்லுநர்களின் கருத்துக்களும் உள்ளடக்கப்பட வேண்டும் என்பது எனது நிலைப்பாடு.
நடைபெற்று வரும் சகல விடயங்களையும் நான், 2009 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்துடன் கையெழுத்திட்ட கூட்டறிக்கையில் இணங்கிய விடயங்கள் எனக் கூறி,
இந்த வேலைத்திட்டங்களுக்கு மக்கள் மத்தியில் நல்லெண்ணத்தை ஏற்படுத்த சிலர் முயற்சித்து வருவதை காணமுடிகிறது. சர்வதேச சக்திகளுடன் ஒத்துழைப்புடன் செயற்படுவோர் தமது செயல்களை நியாயப்படுத்துவதற்காக மேற்கொள்ளும் நடவடிக்கையே அன்றி இது வேறு ஒன்றுமில்லை.
ஐ.நா செயலாளருடன் நான் கையெழுத்திட்ட கூட்டறிக்கையில், போர்க்குற்ற விசாரணை மற்றும் போர் குற்ற நீதிமன்றம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.
துயரங்களை கண்டறியவது தொடர்பான விடயத்தை மாத்திரமே இலங்கை அரசாங்கம், அந்த கூட்டறிக்கையின் ஊடாக ஏற்றுக்கொண்டிருந்தது.
வடக்கில் அபிவிருத்தியை துரிதப்படுத்துவது, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தேர்தலை நடத்துவது, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஏற்படுத்துவது,
காணாமல் போனோர் தொடர்பான ஆணைக்குழுவை ஏற்படுத்துவது ஆகியன துயரங்களை போக்குவதற்கான நாங்கள் எடுத்த நடவடிக்கையாகும்.
2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்த விசாரணைக்கு வழிவகுத்த யோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்து மனித உரிமை பேரவையில் உரையாற்றிய இந்திய, கியூபா, பாகிஸ்தான் பிரதிநிதிகள், அமெரிக்கா முன்வைத்துள்ள இந்த யோசனையானது,
இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான முன் ஏற்பாடாக அமைந்துள்ள கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு போன்ற கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளமை,
முற்றாக கவனத்தில் கொள்ள தவறியுள்ளதாக கூறியிருந்தனர். ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலத்தின் விசாரணைகளை இந்த நாடுகள் எதிர்க்க இது காரணமாக அமைந்தது.
மேற்குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் காரணமாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என நான் இலங்கை அரசாங்கத்திற்கு யோசனை முன்வைக்கின்றேன்.