மதுரா மோதல்
உத்தரபிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தின் ஜவகர்பாத் பகுதியில் 260 ஏக்கர் நிலபரப்பு கொண்ட பூங்காவை ”சத்தியாக்கிரகிகள்” என்று தங்களை அழைத்துக் கொள்பவர்கள் கடந்த 2 வருடமாக ஆக்கிரமித்து கொண்டனர். இதனை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. சட்டவிரோதமாக ஆக்கிரமித்தவர்களை வெளியேற்ற அலகாபாத் கோர்ட்டு உத்தரவிட்டது. ஐகோர்ட்டு உத்தரவு இருப்பினும் ஆக்கிரமிப்பாளர்களை வெறியேற்றுவதில் போலீசார் தோல்வியை தழுவினர்.
பூங்காவை சட்டவிரோதமாக ஆக்கிரமித்தவர்களை நேற்று போலீசார் வெளியேற்ற முயற்சி செய்தபோது மோதல் வெடித்தது.
சம்பவ இடத்திற்கு போலீசார் சென்றதும் ஆக்கிரமிப்பாளர்கள் அவர்கள் மீது கற்களை வீசினர், துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டனர். இதனையடுத்து பதிலடி கொடுக்கும் விதமாக போலீசார் கண்ணீர் புகைக்குண்டை வீசினர், மற்றும் தடியடி நடத்தினர். ”சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து நாட்டு துப்பாக்கிகள் மற்றும் கைத்துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டு உள்ளது,” என்று போலீஸ் அதிகாரி சவுத்ரி கூறிஉள்ளார். மோதலில் 2 போலீசார் மற்றும் 12 ஆக்கிரமிப்பாளர்கள் உயிரிழந்து உள்ளனர் என்று கூறப்பட்டது. 100-க்கும் பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மோதல் வெடித்த பகுதியில் கையெறி குண்டுகள் மற்றும் எல்பிஜி சிலிண்டர்கள் வெடித்ததால் குடிசைகள் தீப்பிடித்து எரிந்தது. தீ காயம் அடைந்தவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
21 ஆக உயர்வு
இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் சிலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளனர். சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்து உள்ளது.
இதற்கிடையே மோதல் சம்பவத்தில் 25 பேர் வரையில் உயிரிழந்து உள்ளனர் என்று அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகிஉள்ளன.
வன்முறையில் ஈடுபட்ட ஆக்கிரமிப்பாளர்களை போலீஸ் படை வலைவீசி தேடிவருகிறது. இதுதொடர்பாக இதுவரையில் போலீஸ் 374 பேரை கைது செய்து விசாரித்து வருகிறது.
அகிலேஷ் விசாரணைக்கு உத்தரவு
இச்சம்பவத்திற்கு வேதனையை வெளிப்படுத்தி உள்ள மாநில முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் உயிரிழந்த இரண்டு போலீசார் குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம் உதவி தொகை வழங்கப்படும் என்று அறிவித்து உள்ளார்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிலையை கட்டுக்குள் கொண்டு வருமாறு மாநில போலீஸ் கூடுதல் டைரக்டர் ஜெனரல் சவுத்ரிக்கு (சட்டம் மற்றும் ஒழுங்கு) அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டார். இதுதொடர்பாக விசாரணைக்கும் அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டு உள்ளார். மாஜிஸ்திரேட் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
ராஜ்நாத் சிங் உறுதி
மதுரா மோதல் தொடர்பாக அம்மாநில முதல்-மந்திரி அகிலேஷ் யாதவுடன் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பேசிஉள்ளார்.
ராஜ்நாத் சிங் பேசுகையில், “உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி அகிலேஷ் யாதவுடன் பேசினேன். மதுராவில் தற்போதையை நிலையை கேட்டறிந்தேன். மத்திய அரசிடம் இருந்து சாத்தியமான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தேன்,” மதுரா சம்பவத்தினால் ஏற்பட்ட உயிரிழப்பினால் நான் மிகவும் வேதனை அடைந்து உள்ளேன். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு கடவுள் வலிமையை கொடுப்பார்.” என்று கூறிஉள்ளார்.
இதற்கிடையே மத்திய பிரதேச மாநில எண் அடங்கிய பலகையை தாங்கிய வாகனங்கள் அப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது என்று அதிகாரிகள் தரப்பு தகவல்கள் வெளியாகிஉள்ளது.
Aucun commentaire:
Enregistrer un commentaire