மலவாளிகள் அகற்றும் தொழிலாளர்கள், அல்க்மார், நெதர்லாந்து, 1954 |
ஐரோப்பியர்கள் காலங் காலமாகவே மலம் கழித்த பின்னர், கடதாசியால் துடைத்து வந்தார்களா? சில நூறு வருடங்களுக்கு முன்னர், ஐரோப்பாவில் மன்னர் முதல் குடியானவன் வரையில் தண்ணீரால் தான் கழுவி வந்தார்கள். ஐரோப்பிய மன்னர்கள் மலம் கழிக்கும் பெட்டி ஒன்றை தம்முடன் கூடவே வைத்திருந்தனர்.
மன்னர் அரசவையில் அமர்ந்திருக்கும் பொழுது சிம்மாசனத்தின் கீழே மலம் கழிக்கும் பெட்டி இருக்கும். அதுவும் மன்னர் போகும் இடமெல்லாம் கூடவே போகும். அதை பராமரிப்பதற்கு ஓர் ஆள் இருப்பார். மன்னர் தனது கடமையை முடித்த பின்னர், பெட்டிக்கு உள்ளே இருக்கும் மலச் சட்டியை அப்புறப் படுத்துவதுடன், தண்ணீர் ஊற்றி மன்னரின் குண்டியை கழுவி விடுவதுடன், ஈரத் துணியால் துடைத்து விடுவது அவரது வேலை.
மன்னரை எல்லோரும் தொட முடியாது. ஆகையினால், பிரபுக்கள் குலத்தை சேர்ந்த ஒருவர் தான் மன்னருக்கு குண்டி கழுவும் வேலைக்கு அமர்த்தப் படுவார்கள். அந்தக் காலங்களில், இந்த "கௌரவமான குண்டி கழுவும் வேலைக்கு" ஏராளமானோர் வரிசையில் நின்றார்கள்!
மலம் அள்ளும் தொழில் செய்வோர் ஐரோப்பிய நகரங்களிலும் இருந்தனர். தொழிற்புரட்சி காரணமாக, ஐரோப்பிய நகரங்களில் சனத்தொகை பெருகியது. மாடி வீடுகள் நெருக்கமாக கட்டப் பட்டன. குடிசனப் பெருக்கம் காரணமாக, தெருக்கள், நீர்நிலைகளிலும் மலம் தேங்கி நாற்றமெடுத்தது.
அந்தக் காலங்களில் தற்போதுள்ள மாதிரி WC (Water Closet) என்ற நவீன கழிவறைகள் இருக்கவில்லை. ஒவ்வொரு வீட்டிலும் இருந்து மனிதக் கழிவுகள் நிரம்பிய வாளிகளை அகற்ற வேண்டியிருந்தது. அந்த வேலை செய்வதற்கு ஆட்கள் இருந்தார்கள்.
நெதர்லாந்து நாட்டில், அல்க்மார் நகரில், வீடுகளில் இருந்து மல வாளிகளை வண்டியில் எடுத்துச் செல்லும் படம் ஒன்று, சரித்திரம் தொடர்பான சஞ்சிகையில் பிரசுரமானது (Historie, nr.4 - 2015). 1954 ம் ஆண்டில் கூட எல்லா இடங்களிலும் நவீன கழிவறைகள் வந்திருக்கவில்லை என்ற உண்மை அந்த ஆவணப் படத்தில் இருந்து தெரிய வருகின்றது.
இன்றைய நவீன யுகத்தில், 21 ம் நூற்றாண்டிலும், கையால் மலம் அள்ளும் தொழிலாளர்கள் இந்தியாவைத் தவிர வேறெந்த நாட்டிலும் இருப்பதாக நான் அறியவில்லை. பெரிய நகரங்களில் கூட, வாளி வாளியாக மலம் நிரப்பிச் செல்லும் தொழிலாளர்களை இந்தியாவில் மட்டுமே கண்டிருக்கிறேன். 21 ஆம் நூற்றாண்டிலும் மலம் அள்ளுவதற்கு மனிதர்கள் இருப்பது, பெரும்பான்மை மக்களின் கண்களை உறுத்தவில்லை. இந்தியாவில் பலர் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள்.
இந்தியாவில் எல்லா சமூகக் குறைபாடுகளுக்கும், அரசியல்வாதிகள் தலையில் பழி சுமத்தி விடுவது எளிதானது. இந்திய அரசியல்வாதிகள் ஊழலில் மலிந்தவர்கள் தான். ஆனால், பாகிஸ்தான் முதல் இந்தோனேசியா வரையில் பல ஆசிய நாடுகளில், என்ன வாழ்கிறதாம்? அங்கேயும் ஊழல் மய அரசியல்வாதிகளுக்கு குறைவில்லை.
அயலில் உள்ள இலங்கையை பற்றி இங்கே கூறத் தேவையில்லை. ஆனால், அங்கே கூட மலம் அள்ளும் தொழிலாளர் யாரும் இல்லை. நகரம் முதல் கிராமம் வரையில் கட்டப்பட்டுள்ள எந்த மலசல கூடமும், மனிதர்களால் கழிவு அகற்றப்படும் வகையில் அமைக்கப் படவில்லை. Water Closet அல்லது அது மாதிரியான கழிவறைகள் எல்லா இடங்களிலும் வந்து விட்டன.
இன்று வளர்ச்சி அடைந்துள்ள மேற்கத்திய நாடுகளில், 18 ஆம் நூற்றாண்டு வரையில், பெரிய நகரங்களில் வீதியோரங்களில் மலம் கழிப்பது சர்வசாதாரணமாக நடந்து கொண்டிருந்தது. 1775 ஆம் ஆண்டு தான், நவீன மலசலகூடமான Water Closet கண்டுபிடிக்கப் பட்டது.
இன்றைய இந்திய அரசியல் கட்சிகள், "கோயில்கள் கட்டுவதை விட மலசல கூடங்கள் கட்டுவது முக்கியமானது" என்று தேர்தல் காலத்தில் பிரச்சாரம் செய்கின்றன. ஆனால், மலசலகூடம் கட்டுவதற்கு அரசு ஒதுக்கும் நிதி, அதிகாரிகளின் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கிறது.
இந்தியாவில் இன்னமும் மலம் அள்ளும் தொழிலாளர்கள் இருப்பதற்கு முக்கிய காரணம், சாதிய கட்டுமானமானது மனிதர்களை மட்டுமல்லாது, அவர்களது உணர்ச்சிகளை கூட பிரித்து வைத்திருக்கிறது. மனிதக் கழிவுகளை அகற்றும் வேலையை செய்வது "யாரோ எவரோ....அவர்கள் எமது நண்பர்களோ, உறவினர்களோ அல்ல..." என்ற, அலட்சிய மனோபாவம் ஒரு முக்கிய காரணம்.
கையால் மலம் அள்ளும் சக மனிதனை, ஒரு இந்துவாகவோ, அல்லது ஒரு தமிழனாகவோ எண்ணி, சகோதர உணர்வுடன் பார்க்க விரும்பாத சமூகத்தில், இன, மத ஒற்றுமை பற்றிப் பேசி என்ன பிரயோசனம்?
Aucun commentaire:
Enregistrer un commentaire