பணிப்பெண்களாக இலங்கையிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றவர்களில் 463 பேர் கடந்த வருடத்தில் சடலங்களாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 300க்கும் அதிகமானோர் 30 வயதுக்கும் குறைவானவர்கள் என ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி.யான ரஞ்சன் ராமநாயக்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை அமர்வின் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் கேள்வியொன்றைத் தொடுத்து விளக்கமளிக்கையிலேயே அவர் மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,சட்டங்களும் கட்டுப்பாடுகளும் மீறப்பட்ட நிலையில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாக செல்வோர் அங்கு பல்வேறு கொடுமைகளையும் சித்திரவதைகளையும் அனுபவிக்கின்றனர்.
இதேவேளை, 2012ஆம் ஆண்டில் மாத்திரம் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து 463 பணிப்பெண்களின் சடலங்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 300க்கும் அதிகமானவை 30 வயதுக்கும் குறைவான பெண்களுடையதாகும். இவர்கள் மாரடைப்பின் காரணத்தினாலேயே மரணித்திருப்பதாகவும் கூறப்பட்டிருக்கின்றது
இவ்வாறு பணிப்பெண்களாக செல்வோர் உடலளவில் ஆரோக்கியமானவர்கள் என்ற மருத்துவ சான்றிதழும் வழங்கப்படுகின்றது. நிலைமை இவ்வாறிருக்கும் போது எப்படி இவ்வளவு பெரும் தொகையினர் மாரடைப்பால் மரணிக்க முடியும்?
இலங்கைக்கு அனுப்பிவைக்கப்படுகின்ற உடல்களில் காயங்கள் காணப்படுகின்ற அதேவேளை உடலின் சில உறுப்புகளும் இல்லாத நிலை காணப்படுகின்றது. எனவே, இது குறித்து உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அத்துடன், பணிப்பெண்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire