mardi 15 octobre 2013

தூத்துக்குடி கடல் பகுதியில் சுற்றிவளைக்கப்பட்ட அமெரிக்க நிறுவன கப்பல்

ship-usa
தூத்துக்குடி அருகே நடுக்கடலில் துப்பாக்கிகளுடன் சுற்றிவளைக்கப்பட்ட அமெரிக்க நிறுவன கப்பலில் இருந்தவர்கள் மீது 9 பிரிவுகளின் கீழ் போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் இருந்து ஏறத்தாழ 20 கடல் மைல் தொலைவில் இந்திய கடல்பகுதியில் சுற்றித் திரிந்த அமெரிக்க நாட்டில் உள்ள அட்வன்போர்டு என்ற தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான சீ மேன் கார்டு என்ற பாதுகாப்பு கப்பலை கடலோர காவல்  படையினர் கடந்த 12-ம் தேதி சுற்றி வளைத்தனர்.அந்தக் கப்பலில் 35 நவீன ரக துப்பாக்கிகளும், 25 பாதுகாப்பு வீரர்களும், 11 மாலுமிகளும் இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. இதற்கிடையே, தூத்துக்குடியில் உள்ள மீனவர்கள் சிலரிடம் இருந்து கப்பலில் உள்ளவர்கள் 1500 லிட்டர் டீசலை திருட்டுத் தனமாக பெற்றது கண்டறியப்பட்டதால் கப்பலை துறைமுகத்துக்கு அழைத்து வந்தனர்.இதையெடுத்து, கடலோர காவல் படை அதிகாரிகள், கடலோரா காவல் பாதுகாப்பு குழும (மரைன்) போலீஸப்ர், தூத்துக்குடி மாவட்ட போலீஸார் மற்றும் உளவுத் துறை போலீஸார் கப்பலில் உள்ளவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கப்பலில் உள்ள 36 பேரில் 11 பேர் இந்தியர்கள் என்றும் கடல் கொள்ளையர்களிடம் இருந்து பாதுகாப்பு அளிப்பது தொடர்பாக கொச்சி துறைமுகத்தில் கப்பல் உரிமையாளர்களிடம் விளக்கம் அளித்துவிட்டு திரும்பும்போது தவறுதலாக தூத்துக்குடி கடல் பகுதிக்குள் வந்துவிட்டதாகவும் கப்பலில் இருந்தவர்கள் போலீஸாரிடம் தெரிவித்து உள்ளனர்.இந்நிலையில், கப்பல் பிடிபட்டது குறித்து அமெரிக்காவில் உள்ள கப்பல் உரிமையாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் விமானம் மூலம் ஞாயிற்றுக்கிழமை தூத்துக்குடி வந்தார். அவரிடம் போலீஸார் மற்றும் கடலோர காவல் படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, பல்வேறு விதிமுறைகளை மீறியதாக கப்பலில் இருந்தவர்கள் மீது தூத்துக்குடி கடலோர காவல் பாதுகாப்பு குழும போலீஸார் இரண்டு சட்டத்தின் கீழ் 9 பிரிவுகளின் படி திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனர். இருப்பினும், கப்பலில் உள்ளவர்கள் யாரும் இதுவரை கரைக்கு கொண்டுவரப்படவில்லை. மன்னார் வளைகுடா பகுதியில் ஆயுதங்களுடன் செல்ல தடை என்ற 1878-ம் ஆண்டு சட்டத்தின் கீழும், அத்தியாவசியப் பொருள்களை திருட்டுத்தனமாக பெற்ற சட்டத்தின் கீழும் மொத்தம் 9 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.கப்பலில் உள்ளவர்கள் மீது குற்றவழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவர்கள் 36 பேரும் கைது செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது. இருப்பினும், இந்த விவகாரத்தில் எந்தவித உறுதியான முடிவையும் எடுக்க முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர்.

கப்பலில் உள்ளவர்களை கைது செய்யும் நடவடிக்கை மேற்கொண்டால் இருநாட்டு பிரச்னை என்பதால் உயர் அதிகாரிகளின் ஆலோசனைப்படி ஒவ்வொரு நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவதாக போலீஸார் தெரிவித்தனர். இதுதொடர்பாக, மத்திய, மாநில உளவுத் துறை போலீஸார், கடலோர காவல் படை அதிகாரிகள், கடலோர காவல் பாதுகாப்பு குழும போலீஸார் ஆகியோருடன் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மா. துரை தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.   

Aucun commentaire:

Enregistrer un commentaire