இமயமலைக் காடுகளில் நடமாடுவதாக ஆண்டாண்டு காலமாக நம்பப்பட்டுவரும் யெட்டி அல்லது பிக்ஃபூட் எனப்படும் இராட்சத பனிமனிதர்கள் உண்மையிலேயே விலங்குகள் தானா அல்லது அவை வெறும் கற்பனைத் தோற்றமா என்ற கேள்விகளுக்கு பிரிட்டன் விஞ்ஞானி ஒருவர் நவீன டிஎன்ஏ ஆய்வுகள் மூலம் விடை கண்டிருக்கிறார்.
இந்த இராட்சத பனிமனித விலங்கு துருவக்கரடியினதும் பழுப்புநிறக் கரடியினதும் கூட்டுக்கலவையில் உருவாகியிருக்க வேண்டும் என்று ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைக்கழக மரபணுத்துறை பேராசிரியர் பிரையன் சைக்ஸ் நம்புகிறார்.
'இந்தக் கரடியை இதுவரை எவரும் உயிருடன் பார்த்ததில்லை.. ஆனாலும் அவை உண்மையில் இருக்கக்கூடும். பெரும்பாலும் துருவக்கரடியின் மரபணுக்கள் தான் இந்த விலங்கில் அதிகளவில் இருக்க வேண்டும்' என்றார் பேராசிரியர் பிரையன் சைக்ஸ்.
வடக்கு இந்தியாவில் இமயமலைத் தொடரின் மேற்கே லடாக் பகுதியிலிருந்தும் கிழக்காக பூட்டானிலிருந்தும் கிடைத்த அடையாளம் உறுதிசெய்யப்படாத இரண்டு விலங்குகளின் மயிர்களைக் கொண்டே விஞ்ஞானி பிரையன் டிஎன்ஏ ஆய்வு நடத்தியுள்ளார்.
40 ஆயிரம் முதல் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்துக்குச் சொந்தமான நார்வேயிலிருந்து கிடைத்த போலார் பியர் என்ற துருவக் கரடியினத்தின் தாடை எலும்பின் மரபணுக்களுடன் ஒப்பிட்டு ஆராயப்பட்ட இந்த விலங்கு மயிர்களின் டிஎன்ஏ தரவுகள் 100 வீதம் ஒத்துப்போயுள்ளன.
இந்தியாவின் லடாக்கிலிருந்து கிடைத்த மயிர்கள் 40 ஆண்டுகளுக்கு முன்னர் வேட்டைக்காரர் ஒருவரால் சுட்டுக்கொல்லப்பட்ட விலங்கொன்றிலிருந்தே பெறப்பட்டவை. மற்ற விலங்கின் மயிர் 10 ஆண்டுகளுக்கு முன்னர் மூங்கில்காடுகளில் ஆய்வுப் படப் பிடிப்பில் ஈடுபட்டிருந்தவர்களிடமிருந்து கிடைத்தவை.
துருவக் கரடியின் வாரிசுகள்
'பழங்காலத்து துருவக் கரடியிலிருந்து ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் பிரிந்து உருவாகியதாக நம்பப்படும் பழுப்பு நிற கரடி வகையொன்றிலிருந்தே இந்த இமயமலை இராட்சதக் கரடிகளும் உருவாகியிருக்கக்கூடும்' என்ற கருத்துக்கு மரபணு நிபுணர் பிரையன் சைக்ஸ் வருகிறார்.
அல்லது அந்த பழங்காலத்து துருவக் கரடியின் வழிவந்த வாரிசுக்கும் பழுப்பு நிற கரடியினத்துக்கும் மிக அண்மையில் ஏற்பட்ட கலப்பில் இந்த இராட்சத விலங்குகள் பிறந்திருக்கக்கூடும் என்ற எடுகோளுக்கும் அவர் வருகிறார்.
இதன்படி, இமயமலையை அண்டிய மக்கள் மத்தியில் செவிவழி நம்பிக்கையில் நீண்டகாலமாக இருந்துவரும் இந்த இராட்சத பனிமனித விலங்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கரடியினத்தின் வாரிசு தான் என்ற உண்மை இப்போது தெரியவந்திருக்கிறது.
இதற்கிடையே 2008-ம் ஆண்டில், இந்த இராட்ச பனிமனிதனின் மயிர் என்று கூறி வடகிழக்கு இந்தியாவின் மேகாலய மாநிலத்திலிருந்து பிபிசிக்குக் கிடைத்த விலங்கு மயிர்களை அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வுக்குட்படுத்தியிருந்தனர்.
அது இமயமலைக் காடுகளில் வாழும் ஒருவகை ஆட்டினத்தின் மயிர் என்பதை விஞ்ஞானிகள் உறுதிசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
-
Aucun commentaire:
Enregistrer un commentaire