இலங்கை வடக்கு மாகாண முதல்வராக விக்கினேஸ்வரன், ஜனாதிபதி ராஜபக்ஷே முன்னிலையில் பதவியேற்க ரெடி. ஆனால், தமது அமைச்சர்கள் யார் என்று பாவம், அவருக்கே தெரியாது. முதல்வருக்கே தெரியாதபோது, வாக்களித்த மக்களுக்கு தெரிந்துவிடுமா? அவர்களுக்கும் தெரியாது!
மக்கள் சேவையில் ‘மர்ம அமைச்சர்கள்’
‘மர்ம அமைச்சர்கள்’ யார் என்று முடிவு செய்யும் ‘இறுதி’ ஆலோசனைக் கூட்டம், புதன்கிழமை நடந்தது. ‘இறுதியோ இறுதி’ ஆலோசனைக் கூட்டம், நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) கொழும்புவில் நடந்தது. அதில் அடிதடி.
அதன்பின் ‘இறுதி பிளஸ்’ ஆலோசனைக் கூட்டம் நேற்று (சனிக்கிழமை) நடந்தது. கலந்து கொண்ட தலைவர்கள், சட்டைதான் கிழியவில்லை என வெற்றிகரமாக தப்பித்து வெளியே வந்துவிட்டார்கள்.
‘இறுதி பிளஸ்’ ஆலோசனைக் கூட்டத்தின் பின் செய்தியாளர் ஒருவர் “அமைச்சர்கள் யார் என்பது பற்றிய இறுதி முடிவு எடுக்கப்பட்டதா?” என்று கேட்ட கேள்விக்கு பதிலளித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தர், “இறுதி என்ற சொல்லே அர்த்தமற்றது” என்றார்.
அத்துடன் நின்றுவிடாமல், “நாளை நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் ‘இறுதி’ முடிவு எடுப்பது என்பதில் உறுதியாக உள்ளேம்” என்று ‘அர்த்தமற்ற சொல்லை’ தமது பதிலில் சேர்த்துக் கொண்டார், இந்த அர்த்தமுள்ள தலைவர்.
இன்று உங்கள் அபிமான திரையரங்கில்..
இதையடுத்து, இன்று (ஞாயிற்றுக்கிழமை) ‘இறுதி சுப்ரீம்’ ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. திங்கட்கிழமை காலை, முதலமைச்சராக விக்கினேஸ்வரன் பதவியேற்கிறார். இன்றைய ‘இறுதி சுப்ரீம்’ ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்காவிட்டால், பதவியேற்கும் முதல்வர், தமது ‘மர்ம அமைச்சர்கள்’ யார் என்று தெரியாமலேயே பதவியேற்பார்.
அதன்பின் ஏதோ ஒரு நாளில், ‘இறுதி சுப்ரீம் பிளஸ்’ ஆலோசனைக் கூட்டம் நடைபெறும்.
இந்த விவகாரத்தில் உங்களுக்கு ஒரு குழப்பம் ஏற்பட்டிருக்கலாம். அந்த குழப்பம் என்னவென்றால், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு 30 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்கள். இவர்களில் 1 முதல்வர் போக, 29 பேரையும் அமைச்சர்கள் ஆக்கலாமே? ‘இடியாப்பம் தயாரிப்பு அமைச்சர்’, ‘இடிஅமீன் கொள்கை பரப்பு அமைச்சர்’ என இஷ்டத்துக்கு பதவி கொடுக்கலாமே?
அதுதான் முடியாது!
குணம் அறிந்துதான் குதிரைக்கு கொம்பு கொடுக்கல!
தமிழர் இனப்பிரச்னையை தீர்க்க 30 பேர் கடும் ஆவலில் இருப்பார்கள் என்பதை முன்கூட்டியே ஊகித்தோ, என்னவோ, “மாகாணசபைக்கு 4 அமைச்சர்கள்தான் நியமிக்கப்படலாம்” என இலங்கை அரசியலமைப்பு சட்டத்தில் எழுதி வைத்து விட்டார்கள். அதுதான் பெரிய சிக்கல். (அவசரப்பட்டு “சிங்கள ஏகாதிபத்திய சூழ்ச்சி” என்று சொல்லி விடாதீர்கள். தமிழ் மாகாணத்துக்கு மட்டுமல்ல, இலங்கையில் உள்ள 9 மாகாணங்களுக்கும் ஒரே சட்டம்தான்)முதல்வரை தேர்வு செய்த தமிழரசுக் கட்சி, கல்வி அமைச்சர் பதவிக்கு கிளிநொச்சியில் இருந்து தெரிவான குருகுலராஜாவையும், சுகாதார அமைச்சர் பதவிக்கு வவுனியாவில் இருந்து தெரிவான சத்தியலிங்கத்தையும் நியமிக்க விரும்புகிறது.
தலைவருக்கு எட்டாத (கிட்டாத) பேக்ஸ் எந்திரம்!
டெலோ இயக்கம் சார்பில் மன்னாரில் இருந்து தெரிவான குணசீலலை நியமிக்க அக்கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் விரும்புகிறார். ஆனால் பாவம், அவருக்கே தெரியாமல் அக்கட்சியினர் யாழ்ப்பாணத்தில் இருந்து தெரிவான சிவாஜிலிங்கத்தின் (பிரபாகரனின் தாயாரை இந்தியாவுக்கு அழைத்துவர முயற்சித்தவர்) பெயரை கட்சி சார்பில் பரிந்துரைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமைக்கு பேக்ஸ் அனுப்பி விட்டார்கள்.
இதையடுத்து தலைவர் செல்வம், “தலைவர் பதவியை ராஜினாமா செய்யப் போகிறேன்” என அறிவித்திருக்கிறார். ஒன்றில் இவர் ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது கட்சியின் பேக்ஸ் எந்திரத்தை கைப்பற்ற வேண்டும் என்பது அந்தக் கட்சிக்குள் உள்ள சிக்கல்.
புளொட் இயக்கம் சார்பில் அக்கட்சியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனின் பெயர் முன்வைக்கப்பட்டுள்ளது.
இயக்கமே குடும்பம்.. குடும்பமே இயக்கம்.. பாலிசி
ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தில் வேறு சிக்கல். கட்சித் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் (முன்னாள் மண்டையன் படையணி பிரதான தளபதி) இயக்கத்தை, குடும்பமாக கருதும் முற்போக்காளர். அதனால், குடும்பத்தையும் இயக்கமாக கருதி, தமது சகோதரர் சர்வேஸ்வரனுக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்கிறார்.
அதற்கு அவரது சொந்தக் கட்சிக்கு உள்ளேயே எதிர்ப்பு. இதனால் அக்கட்சி யாருடைய பெயரையும் பரிந்துரைக்கவில்லை. ஆனால், 1 அமைச்சு பதவி வேண்டும் என்று கேட்கிறது. பதவி கிடைத்ததும், அமைச்சரின் பெயரை பாக்கெட்டில் இருந்து எடுப்பாராம் தலைவர் சுரேஷ்!
இந்த நிலையில்தான், மர்ம அமைச்சர்களை தேர்ந்தெடுக்கும் ‘இறுதி சுப்ரீம்’ ஆலோசனைக் கூட்டம் இன்று பகல் நடைபெறவுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டங்களுக்கு டீ, வடை சப்ளை செய்யும் கான்ட்ராக்ட் எடுத்தாலே, கோடீஸ்வரர் ஆகிவிடலாம் போலிருக்கிறது…
முதலில் இந்த தமிழர் பிரதிநிதிகள் தமது கட்சிக்குள் அதிகாரத்தை பகிரட்டும். அப்புறம் இலங்கைக்குள் அதிகாரத்தை பகிர ஆலோசிக்கலாம். ஐயாமாருங்க முதலில் கூரை ஏறி கோழி புடிக்கட்டும், அப்புறம் வானம் ஏறி வைகுண்டம் போகலாம். நன்றி விறுவிறுப்பு
Aucun commentaire:
Enregistrer un commentaire