இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் நடந்த ஆயுத மோதல்களில் நிகழ்ந்த பாரதூரமான மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்கவிருக்கும் இந்த நீதிவிசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகளைப் பயன்படுத்திக் கொள்ளும்படியும் இந்த தீர்மானம் கூறுகிறது.
47 உறுப்பு நாடுகள் கொண்ட ஐநாவின் மனித உரிமைகள் ஆணையத்தின் இன்றைய தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படவில்லை.
இன்றைய தீர்மானத்தை பிரிட்டன் முன்னின்று கொண்டுவந்தது. இந்த தீர்மானத்தை இலங்கை அரசும் ஆதரித்திருக்கிறது.
இந்த தீர்மானத்தில் சில முன்னேற்றகரமான அம்சங்கள் காணப்பட்டாலும், இது ஓரளவு வலு குறைந்த ஒன்று என்று தெரிவித்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன், அமையவிருக்கும் பொறிமுறையைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதிகிடைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் பாடுபடும் என்று தெரிவித்துள்ளார்.
மனித உரிமை அமைப்புக்களின் வரவேற்பும் கவலையும்
இலங்கை மோதலில் மோசமான மனித உரிமை மீறல்களை செய்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்று பல்வேறு மனித உரிமை குழுக்களும் அரசியல் கட்சிகளும் தொடந்து முன்னெடுத்த பிரச்சாரத்தின் விளைவாக இன்றைய இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.
இன்றைய இந்த தீர்மானத்தை சர்வதேச அளவிலான மனித உரிமைகள் செயற்பாட்டு அமைப்பான அம்னெஸ்டி இண்டர்நேஷனல் வரவேற்றுள்ளது.
இலங்கையின் மனித உரிமை விவகாரத்தில் இது ஒரு திருப்பு முனை என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
அதேசமயம், இந்த தீர்மானம் முழுமையானதல்ல என்றும் எச்சரித்திருக்கும் அம்னெஸ்டி அமைப்பு, இந்த நீதி விசாரணையின் ஒவ்வொரு கட்டத்திலும் போரினால் பாதிக்கப்பட்டவர்களும் அவர்களின் குடும்பங்களும் தொடர்ந்து கலந்தாலோசிக்கப்பட வேண்டும் என்றும் அதற்கான வழிமுறைகளை சர்வதேச சமூகமும் இலங்கை அரசும் ஏற்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் இலங்கைக்குள் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்குத் தேவையான நிறுவனமய கட்டமைப்புக்களை இலங்கை அரசு உருவாக்க வேண்டும் என்று கூறியுள்ள அம்னெஸ்டி அமைப்பு, சாட்சிகளுக்கான பாதுகாப்பு தற்போது இலங்கையில் போதுமானதாக இல்லை என்றும் அது அதிகரிக்கப்படவேண்டும் என்றும் கோரியுள்ளது.
Aucun commentaire:
Enregistrer un commentaire