வீ.ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து கொள்ளப் போவதாக, சிறிலங்காவின் முன்னாள் பிரதி அமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து தாம் விலக்கிக் கொள்ள முடிவு செய்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைத்துக் கொள்ளப்பட்ட கருணாவுக்கு, கட்சியின் உபதலைவர் பதவி வழங்கப்பட்டது. அத்துடன் பிரதி அமைச்சராகவும் அவர் நியமிக்கப்பட்டிருந்தார்.
எனினும், புதிய அரசாங்கம் சிறிலங்காவில் பதவியேற்றதையடுத்து, அவர் பிரதி அமைச்சர் பதவியை இழந்தார்.
மைத்திரிபால சிறிசேன சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றதையடுத்து, சிறிலங்கா சுதந்திரக் கட்சி மறுசீரமைக்கப்பட்ட போது, கருணாவிடம் இருந்து கட்சியின் உப தலைவர் பதவியும் பறிக்கப்பட்டது.
மேலும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட மறுத்த கருணாவுக்கு, தேசியப் பட்டியல் ஆசனம் வழங்குவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்களால் உறுதியளிக்கப்பட்டது.
ஆனாலும், அவரது பெயர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பட்டியலில் உள்ளடக்கப்படவில்லை. இதனால் அவர், கட்சியின் மீது அதிருப்தியடைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Aucun commentaire:
Enregistrer un commentaire