சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான செய்திகள் இன்று நாட்டு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகின்றன. பதினெட்டு வயதுக்கு குறைந்தவர்கள் அனைவரும் சிறுவர்களாவர். இன்றைய சிறார்களே நாளைய தலைவர்கள் என்று போற்றப்படுகிறது. ஆனால், தற்போது சிறார்கள் படும் வேதனையையும், இன்னல்களையும், கொடூரங்களையும், பாலியல் வன்முறைகளையும், யாரிடம் போய் முறையிடுவது என்று தெரியாமல் பெற்றோர்கள் தவிக்கின்றனர்.
அரசாங்கம், சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகள், உத்தியோகஸ்தர்கள், பொலிஸ் அதிகாரிகள் ஆகியோர் இதனை எவ்வாறு ஒழிப்பது அல்லது கட்டுப்படுத்துவது என்பது தொடர்பில் கவனம் செலுத்திவருகின்றனர். அதேவேளை, பொதுமக்கள் இதனை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரசைக் கோருவதும், அவ்வப்போது வீதியில் இறங்கி போராடுவதும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
இன்றைய சமூகத்தில் பெண் பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோர்கள் மடியில் நெருப்பைக் கட்டிக்கொண்டு வாழவேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலையில் இருப்பதைக் காணலாம். இவ்வாறான நிலைக்கு இன்றைய சமூகம், கலாசாரம், பண்பாடு, ஒழுக்கம், பழக்க வழக்கம், விழுமியம் போன்ற உயர் சிந்தனைகளிலிருந்து படிப்படியாக கீழிறங்கி சென்று கொண்டிருக்கின்றதோ என்ற கேள்வி அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் எழுந்துள்ளது.
இலங்கையில் மட்டுமல்ல, உலக நாடுகள் அனைத்திலும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்பது மட்டும் உண்மை. குறிப்பாக, இன்று வயது வித்தியாசமின்றி சிறுவர்கள், குறிப்பாக, சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள் என்ற செய்தி மனித இனத்தின் இழிந்த நிலையையும், கேவலமான சிந்தனையையும், மோசமான செயல்களையும் வெளிப்படுத்துவதாக இருக்கின்றது.
அனைத்து சமயங்களையும் சேர்ந்த மக்கள் வாழும் இந்த நாட்டில் மனித நேயமற்றவர்களால் சிறார்கள் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்படுவதென்பது எந்தளவிற்கு சிறுவர்களை மதிக்கின்றார்கள், அவர்களை நேசிக்கின்றார்கள், விசுவாசமுள்ளவர்களாக இருக்கின்றார்கள் என்பது கேள்விக்குறியே. ஆலயங்களில், விகாரைகளில், கோயில்களில், பள்ளிவாசல்களில் போதிப்பது எல்லாம் வீணாகின்றதா? சமயம் ஒன்றே. எந்தவொரு சமூகத்தையும் சரியான வழியில் வழிநடத்தக்கூடியதொன்றாகும். கடந்த வருடத்தில் மட்டும் 2,500 இற்கு மேற்பட்ட சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பிலான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக ஒரு புள்ளிவிபர அறிக்கை தெரிவிக்கின்றது.
கடந்த சில மாதங்களில் இடம்பெற்ற பல குற்றச் செயல்கள் மிகவும் கொடூரமானவையாகும். குறிப்பாக, வித்தியா, சேயா, பிரசாந்தி போன்ற சிறுமிகள் தொடர்பான சம்பவங்கள் நாட்டு மக்கள் அனைவரையும் கலங்கடித்துவிட்டன எனலாம்.
பெருந்தோட்டப்புற சிறுவர்களின் பாதுகாப்பில் பெற்றோர்களே அதிகூடிய கவனம் செலுத்த வேண்டும். பாடசாலைக்கு செல்லும் சிறுவர்கள் இன்று பலராலும் பல்வேறு முறைகளில் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்படுவதை கேள்விப்படுகின்றோம்.
இவ்வாறான விடயங்களில் யாரை நம்புவது? யாரை நம்பாது விடுவது என்ற துர்ப்பாக்கிய நிலை உருவாகியுள்ளது. தனது சொந்த மகளையே துஷ்பிரயோகப்படுத்தும் தந்தைமார் எமது சமூகத்தில் உள்ளனர். சொந்த சகோதரியை மானபங்கம்படுத்தும் சகோதரன் இருக்கின்றான். மாதா, பிதா, குரு என்ற முதுமொழியின்படி தாய், தந்தைக்குப் பின் தாய், தந்தையாக இருக்கக்கூடிய குருவே (ஆசிரியர்களே) தன்னுடைய மாணவர்களை (பெண் பிள்ளைகளை) துஷ்பிரயோகப்படுத்தும் செய்திகளும் வராமல் இல்லை.
பாதிக்கப்பட்ட சிறுவர்கள் பாதுகாப்பு தரப்பை நாடும்போது அங்கும் பாதுகாப்பு கிடைக்காமல் துஷ்பிரயோகப்படுத்தும் சம்பவங்களும் நடந்தேறுகின்றன. அதாவது வேலியே பயிரை மேய்ந்தால் யாரிடம் முறையிடுவது?
பெருந்தோட்டப் பிரதேசத்தில் இருக்கின்ற பெற்றோர்கள் குறிப்பாக, தாய்மார்கள் மிகவும் கவனமாகப் பெண் பிள்ளைகளை வளர்க்க வேண்டிய நிலையில் இருக்கின்றனர். இன்றைய சினிமா கலாசாரம், தொலைக்காட்சி, இணையத்தளம், பேஸ்புக் மற்றும் டுவிட்டர், தொடர் நாடகங்கள், ஆபாசப் படங்கள், வீடியோ, கையடக்கத்தொலைபேசி பாவனை போன்ற விடயங்களும் சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு காரணமாக இருக்கின்றன.
அத்துடன் அதிகரித்த மதுபாவனை, போதைவஸ்து பாவனை, குடு, கஞ்சா, ஹெரோயின் பாவனை, வாழ்க்கையில் விரக்தியடைந்தவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், குடும்ப அங்கத்தவர்கள், அயல் வீடுகளில் வசிக்கும் பிழையான நடத்தைக் கொண்டவர்கள் போன்ற விடயங்களும் இதற்கு காரணங்களாக அமைந்து விடுகின்றன.
குறிப்பாக வறுமை, கல்வியறிவு குறைவு, அறியாமை, விழிப்புணர்வின்மை, ஆலோசனை கிடைக்காமை, தொடர் வீடமைப்பு முறை, (லயத்து அமைப்பு முறை) போன்ற விடயங்களும் ஏதுவாக அமைந்து விடுகின்றன. பாடசாலை செல்லும் சிறுவர்களுக்கு சிறுவர் பாதுகாப்பு சம்பந்தமான வழிகாட்டல் ஆலோசனைகள் பெரும்பாலும் கிடைப்பதில்லை. பிரச்சினை அல்லது தப்பு நடந்தபின்பே அதுபற்றிய விடயங்கள் பேசப்படுகின்றன. இது நேரத்தையும், வளத்தையும் வீணடிக்கும் செயல்களாகும்.
வெள்ளம் வரும் முன்னே அணைகட்ட வேண்டும். அரசாங்கம் பாடசாலைகளில் ஆலோசனை வழிகாட்டல் செயலமர்வுகளை பயிற்றப்பட்ட ஆசிரியர்களைக் கொண்டும் துறைசார்ந்த நிபுணர்களைக் கொண்டும் நடத்தவேண்டும். கல்வித் திட்டத்தில் இதற்கான ஏற்பாடுகளை செய்யவேண்டும். பாடசாலை அதிபர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் இவ்விடயம் சம்மந்தமாக போதிய வழிகாட்டல் ஆலோசனைகளை வழங்க வேண்டும்.
அரசினால் கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்பட்டு சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் நபர்களை பாராபட்சமின்றித் தண்டிக்கவேண்டும். பாடசாலைக்கு தனியார் வாகனங்களில் செல்லும் பிள்ளைகளின் பாதுகாப்பில் பெற்றோர்களே விழிப்புடன் இருக்கவேண்டும். தேயிலைத் தோட்டங்கள் வழியாக நடந்து பாடசாலைக்கு செல்லும் மாணவர்களுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பெற்றோர்களும,; சமூகமும் இணைந்து செய்யவேண்டும்.
சிறுவர்களுக்குத் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என்ற விடயங்களை பாடத்திட்டத்திலேயே கொண்டுவரவேண்டும். அத்துடன் சிறுவர்களை பாதுகாக்கும் நோக்கத்துடன் அமைக்கப்பட்ட நிறுவனங்கள் பாடசாலை தோறும் விழிப்புணர்வு செயலமர்வுகளை அதிபர், ஆசிரியர், பெற்றோர், மாணவர்களுக்கும், சமூகத்திலுள்ளவர்களுக்கும் வழங்க முன்வரவேண்டும். துர்நடத்தைகளில் ஈடுபடும் நபர்களை சமூகத்திலுள்ளவர்களே காட்டிக் கொடுக்க வேண்டும்.
பெருந்தோட்டப் பிரதேசத்தில் மதுபானசாலைகளை குறைக்கவேண்டும். கள்ளச் சாராயம், போதைப் பொருள் விற்பனைகளை பொலிஸார் தடுக்க வேண்டும். பாடசாலை விடும் நேரங்களிலும், பாடசாலைக்கு பிள்ளைகள் வரும் நேரங்களிலும் மாணவர்கள் சேர்ந்து போகவேண்டும். சந்தேசங்களில் இடமான நபர்கள், வாகனங்கள், முச்சக்கரவண்டிகள் என்பவற்றை பொலிஸார் தொடர்ச்சியாகக் கண்கானிக்க வேண்டும். பாடசாலைகளில் தியான வகுப்புக்கள், யோகா பயிற்சிகளை வழங்க வேண்டும். மாணவர்களை தங்களை தாங்களே பாதுகாத்துகொள்ளக் கூடியவாறு தயார்படுத்த வேண்டும். சமய நிறுவனங்கள் போதியளவான பங்களிப்பை உடனடியாக செய்வதற்கு முன்வர வேண்டும்.
இன்று பெருந்தோட்டப் பிரதேசங்களில்; இருக்கின்ற பெற்றோர்கள் குறிப்பாக தாய்மார்கள் வயது வந்த பிள்ளைகளையும், சிறுவர்களையும் தந்தையின் பொறுப்பிலும், உறவினர்கள் (தாத்தா, பாட்டி) பொறுப்பிலும் விட்டு வெளிநாட்டிற்குச் செல்வதைக் காணலாம். இவர்களுக்கான பாதுகாப்பு சகல வழிகளிலும் கேள்விக் குறியாகவே உள்ளதை அவதானிக்கலாம்.
கல்வி அமைச்சும் சிறுவர் பாதுகாப்பு அமைப்பும், அரச சார்பற்ற நிறுவனங்களும், தேசிய கல்வி நிறுவனமும் சேர்ந்து ஒரு பாடத்திட்டத்தை சிறுவர் பாதுகாப்பு சம்பந்தமாக உருவாக்க வேண்டும். இலங்கையில் இவ்வாறான ஒரு துரதிஷ்டமான செயல்கள் எவ்வாறு உருவாகியது, இதற்கான காரணங்கள் யாது? இதனை எவ்வாறு தடுக்கலாம், இதனை செய்வது யார்? எப்படி இவ்வாறான விடயங்கள் தொடர்ச்சியாக நடக்க முடியும் என்பதுபற்றி ஆராய்ந்து இதற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.
Aucun commentaire:
Enregistrer un commentaire