- கடந்த மாகாண சபைத் தேர்தலில் கிளிநொச்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்ட நீங்கள் தோல்வியைத் தழுவ அதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான் காரணம் எனக் கூறி வருகிறீர்கள். எதனை வைத்து அப்படிக் கூறுகிறீர்கள்?
ஆம், அவர்கள் எனக்கு எதிராகப் பிரசாரம் செய்தனர். என்னை ஏதோ எதிராளி போல நடத்தினர். ஒரே அணியில் போட்டியிடுகிறோம் எனத் துளியளவும் எண்ணவில்லை. என்னைத் தோற்கடிப்பதிலேயே குறியாக இருந்தனர். அதற்காக என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையும் செய்தார்கள். இவற்றைக் கண்ணால் பார்த்துக் காதால் கேட்டவன் நான். சிரேஸ்ட அரசியல்வாதியான என்னை நேற்று அரசியலுக்கு வந்தவர்கள் புறக்கணித்தனர்.
- இவ்வாறு அவர்கள் செய்ய நிச்சயம் ஏதாவது காரணம் இருந்திருக்க வேண்டும். அது என்ன என்று ஆராய்ந்து பார்க்க நீங்கள் முனையவில்லையா?
அதுதான் எனக்கும் புரியாத புதிராக உள்ளது. கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் உட்பட அனைவருமே நேரில் காணும்போது என்னுடன் தேன் ஒழுக அன்பாகவும், மரியாதை தரும் விதத்திலும் கதைப்பார்கள். மறைவில் இந்த மாதிரியான செயலையே செய்தனர்.
- தமிழ்க் கூட்டமைப்பினரை விடுங்கள். கிளிநொச்சி தனி மாவட்டமாக மாறத் தாங்களே காரணம். அதனால் அன்று முதல் தங்களுக்கு அங்கு மக்கள் செல்வாக்கு இருந்தது. அப்படியிருந்தும் மக்கள் நிராகரிக்கக் காரணம் என்ன?
நீங்கள் கூறியது உண்மையே. முன்னர் கிளிநொச்சியில் இருந்தவர்கள் இருந்திருந்தால் நீங்கள் சொன்னது போல எனக்கே வெற்றி. ஆனால் இப்போது உள்ள பலருக்கும் கிளிநொச்சி தனி மாவட்டமாக மாற நான்தான் காரணம் என்பது தெரியாது. பிரபாகரனே காரணம் என நினைத்துக் கொண்டிருப்பவர்களும் அங்கு இருக்கிறார்கள். அதனால் மக்கள் செல்வாக்கு என்பதை விடவும் பிரசாரமே இம்முறை அங்கு முக்கியமானதாக இருந்தது. அதனை அங்குள்ள தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் எனக்கு எதிராகச் செய்தார்.
- நீங்கள் மறைமுகமாகக் கூறுவது பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனையா அல்லது வேறு எவரையாவதா?
ஆம், அவர்தான். அதே சிறிதரன்தான். முழுக்காரணமும். மறைமுகமாகக் கூறவில்லை. நேரடியாகவே கூறினேன். அவர் தன்னை நிகழ்காலப் பிரபாகரன் என நினைத்துக் கொண்டிருக்கிறார். வன்னிக்குத் தான்தான் தலைவர் என்ற இறுமாப்பில் செயற்பட்டு வருகிறார். ஆனால் எம். பி பதவியை வைத்துக் கொண்டு அவர் செய்யும் பல விளையாட்டு;க்கள் எனக்கு மட்டுமல்ல கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு நன்கு தெரியும்.
- அது என்ன விளையாட்டுக்கள் என்பதை எங்களுக்கும் சொல்லுங்களேன்?
அவற்றை வெளிப்படையாகச் சொன்னால் அவருக்கும் எனக்கும் வித்தியாசம் இல்லாது போய்விடும். அவரைப் போன்று என்னைத் தரம் தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை. ஆனால்சரியான தருணம் வரும்போது அதனை நிச்சயம் போட்டுடைப்பேன்.
- பிரசார வேளையில் ஒரே அணியில் போட்டியிடும் உங்களுக்கு எதிராக அவர் செயற்பட்டபோது அதனைத் தெரிந்து கொண்ட நீங்கள் கூட்டமைப்பின் தலைமையிடம் முறையிட்டிருக்கலாமே?
இந்த விடயத்தில் எல்லோருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். யாரை யாரிடம் போய் முறையிடுவது. தமிழரசுக் கட்சிக் காரர்களிடம் ஒரு குணம் இருந்தது. அதாவது தங்களது கட்சி வேட்பாளர்களைத் தவிர ஏனைய கூட்டுக் கட்சியிலிருந்து எவரும் வெற்றி பெறக் கூடாது என்பதில் அவர்கள் குறியாக இருந்தனர். அதனால் அவ்வேளையில் எதனைக் கூறினாலும் எடுபட்டிருக்காது.
- ஆனாலும் ரெலோ சிவாஜpலிங்கம், புளொட் சித்தார்த்தன், ஈ.பி.ஆர். எல். எப். பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரனின் சகோதரன் சர்வேஸ்வரன் ஆகியோர் வெற்றி பெற்றனரே?
அவர்களுக்கும் யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடைய+றுகளை ஏற்படுத்தினர். எனினும் அவர்கள் தமது முன்னாள் எம். பி பதவிகளை வைத்தும், சுரேஸ் தனது இந்நாள் பதவியை வைத்தும் ஒருவாறு வென்றுவிட்டனர். வென்ற பின்னர் அமைச்சர் பதவிகளைக் காட்டி அவர்களைத் தமிழரசுக் கட்சியினர் பிரித்துக் கூறு போட்டு விட்டனரே. இப்போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு திக்கில் நிற்கின்றனர். உள்ளே பகை வெளியே நடிப்பான நட்பு என்பதாகப் பழகி வருகின்றனர்.
- அமைச்சுப் பதவிகள் விடயத்தில் அவற்றை முழுமையாகக் கையாண்டது முதலமைச்சர் விக்னேஸ்வரன் என்றுதானே கூறுகிறார்கள். அப்படியிருக்க நீங்கள் தமிழரசுக் கட்சியினரைக் குற்றம் சாட்டுகிறீர்களே?
அவ்வாறுதான் மக்களும் உங்களைப் போன்ற ஊடகவியலாளர்களும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். எவ்வளவு தூரம் நம்பும்படியாக உங்களை ஏமாற்றியுள்ளார்கள். அதுவல்ல உண்மை. தமிழரசுக் கட்சியின் தலைவர் சம்பந்தன், மாவை சேனாதிராஜh, சுமந்திரன் ஆகியோரின் கருத்துக்களையே முதலமைச்சர் விக்னேஸ்வரன் முன்வைக்கிறார். முடிவெடுப்பது, தீர்மானிப்பது, அமுல்படுத்தவது எல்லாமே சம்பந்தனும், மாவையும், சுமந்திரனும்தான். முதலைமச்சர் பொம்மையாகவே உள்ளார். இது பலருக்கும் தெரியாத விடயம். ஆனால் அதுவே உண்மையான விடயம்.
- அப்படியானால் முதலமைச்சர் திறமையில்லாதவர் என்று கூற வருகிறீர்களா?
அப்படி நான் கூறவில்லை. அவர் திறமையானவர். நீதியரசராக இருந்தவர். உண்மையில் கட்சியை விடவும் அவருக்காக தனிப்பட்ட முறையில் கிடைத்த வாக்குகளே அதிகம். அரசியல் அனுபவம் இல்லாவிடினும் ஆளுமை அவரிடம் உள்ளதாக நான் நம்புகிறேன். அதனால் தமிழரசுக் கட்சியின் தற்போதைய தலைமைக்கும், அடுத்த தலைமைப் பதவிக் கனவில் இருப்போருக்கும் அதிருப்தியுடன் ஒருவிதமான மனப்பயமும் உள்ளது. அதனை வெளிக்காட்டாது அவரை அடக்கி வைத்துள்ளார்கள்.
- தலைவர் சம்பந்தன் ஓர் மூத்த அரசியல்வாதி. அரசியலில் பழுத்த அனுபவம் மிக்க தலைவர். அவர் இவ்வாறு சிறுபிள்ளைத் தனமாக நடந்து கொள்வார் என்பதை நம்ப முடியாது உள்ளதே?
நீங்கள் சொல்வது எல்லாமே சரிதான், உண்மைதான். நம்பமுடியாதுதான். ஆனால் நம்பியே ஆக வேண்டும். அவர் இப்போது தமிழரசுக் கட்சியில் புதிதாக அதுவும் தேர்தலில் போட்டியிடாது வெறுமனே போனஸ் ஆசனம் பெற்ற சில அரசியல் பால்குடிகளின் கைப்பொம்மையாக மாறியுள்ளார். அவருக்குப் பின்னர் அதாவது அடுத்ததாகத் தமிழரசுக் கட்சிக்குத் தலைவராகும் எண்ணம் கொண்ட இதுபோன்ற நேற்று அரசியலுக்கு வந்த சிலர் ஆளுமை உள்ள அவரை ஆட்டிப் படைக்கின்றனர். ஆனந்தசங்கரி அதிக வாக்குகளைப் பெற றால் தமது மானம், மரியாதை எல்லாமே காற்றில் பறந்துவிடும், தலைவராகும் தமது எண்ணம் தவிடுபொடியாகிவிடும் என்ற பயம் இவர்களது மனதில் இருக்கிறது.
- ஆனாலும் உங்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என அவர்கள் கூறியதை கிளிநொச்சி மக்களும் ஏற்று நடந்துள்ளனரே?
உண்மையில் வன்னி மக்களில் பலர் இன்னமும் இந்தத் தமிழரசுக் கட்சியினரின் புலிக் கதையை நம்புவதையே காணக் கூடியதாக உள்ளது. அவர்கள் தேர்தல் காலத்தில் செய்த பிரசாரம் உங்களுக்கு ஞாபகம் இல்லையா? புலி வரும், தலைவர் வருவார், அவரிடம் ஆசி பெறுவோம் என எத்தனை கதைகளை அவிழ்த்து விட்டிருந்தார்கள். சனம் இவ்வளவு பட்டும் இன்னமும் திருந்துவதாக இல்லை.
- சரி, அதற்கும் மக்கள் உங்களுக்கு வாக்களிக்காமைக்கும் என்ன தொடர்பு? நீங்களும் அவர்கள் பிரசாரம் செய்த அதே கட்சியின் வேட்பாளர்தானே?
அதே கட்சி என்றாலும் நான் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர். என்னை அவர்கள் ஒதுக்கி தமது தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்களையே முன்னி லைப்படுத்தி பிரசாரம் செய்தனர். நான் கிளிநொச்சியில் அமோக வெற்றி பெற்றால் அடுத்து நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலிலும் போட்டியிடுவேன். அவ்வாறு போட்டியிடும்போது எனக்கு நிச்சயம வெற்றி; கிடைக்கும். அவ்வேளையில் சிறிதரன் இருந்த இடம் தெரியாது போய்விடுவார். அதனைத் தடுப்பதே சிறி தரனின் நோக்கம். இது நீண்ட காலத் திட்டம்.
- இவ்வளவு விடயங்களும் தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவர்களுடன் கூட்டு வைத்து தேர்தலில் போட்டியிட்டது மட்டுமல்லாது இப்போதும் அவர்களுடன் கூட்டு வைத்துள்ளீர்களே?
எனக்கு முதலே இவர்களைப் பற்றி நன்கு தெரியும். நம்ப வைத்துக் கழுத்தறுப்பதில் இவர்களை யாருமே மிஞ்ச முடியாது. ஆனாலும் சமாளித்துச் செல்வோம் என்றுதான் சேர்ந்து போனேன். ஆனால் இந்தத் தேர்த்லில்தான் அவர்கள் ஒவ்வொருவரினதும் உண்மையான சுயரூபங்கள் தெரிந்தன. இவ்வளவு மோசமானவர்கள் என்பதைத் தெரிந்து கொண்டேன்.
- இப்போது எல்லாமே தெளிவாகத் தெரிந்துவிட்டது. இனி அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?
அவர்களைத் திருத்த வேண்டும். திருத்தியே ஆக வேண்டும். அதற்காக கூட்டுக் கட்சிக்குள்ளேயே ஒருவனாக தொடர்ந்தும் இருப்பேன். தம்மைத் தட்டிக் கேட்டு பிழைகளைச் சுட்டிக் காட்ட நான் ஒருவனாவது இருக்கிறேன் என்ற பயத்திலா வது அவர்கள் திருந்துவார்கள் அல்லது தவறிழைப்பதைக் குறைத்துக் கொள்வார்கள் என நம்புகிறேன். நம்பி வாக்களித்த மக்களுக்காக நான் இதனை நிச்சயம் செய்வேன்.
- பிரபாகரன் உயிருடன் இருந்த காலத்தில் நீங்கள் அவருக்குப் பல கடிதங்களை எழுதினீர்கள். அது தொடர்பாக தமிழரசுக் கட்சியினருக்கு ஏதாவது மனஸ்தாபம் இருந்து உங்களை இப்போது பழி வாங்குவதாக நீங்கள் நினைத்ததுண்டா?
நான் பிரபாகரனுக்கு மட்டுமல்ல இந்நாட்டின் மூன்று ஜனாதிபதிகளுக்கும் கடிதங்களை எழுதினேன். அதனைக் கேட்க இவர்கள் யார்? இவர்களுக்கு அருகதையும் கிடையாது. ஏனெனில் பிரபாகரன் செய்த பல கொடு மைகளைத் தட்டிக் கேட்கத் துப்பற்றவர்களாகவே இவர்கள் வாய்மூடி இருந்தனர். இப்போது பிரபாகரன்; இல்லையென்றதும் நீலிக்கண்ணீர் வடித்து அவருக்கு வக்காளத்து வாங்குகின்றனர். இருந்தபோது ஒரு வார்த்தையாவது கூறியிருப்பார்களா? முடிந்தால் கூறட்டும் பார்ப்போம். அத்துடன் பிரபாகரனுக்கு நான் புத்திமதி கூறினேனே தவிர அவரை இவர்களைப் போன்று முன்னால் கதைத்துவிட்டுப் பின்னால் வந்து நையாண்டி செய்யவில்லை.
- நீங்கள் எழுதிய கடிதங்களைப் பிரபாகரன் பார்த்ததாக அல்லது வாசித்ததாக நீங்கள் அறிந்து கொண்டீர்களா? ஏதாவது ஒரு கடிதத்திற்காகவது அவரிடமிருந்து பதில் வந்ததா?
பிரபாகரனைப் பற்றி உலகிற்கே தெரியும். அவர் கடிதங்களை அலட்சியம் செய்வது போலப் பாசாங்கு செய்து எறிவது போல மற்றவர்கள் முன்பாக கசக்கி எறிவார். ஒருபோதும் கிழித்து எறிய மாட்டார். அது அவரது குணம். இவர் யார் எனக்குக் கடிதம் எழுதுவது என்பதாக நடிப்பார். எனது கடிதத்தை மட்டுமல்ல அமெரிக்க ஜனாதிபதி கடிதம் எழுதியிருந்தால்கூட இதே நிலைதான். ஆனால் பின்னாலேயே இரகசியமாக தனது ஆட்களை வைத்து அதே கடிதத்தை எடுத்துத் தனியாக இருந்து படிப்பார்.
- உங்களது இன்றைய நிலை தொடர்பாக முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் எடுத்துரைக்கலாமே?
அவரால் என்ன செய்ய முடியும். அவரே இவர்களது பிடியில் சிக்கிக் கிடக்கிறார். நான் விரைவில் நல்லதொரு முடிவினை எடுக்கவுள்ளேன். அது தமிழ் மக்களுக்கு நிச்சயம் நல்லதொரு விடிவினைத் தரும். அதுவரை பொறுத்திருங்கள்.
- இறுதியாக மன்னார் ஆயர் ஆண்டகை இராயப்பு ஜோசப் அவர்களுக்குத் தாங்கள் ஒரு நீண்ட கடிதத்தை எழுதியிருந்தீர்கள். பதில் ஏதாவது வந்ததா?
நான் அவரை ஒரு நேர்மையான, துணிச்சலான, பக்கச் சார்பற்ற ஒரு மதத் தலைவராக எண்ணியே கடிதத்தை எழுதி யிருந்தேன். அத்துடன் அவர் தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளுடனும் நல்லுறவைக் கொண்டவர். அதனாலேயே அவருக்கு நடுநிலையாக நின்று நியாயம் கூறுமாறு எழுதினேன். அவரிடமிருந்து ஒரு பதிலையும் காணவில்லை. ஒருவேளை பேச்சுவார்த்தை நடத்துகிறார் போலும். எதற்கும் பொறுத்திருந்து பார்ப்போம்.
- தங்களது கடிதம் கிடைத்து என்றாவது ஆண்டகை அவர்கள் அறிவித்தாரா? ஏனெனில் தாங்கள் கடிதம் அனுப்பி மூன்று வாரங்களாகிவிட்டதே. அதனால்தான் கேட்கிறேன்?
கிடைத்ததாகக் கூறவில்லை. ஆனால் நிச்சயம் கிடைத்திருக்கும். பத்திரிகைகளில் கூட அக்கடிதத்தினை முழுமையாகப் பிரசுரித்திருந்தார்கள். பார்ப்போம். ஆயருக்கும் பல சோலிகள். அதில் இதுவும் ஒன்று. எனக்கு இது முக்கியமானதொன்று. அவருக்கு அவரது பணிகளுக்கு மத்தியில் இதுவும் ஒன்று.
- பத்திரிகைகள் என்றதும் தான் ஞாபகத்திற்கு வருகிறது. தேர்தல் காலத்தில் பிராந்திய மற்றும் தேசியத் தமிழ்ப் பத்திரிகைகள் பலவும் ஒருதலைப் பட்சமாக தமிழ்க் கூட்டமைப்பிற்கே தமது ஆதரவை வழங்கியிருந்தன. அவை உங்களுக்கு வழங்கிய முக்கியத்துவம் எப்படி?
நல்ல கேள்வி. நானே கூற வேண்டும் என்றிருந்தேன். உண்மையில் தமிழ் ஊடகங்கள் பலவும் இன்று பாரிய தவ றினை இழைத்து வருகின்றன. நான் எந்த ஊடகத்தையும் விழித்துக் கூறவில்லை. (பிறகு அவர்கள் எனது செய்திகளைப் போடமாட்டார்கள்) இந்தச் சில தமிழ் ஊடகங்கள் பொய்யைக் கூறினால்தான் அதற்கு முக்கியத்துவம் அளிக்கின்றன. அல்லது ஏதாவது புலிக் கதையைக் கூற வேண்டும். இதனால்தான் நான் கூறும் உண்மைகளை இந்தச் சில தமிழ் ஊடகங்கள் கவனத்திற் கொள்வதே இல்லை. நானும் பொய்யாக புலித் தலைவர் வருவார், அவரது தலைமையில் மாகாண ஆட்சி நடத்துவோம் என்று நான்கு வீரவசனங்களைப் பேசியிருந்தால் ஒவ்வொரு நாளும் முன்பக்கத்தில் கலர் படத்தோடு செய்திகளைப் போட்டிருப்பார்கள். மக்களும் அதை உண்மையென நம்பி வாக்களித்திருப்பார்கள். நானும் வென்றிருப்பேன். ஆனால் இப்போலி நாடகத்தில் நடிக்க நான் விரும்பவில்லை. இனியும் தயாரில்லை. இதனைத் தமிழ் ஊடகங்களும் நிறுத்திக் கொள்ள வேண்டும். அன்று பொய்ச் செய்திகளைப் போட்டு வெற்றி பெற வைத்தீர்கள். இன்று வென்ற உடனேயே பதவிச் சண்டை போட்டு பல துருவங்களாகி வாக்களித்த மக்களைமறந்து நிற்கிறார்கள். அதனை ஏன் மூடி மறைக்கிறீர்கள்.
நேர்கண்டவர்: வாயுபுத்திரன்
Aucun commentaire:
Enregistrer un commentaire