ஆரோக்கியமான எதிர்கொள்ளலுக்கு ஒரு சிறு பங்களிப்பாவது செய்யவேண்டும் என்ற நல்லதொரு நோக்கத்துடன் பால்-பாலியல், காதல்-காமம், பெண்- பெண்ணியம் என்ற இந்த நூலை,
மீரா பாரதி அவர்கள் அனைத்துப் பெண்களுக்கும் Shirley க்கும் சமர்ப்பணமாக வெளியிட்டிருக்கின்றார்.
பெண் – பெண்ணியம் என்பது பற்றிய எனது பார்வையை, இயக்குநர், தயாரிப்பாளர், எழுத்தாளர், திரைப்பட வசனகர்த்தா, நடிகை என பல்வேறு பரிமாணங்களில் செயற்படும், Lena Dunhamன் கூற்றுடன் ஆரம்பிக்க விரும்புகின்றேன். “Feminism isn’t a dirty word. We don’ think women should take over the planet, raise our young on our own or eliminate men from the picture.”
பாகுபாடு, சுரண்டல், ஒடுக்குமுறை என்பவற்றுக்கே பெண்ணியம் எதிரானதேயன்றி அது ஆண்களுக்கு எதிரானது அல்ல. ஆதிக்கமற்ற ஒரு உலகத்தை உருவாக்கவே அது முனைகின்றது,
பொருளாதாரரீதியாகவும், அரசியல்ரீதியாகவும் சமூகரீதியாகவும் கலாசாரரீதியாகவும் ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமைகளும் சம வாய்ப்புக்களும் இருக்க வேண்டும் என்பதை வலுயுறுத்துவதே, பெண்ணியம் ஆகும்
பெண்கள் மீதான சகல ஒடுக்குமுறைகளையும் அகற்றி அவர்களுக்கான உரிமைகளையும் சுதந்திரத்தையும் பெறுவதற்குமான போராட்டமும் அந்தப் போராட்டத்திற்கான வழிமுறைகளும் பெண்நிலைவாதத்தின் அடிப்படை நோக்கங்களாக இருக்கின்றன.
எங்களுடைய முன்னோர்களுக்குக் கிடைக்காத சில அடிப்படை உரிமைகள் எங்களுக்கு தற்போது கிடைத்திருந்தாலும்கூட அவற்றில் பல பத்திரங்களில் மட்டும்தான் காணப்படுகின்றன. நிஜ வாழ்க்கையில் இன்னும் நிறைய மாற்றங்கள் நடக்க வேண்டிய தேவையிருக்கின்றது.
பெண்கள் ஊடகங்களில் பண்டங்களாகத்தான் பாவிக்கப்படுகின்றனர். CEO போன்ற உயர் பதவிகள் ஆண்களினால் மட்டுமே அலங்கரிக்கப்படுகின்றன. girl toy வேண்டுமா boy toy வேண்டுமா, என்றுதான் McDonald’s எங்களைக் கேட்கிறது. Harry Potter புத்தங்கள் விலைப்படுவதற்கான உத்தி, அதனை எழுதியவர் ஆண் எனக் காட்டுவதுதான் என்ற சிபாரிசு Joanne Rowlingஐ J.K. Rowling எனத் தனது பெயரை மாற்ற வைத்திருக்கின்றது. அதேபோல் சமூக நியதிகளுக்கேற்ற ஆணாக, அந்தப் பாத்திரத்திற்கேற்ற முறையில் இயங்காதவர் ஏதோ ஒரு வகையில் சமூகத்தால் தண்டிக்கப்படுகிறார்.
இவ்வகையில் சமூகத்தின் நன்மை கருதி பெண்களுடன் சேர்ந்து ஆண்களும் பெண்ணிலைவாதிகளாக தொழிற்படல் அவசியமாக உள்ளது எனலாம்.
மேலும் எங்களில் ஒவ்வொருவரும் எங்களுக்குள் உண்மையாகவே மாறும் வரைக்கும் கிடைக்கும் உரிமைகளின் முழுமையான பயனைக்கூட எம்மால் அனுபவிக்க முடியாமலிருக்கும் எனலாம்.
உதாரணத்துக்கு, விவாகரத்துச் செய்வதற்கு உரிமை இருந்த போதும் வன்முறையின் கொடுமையில் தினமும் செத்துமடிந்தாலும் பரவாயில்லை, வீட்டுப்படி தாண்டக்கூடாது என்பதே எம்மில் பலரின் கொள்கையாகவும் விருப்பமாகவும் இருக்கின்றது. பொருளாதாரப் பிரச்சினைகள், சமூகத்தின் பார்வைகள் மட்டுமன்றி, அந்தக் கலாசாரத்துக்குள் ஊறிப் போய்விட்ட எங்களினதும் எங்களைச் சூழவுள்ளவர்களின் மனப்பான்மையும் இதற்கான அடித்தளமாக இருக்கின்றது. விவாகரத்து எடுத்தவர்களில் கூடப் பெரும்பான்மையார், பழைய கணவன் ஏதாவது கஷ்டத்துக்குள்ளாகும் போதோ அல்லது இரண்டு வீட்டுக்குள் பங்குபோடப்படும் வாழ்க்கைப் பயணத்தில் பிள்ளைகள் படும் அல்லல்களைப் பார்க்கும்போதோ ஏதோ ஒரு குற்றவுணர்வை உணர்கின்றோம். பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என ஒன்றை வடிவமைத்து காலாகாலமாக அதைப் பேணி வளர்க்கும் கலாசாரம் ஒன்று எமக்குள், நாம் வேறு, அது வேறு எனப் பிரிக்க முடியாமல் ஊடுருவிப் போயிருப்பது இதன் காரணமாக இருக்கலாம்.
அத்துடன் அதிகாரம் பகிரப்படாத வரை, உரிமைகளுக்கான அறைகூவல் தொடர்ச்சியானதொரு போராட்டமாகவே அமையப் போகின்றது. ஆனால், எதற்கான போராட்டம் என்பது சமூகங்களுக்கும் நாடுகளுக்கும் ஏற்ப மாறுபடும். தனி மனித மட்டத்தில் நோக்கினால்கூட ஒருவருடைய தேவை இன்னொருவடையதை ஒத்திருப்பதில்லை. உதாரணத்துக்கு வேலைக்குப் போக உரிமை வழங்கும் வீட்டிலுள்ள ஒரு பெண்ணுக்குத் தான் விரும்பிய உடை உடுக்க உரிமை இல்லாமலிருக்கலாம். அதேபோல், குடும்ப வாழ்வுதான் அடிமைத்தனத்தின் ஆணிவேர் என ஒரு பெண் நினைக்கலாம், ஆனால் இன்னொரு பெண்ணுக்கோ குடும்ப அமைப்புக்குள் தங்கி வாழ்வதும் மற்றவர்களின் தங்கியிருப்புக்காக, தான் வாழ்வதும் மிகவும் வேண்டியதாக இருக்கலாம்.
ஆகவே தாம் விரும்புவதை தாங்கள் செய்வதற்கான சுதந்திரமே பெண்களுக்குத் தேவையானதாகவுள்ளது. ஒவ்வொரு பெண்ணும் தான் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க எது தேவை என நினைக்கின்றாளோ அது கிடைக்கும் போது தான் அவளுக்கான உரிமையுடன் அவள் வாழ்கின்றாள் எனலாம்.
மீரா பாரதி அவர்கள் பல தத்துவஞானிகளின் கூற்றுக்களை மேற்கோள் காட்டியிருப்பதுடன் அவை சம்பந்தமான தனது அபிப்பிராயங்களைச் சுயவிமர்சனத்துடன் நேர்மையாக இந்த நூலில் பதிவுசெய்துள்ளார்.
முதலில் அவருடன் முரண்படும் சில கருத்துக்களை நான் முன்வைக்க விரும்புகின்றேன்.
பெண்கள் கருத்தியல் தளத்தில் மட்டும்தான் வாதிடுகிறார்கள், வன்முறைப் பாதையைப் பின்பற்றவில்லை, ஆளை ஆள் கொல்லவில்லை என அவர் சொல்லியிருப்பதற்கு, மாறாக நடந்தவற்றுக்கும் பல உதாரணங்கள் எங்களிடம் உள்ளன.
அதே போல், ஜனநாயகம், மனித நேயம், பரஸ்பரம் மதித்தல், மற்றவர்களைப் புரிந்துகொள்ளல், அன்பு ஆகிய பண்புகள் பெண்ணியத்தின் அடையாளங்கள் என அவர் பொதுமைப்படுத்துவதும் பொருத்தமானதல்ல. இந்தப் பண்புகள் அனைத்து மனிதர்களுக்கும் இருக்கவேண்டிய பண்புகள். இவை பெண்ணிடம் இருக்கும், இருக்க வேண்டும், ஆனால் ஆணிடம் இருக்காது அல்லது எதிர்பார்க்க முடியாது என்ற முறையிலான தவறான வழிநடத்தல்தான், சற்றுக் கனிவைக் காட்டும் ஆண்களிடம் பெண்களை ஏமாறச் செய்கிறது, அவர்கள் நல்லவர்கள் என நம்ப வைக்கின்றது, அத்துடன் இவை அனைத்துப் பெண்களினதும் இயல்புகள் என்றும் சொல்ல முடியாது, எத்தனையோ மோசமான அம்மாமார்கூட எங்களுக்குள் வாழ்கின்றனர். எனவே இந்தப் பண்புகள் இல்லாதவன் மனிதல்ல என்ற பார்வையே தேவையானது என நான் நினைக்கின்றேன்.
மேலும், பெண்கள் சுதந்திரமாகவும் சமவாய்ப்புக்களுடனும் உரிமைகளுடனும் தமக்குப் பாதுகாப்பான கலாசாரத்தில் வாழ்வதற்கு மதமே தடையாக உள்ளது என்கிறார் மீரா பாரதி. எங்களுடைய இந்து மதம் பெண்ணை சக்தியாக வழிபடுகிறது, சிவனை அர்த்தநாரீஸ்வர்ராக காண்கின்றது. மத குருவாகவோ, பூசகராகவோ பெண் இல்லை என்பது சரிதான், ஆனால் நாளாந்த வாழ்க்கையைச் சிக்கலின்றி, மன உளைச்சலின்றி வாழத் தேவையான உரிமைகளைப் பாதிப்பதாக —- பெண் சுதந்திரத்துக்கு மிகப் பெரிய தடைக்கல்லாக இருப்பது … கலாசாரம்தான் என்பேன், நான்.
திருமணம் என்பது அவசியமானது என்ற கலாசாரப் பெறுமானம் தான் பெண் குழந்தை பிறந்த நேரம் முதல் அவள் சுதந்திரத்தில் தாயாகவும் தந்தையாகவும் சொந்தமாகவும் அயலவராகவும் தலையிடுகின்றது. அடக்கமாக அழகான பெண்ணைத் தேடும் மாமா, மாமிமாருக்காகவும் மாப்பிள்ளைமாருக்காகவும் அவள் வடிவமைக்கப்படுகிறாள். நூலைப் போல சேலை, தாயைப் போல பிள்ளை என ஒரு பழமொழியைப் பார்த்துப் பயந்து பயந்து தாயும் தன் சுதந்திரத்தைப் பிள்ளையின் கலியாணத்துக்காக அடைவு வைக்கின்றாள்.
வெளியில் பெண்ணியம் பேசும் புரட்சிகர சிந்தனையுள்ளவர்கள் கூட பெண்களாக இருந்தால் என்ன ஆண்களாக இருந்தால் என்ன, பெரும்பாலானவர்கள் பெண் என்பவள் அமைதியானவளாக, அழகானவளாக, இசைந்து கொடுப்பவளாக இருக்கவேண்டும் என்றே எதிர்பார்க்கின்றனர்.
மேலும், ஆண்களால் தமது பாலியல் உணர்வைக் கட்டுப்படுத்த முடியாது என்றும் பலாத்தகரமான வன்புணர்வைத் தடுப்பதற்கு பெண்தான் பொறுப்பாக இருக்க வேண்டும் என்றும் சமூகம் நினைக்கின்றது. அவளின் உடையும் நடையும்தான் ஆண் பிழைவிடுவதற்கும் அவளைத் தாக்குவதற்கும் காரணம் என பெண்ணின் மேல்தான் சமூகம் குற்றம் சாட்டுகின்றது. அதனையே ஆணித்தரமாக நம்புகின்றது. பெண்ணைப் பாதுகாப்பாக இருக்கச் சொல்லிப் புத்தி சொல்கிறது. அதனால்தான் தாக்கப்படும் போது, பெண்கள்தான் அதை எண்ணி வெட்கப்படுகிறார்கள் அது தங்களின் பிழை என்றுதான் நினைக்கின்றார்கள்.
புரட்சிகரத்தை எங்கும் எவரிடம் எதிர்பார்ப்போம் ஆனால் எமக்கு மனைவியாக வரப்போறவளிடம் பழமைவாதியாகவே இருப்போம் என்றே பத்தில் ஒன்பது பேர் நினைக்கின்றார்கள். அத்துடன் காதலில்கூட என் உறனினால் வரும் சந்தோஷம் உனக்குப் போதாதா அதற்காக நான் சொன்னமாதிரி இரு என அன்பை ஆயுதமாக்குவோரும் ஒருவர் பாதிக்கப்படும்போது கூட நியாயத்தின் பக்கம் நிற்காமல் சமூக நியதி, குடும்பக் கட்டுக்கோப்பு என்பன பற்றிப் பேசுவோரே எங்கும் நிறைந்திருக்கின்றனர்
மேலும் பெண் பொறுமையானவள், கரிசனை காட்டுபவள் என்ற ஆலாபனைகள் அவள் செய்வாள் அது அவள் கடமை என்ற எதிர்பார்ப்பைத்தான் உறுதிப்படுத்துகின்றது. பெண்ணில் அனுகூலம் எடுக்கச் செய்கின்றது. குடும்ப உடைவுக்குக்கூட பெண் மீதே பழி சுமத்துகின்றது. அதே நேரம் ஒரு ஆண் பொறுமையாக, கரிசனையாக இருந்தால் ஓகோ என அவனைப் பாராட்டுகின்றது.
அதற்காக இனிவரும் காலம் பெண்களின் காலமாக இருக்கட்டும். எதிர்காலம் பெண்களுக்கான சந்தர்ப்பம். பெண்மையின் சக்தி செயற்பட இனி சந்தர்ப்பம் வழங்கி வழிவிடப்படவேண்டும். பெண் தன்மையின் அடிப்படையில் பெண்கள் இயங்கவேண்டும். இதுவே எதிர்காலத்திற்கு நம்பிக்கையும் ஒளியும் வழியும் தரும் என்றும் மீரா மேற்கோளிட்டிருக்கும் என ஓசோவின் கூற்றையும் என்னால் ஏற்க முடியாது. ஆரோக்கியமானதொரு சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு எல்லோருமே சம்மாக இருத்தலே அவசியமானது, எவருக்கும் அதிகாரம் வேண்டாம், என்பேன், நான்.
எழுத்துப்பிழை, வசனப்பிழைகள், எழுவாய், பயனிலை ஒத்துப்போதலில் பிரச்சினை என்பன இதில் தவிர்க்கப்பட்டிருக்கலாம். நிரூபித்தல், துஷ்பிரயோகம், உந்துதல், எதுவரை போன்ற சில சொற்கள் திரும்பத்திரும்ப அதே மாதிரிப் பிழையாக எழுதப்பட்டிருக்கின்றன.. வசனப் பிழைகளால் சில இடங்களில் அவர் என்ன சொல்லவருகிறார் என்பது தெளிவில்லாமல் இருக்கின்றது. இதனை ஒரு கட்டுரை நூல் என்பதை விட மீரா பாரதியின் மனப் பிரதிபலிப்புக்கள் எனலாம்.
நிறைவாக, வன்முறையில் ஈடுபடுபவர்கள், ஆயுதத்தில் ஆர்வமுள்ளவர்கள், ஆயுத உற்பத்தியில் ஈடுபடுகின்றவர்கள், பயங்கரவாத நடவடிக்கைகளை முன்னெடுப்பவர்கள் யாராக இருந்தாலும் நாட்டின் தலைவராக இருந்தால் என்ன, ஒரு இயக்கத்தின தலைவராக இருந்தால் என்ன அல்லது எப்பதவிகளிலிருந்தாலும், இவர்கள் அனைவரும் ஒருவகையான மனநோயாளிகள். இவர்கள் சிறையில் அடைக்கப்பட வேண்டியவர்கள் அல்ல. மாறாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட வேண்டியவர்கள்.
என்றும்
ஆணாதிக்க கருத்தியலுக்கு விடைகொடுத்து ஆணாதிக்க போர்க்குணாம்ச வன்முறை செயற்பாடுகளிலிருந்து நம்மை நாமே விடுதலை செய்வோம். ஆணாதிக்க போக்குகளுக்கான ஆதரவையும் வழங்காது விடுவோம்.
என்றும்
அன்பு, காதல், புரிந்துணர்வு, விட்டுக்கொடுத்தல் என்பதன் மூலம் நமது தனி மனித உரிமைகளை உறுதி செய்து கொண்டு நம்மை நமது வாழ்வை நமது சூழலை இயற்கையை எதிர்காலத்தை அழகானதாக உருவாக்குவோம்
என்றும் சொல்லும் மீராபாரதியின் கருத்துக்கும் சங்கற்பத்துக்கும் ஆமென் சொல்லி விடைபெறுகின்றேன்
Aucun commentaire:
Enregistrer un commentaire