ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைவர் பதவியிலிருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை விலகுமாறு கோரி பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
கம்பஹா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் கூட்டத்தில் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேல்மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க வீட்டில் கடந்த 31ம் திகதி இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் 234 பேரில் 178 பேர் கலந்து கொண்டுள்ளனர்.
அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், தொகுதி அமைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினர் சிசிர குமார புலத்சிங்கல யோசனை முன்வைத்த போது, மினுவங்கொட நகர சபை உறுப்பினர் அத்துல சேனாநாயக்க அதனை வழிமொழிந்தார்.
மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவராக இருந்த போதிலும் அவர் கட்சியின் வெற்றிக்காக செயற்படுவதற்கான தேவையில்லை எனவும், மீண்டும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை தலைவர் பதவிக்கு கொண்டு வரவேண்டும் எனவும் சிசிர குமார புலத்சிங்கல யோசனை முன்வைத்து உரையாற்றினார்.
அதன்பின்னர் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் கைகளை உயர்த்தி குறித்த பிரேரணைக்கு ஆதரவை வெளிப்படுத்தினர்.
அத்துடன் மகிந்த ராஜபக்ச கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் எனவும், அவ்வாறு வழங்கப்படாவிட்டால் கம்பஹா மாவட்டத்தின் தலைமைத்துவத்தை பிரசன்ன ரணதுங்கவிற்கு வழங்க வேண்டும் எனவும் யோசனையொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதுமாத்திரமல்லாது எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின் போது மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக கிராமிய மட்டத்தில் வேலைத்திட்டமொன்றை செயற்படுத்துவது தொடர்பில் குறித்த கூட்டத்தின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
Aucun commentaire:
Enregistrer un commentaire