நல்லாட்சி என்று கூறிக்கொண்டு கள்ள ஆட்சியை கிழக்கு மாகாண முதலமைச்சரும் அவரின் செயலகமும் முன்னெடுத்திருப்பதை கவலைக்குரிய விடயமாகவே பார்க்கவேண்டியுள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
கிழக்கு மாகாணசபையின் 2015ஆம் ஆண்ட வரவுசெலவு திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்தி நிதியொதுக்கீட்டில் மட்டக்களப்பு மாவட்டம் மிகமோசமான பாதிப்பினை எதிர்கொண்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதிநிதி என்ற அடிப்படையிலும் வறுமையான மாவட்டம் மட்டக்களப்பு மாவட்டம் என்ற அடிப்படையிலும் இது தொடர்பில் நாங்கள் கவலையடைகின்றோம்.
கிழக்கு மாகாணசபையின் நிதியொதுக்கீட்டில் எந்தவிதமான வெளிப்படைத்தன்மையும் இல்லை.கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் ஊடாக களுவாஞ்சிகுடி சமூகசேவைகள் திணைக்களத்துக்கு ஒதுக்கப்பட்ட பணம் சம்மாந்துறை பிரதேசத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.அதேபோன்று மட்டக்களப்பில் சிறுவர் நன்னடத்தை பிரிவிற்கான கட்டிடம் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட ஒரு கோடி ரூபா நிதியும் சம்மாந்துறைக்கு மாற்றப்பட்டுள்ளது.அதேபோன்று சுகாதார துறையினருக்கான பயிற்சி நிலையம் ஒன்றை அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட இரண்டு கோடி ரூபா சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு ஒரு கோடி ரூபாவும் ஆயுர்வேத வைத்தியசாலைக்கு ஒரு கோடி ரூபாவாகவும் மாற்றப்பட்டுள்ளது.அதனைவிட மோசமாக நாவற்காடு, கரடியனாறு, தாண்டியடிபோன்ற மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகளின் உள்ளக மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட 80இலட்சம் ரூபாவும் அம்பாறை மாவட்டத்துக்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் மாற்றியுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டதுக்கு ஒதுக்கப்படும் நிதி அம்பாறை மாவட்டத்துக்கு செல்வதும் அமைச்சர்கள் சமநிலையினை கருத்தில்கொள்ளாமல் இயங்குவதும் அதற்கு காரணமாக அமைச்சரவை இயங்குவதும் மிகமோசமான முன்னுதாரணத்தை கிழக்கு மாகாணத்தில் ஏற்படுத்தியுள்ளது.
செயல்திறன் அற்ற,வெளிப்படைத்தன்மையற்ற,எந்தவித அக்கரையும் அற்ற நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாண அமைச்சர்கள் இருக்கின்றார்கள் என்பதை இந்த விடயங்கள் எமக்கு எடுத்துக்காட்டுகின்றது.
நல்லாட்சியில் நல்லது நடக்காமல் மட்டக்களப்பு மாவட்டம் மிகமோசமாக பாதிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது.இதனை நியாயப்படுத்துகின்றவர்களும் அவர்களை ஊக்கப்படுத்துபவர்களும் இது தொடர்பில் சிந்தித்து மாற்றங்களை ஏற்படுத்தவேண்டிய காலத்தில் உள்ளோம்.
ஜனாதிபதித்தேர்தலுக்கு முன்பாக தற்போது உள்ள ஜனாதிபதியின் செயலாளர் பொதுநிர்வாக அமைச்சின் செயலாளராக இருந்தபோது 180நாட்கள் கடமையாற்றிய அனைவரையும் நிரந்தர நியமனங்களுக்குள் உள்வாங்குமாறு பணிக்கப்பட்டிருந்தது.கிழக்கு மாகாணத்தில் இவ்வாறு 600க்கும்மேற்பட்டவர்கள் உள்ளபோதிலும் அவர்களுக்கான நியமனங்கள் வழங்கப்படவில்லை.ஏனைய மாகாணங்கள் அந்த நியமனங்களை வழங்கியுள்ளது.
தை மாதம் முதல் வழங்கப்படவேண்டிய அந்த நியமனங்கள் அரை ஆண்டுகளை பூர்த்திசெய்துள்ள நிலையிலும் அதுவழங்கப்படவில்லை.செயல்திறன் அற்ற,நிர்வாகத்தினை கொண்டுநடாத்தமுடியாத முதலமைச்சரும் பிரதம செயலாளரும் முதலமைச்சரின் செயலாளரும் இருப்பது வேதனையான விடயமாக பார்க்கின்றோம்.
இந்த சுற்றுநிருபத்தினை அடிப்படையாக கொண்டு முதலமைச்சரின் நகரான ஏறாவூரில் பிழையான ஆவனங்களைக்கொண்டு 53பேருக்கு அரசியல் ரீதியான நியமனம் வழங்க எடுத்த முயற்சி காரணமாக இந்த நிரந்தர நியமனங்கள் வழங்குவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
நல்லாட்சி என்று கூறிக்கொண்டு மிகவும் ஒரு கள்ளாட்சியை கிழக்கு மாகாண முதலமைச்சரும் அவரின் செயலகமும் முன்னெடுத்திருப்பதை கவலைக்குரிய விடயமாகவே பார்க்கவேண்டியுள்ளது.
இலங்கையில் நல்லாட்சி,கிழக்கு மாகாணத்தில் தமிழர்களும் முஸ்லிம்களும் சேர்ந்த இணைப்பாட்சி என்று சொல்லிக்கொண்டிருக்கும்போது கோறளைப்பற்றில் தமிழர்களின் காணிகளை முஸ்லிம்கள் சென்றுகுடியேறுவதும் தமிழர்களின் வேலிகளை இரவுவேளைகளில் சேதப்படுத்துவதும் இது பொலிஸாரிடம் முறையிட்டாலும் அது தொடர்பில் கவனத்தில் எடுக்காத நிலையே இருந்துவருகின்றது.
இதற்கு காரணம் இன்று நல்லாட்சியின் அமைச்சராக இருப்பவர்களும் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தொடர்பில் கவலைகொள்ளத்தேவையில்லை என்று விடுத்துள்ள பணிப்புரை,பொலிஸாரின் அசமந்த போக்குத்தனம் மிகப்பெரும் தாக்கத்தினை செலுத்தியுள்ளது.
தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்தினை பாதுகாக்கவேண்டும் என்ற மாயையில் அனைத்தினையும் மறைத்து மக்கள் மத்தியில் தப்பித்துக்கொள்ளும் நியாயங்களை மட்டும் பேசிக்கொண்டுள்ளனர்.இந்த பிரச்சினைகளை ஆராயாமல் இது அமிழ்ந்துபோகின்றது.
நான் முதலமைச்சராக இருந்தபோது கோறளைப்பற்றுக்கான எல்லை அமைப்பதற்கான நடவடிக்கையினை எடுத்திருந்தேன்.அதனை பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் எம்.பி தடுத்தார்.நாங்கள் முஸ்லிம்களுக்கு சாதமாக இயங்கியதாக பிரசாரங்களை மேற்கொண்டார்.ஆனால் இன்று நாங்கள் வரைந்த எல்லைகளைத்தாண்டி முஸ்லிம்கள் குடியேறியுள்ளனர்.இதுதான் தூரநோக்கற்ற வினைத்திறன் அற்றவர்களினால் எமது இனத்துக்கு ஏற்படும் அபாயம் ஆகும்.
இந்த எல்லைப்பிரச்சினை நியாயமான முறையில் தீர்க்கப்படவேண்டும்.இந்த பிரச்சினையை தீர்த்துக்கொள்வதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.ஆனால் இதில் அரசாங்க அதிபர் கூட ஆழமான பார்வையில்லாமல்செயற்படுவதாக அறியமுடிகின்றது.நீதிமன்றின் உத்தரவுக்காக காத்திருக்கின்றோம் பொலிஸார் பார்த்துக்கொள்வார் என்று கூறியுள்ளதாகவும் தெரியவருகின்றது.இது பிழையான கருத்தாகும்.இரண்டு பிரதேச செயலாளர்களும் இணைந்து இந்த எல்லைப்பிரச்சினையை தீர்த்துக்கொள்ளுங்கள் என்று ஏற்கனவே நீதிமன்ற கட்டளையுள்ளது.அதனை அடிப்படையாக கொண்டு இந்த பிரச்சினைக்கு தீர்வு வழங்கமுடியும்.
Aucun commentaire:
Enregistrer un commentaire