அமெரிக்காவிலுள்ள இந்தியத் தூதரகம் ஒன்றில் உயரதியாகப் பணியாற்றும் பெண் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டதற்கு இந்திய அரசு கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
அந்தப் பெண் அதிகாரி தமது வீட்டில் பணிப்பெண்ணாக இருந்தவருக்கு பேசிய ஊதியத்தை கொடுக்காமல் இருந்தார் என்றும், அதன் காரணமாக அவர் விசா அனுமதிக்கான விண்ணப்பத்தில் தெரிவித்திருந்த தகவல்களை மீறினார் என்றும் அமெரிக்க அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.தேவயானி கோப்ராகடே எனும் அந்த அதிகாரிக்கு விலங்கிடப்பட்டது மற்றும் ஆடைகளை அவிழ்த்து சோதனை செய்யப்பட்டதும் இந்தியத் தரப்பை மிகவும் கோபமுறச் செய்துள்ளது.
அவர் கைது செய்யப்பட்டு அவமானப்படுத்தப்பட்டதாகக் கூறி இந்தியாவில் கட்சி பேதமின்றி அரசியல் தலைவர்களும், சமூக அமைப்புகளும் தமது கடும் கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.
"விரும்பத்தகாத செயல்"இது ஒரு விரும்பத்தகாத செயல் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். இந்தியா இதற்கு தகுந்த பதிலளிக்கும் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் தகுந்த நேரத்தில் எடுக்கப்பட்டு வருவதாகவும், பயனளிக்கும் அழுத்தம் கொடுக்கப்படும் என்றும் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
இதேவேளை டில்லி வந்துள்ள அமெரிக்க நாடாளுமன்றக் குழுவினருடனான சந்திப்பை மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே, நரேந்திர மோடி, ராகுல் காந்தி உட்பட பல முக்கிய பிரமுகர்கள் ரத்து செய்துவிட்டனர். நாடாளுமன்ற சபாநாயகர் மீரா குமாரும் அமெரிக்க குழுவினரை சந்திக்கவில்லை.
பதிலடி நடவடிக்கைகள்
இதனிடையே இந்தியாவிலுள்ள அனைத்து அமெரிக்கத் தூதரக அதிகாரிகளுக்கு வழங்கியுள்ள சில அடையாள அட்டைகளை திருப்பியளிக்குமாறும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் உணவு மற்றும் மதுபானம் உட்பட அனைத்து வகையான பொருட்களை இறக்குமதி செய்யும் சலுகையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.அமெரிக்க தூதரக வாயிலில் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த தற்காப்புத் தடைகளையும் டில்லி காவல் துறை அகற்றியுள்ளது.
இது தவிர அமெரி
க்க தூதரகங்கள் மற்றும் அமெரிக்கப் பள்ளிகளில் பணிபுரிவோரின் வருமானம், வங்கி கணக்குகள், வருமான வரி தகவல்கள் மற்றும் விசா தகவல்களை மத்திய அரசிடம் அளிக்கக் கோரப்பட்டுள்ளது.
இந்தியாவின் இந்த நடவடிக்கைகள் தொடர்பான கேள்விகளுக்கு அமெரிக்க தூதரகத்தில் இருந்து இதுவரை அதிகாரபூர்வ பதில் எதுவும் அளிக்கப்படவில்லை.
அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட இந்தியத் தூதரக அதிகாரி இப்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire