இலங்கையில் போர்க்காலத்தில் பதுங்கிக் கிடந்த இந்து மத அடிப்படைவாத பாம்புகள், தற்போது மெல்ல மெல்ல வெளியில் நடமாடத் தொடங்கி விட்டன. அவை இலங்கையில் வாழும் தமிழர் மத்தியில் தமது மதப் பாசிச விஷக் கருத்துக்களை பரப்பி வருகின்றன. ஏற்கனவே மறவன்புலவு சச்சிதானந்தம் இந்தியாவில் இருந்து சிவசேனையை இறக்குமதி செய்து மத வெறுப்பு அரசியல் செய்து வருகிறார். இலங்கையில் ஏற்கனவே இயங்கி வந்த கம்பன் கழக நிறுவனர் கம்பவாரிதி ஜெயராஜ், தனது உகரம் இணையத் தளத்தில் வர்ணாச்சிரமத்தை ஆதரித்து கட்டுரைகள் எழுதி வருகின்றார்.
ஜெயராஜ் பற்றி விக்கிபீடியா வழங்கும் தகவல்:
//இ. ஜெயராஜ் (பிறப்பு: ஒக்டோபர் 24, 1957) இலங்கையைச் சேர்ந்த இலக்கிய, சமயப் பேச்சாளர் ஆவார்.தமிழ்நாட்டில் இலங்கை ஜெயராஜ் என்றும், இலங்கையில் கம்பவாரிதி ஜெயராஜ் என்றும் அறியப்பட்டு வருகிறார். இலக்கியம், சமயம், தத்துவம் மூன்றும் இவரது அறிவுப்புலங்கள். இராமாயணம், திருக்குறள், சைவசித்தாந்தம் இவரது ஆர்வத்துறைகள். இவர் அகில இலங்கைக் கம்பன் கழகம், யாழ்ப்பாணக் கம்பன் கழகம், கொழும்பு ஐசுவர்ய லட்சுமி தத்துவத் திருக்கோவில் ஆகியவற்றின் நிறுவனரும் ஆவார்.// (
இ. ஜெயராஜ்)
இலங்கைத் தமிழ் மேட்டுக்குடியினரின் இலக்கிய அறிவுப் பசியை தீர்த்து வைக்கும் கம்பன் கழகம், அவர்களது நன்கொடைகளால் ஒரு பணக்கார கழகமாக உள்ளது. அதன் சொத்து மதிப்புகள் பல கோடி இருக்கலாம். மூளை உழைப்பாளிகளான உயர் மத்தியதர வர்க்க அறிவுஜீவிகள், தமக்கும் இலக்கிய தாகம் இருப்பதைக் காட்டுவதற்காக கம்பன் கழகத்துடன் ஏதோ ஒரு வகையில் தொடர்பு படுத்திக் காட்டிக் கொள்வார்கள்.
அது ஒருபுறமிருக்கட்டும். ஜெயராஜின் வர்ணாச்சிரம பிரச்சாரத்திற்கு வருவோம். ஜெயராஜ் தனது "வருணாச்சிரமம் தர்மமா? அதர்மமா?" (
வருணாச்சிரமம் தர்மமா? அதர்மமா? கட்டுரைகளில், வர்ணாச்சிரமம் எத்தகைய "உயர்ந்த தர்மம்" என்று வக்காலத்து வாங்குகிறார்.
தொடக்கத்திலேயே "தான் ஒரு பிராமணன் அல்ல" என்று ஜெயராஜ் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கி விடுகிறார். பிராமணீயம் என்பது ஒரு அரசியல்- சமூகக் கட்டமைப்பாக மாறி ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்னரும், வர்ணாச்சிரம ஆதரவாளர்கள் பிராமணர்களாக மட்டுமே இருப்பார்கள் என்று எதிர்பார்ப்பது சிறுபிள்ளைத்தனமானது.
இது ஓர் அரசியல் தத்துவார்த்த கொள்கை. இன்று ஜெயராஜ் போன்ற பலர் எதற்காக வர்ணாச்சிரமத்தை தூக்கிப் பிடிக்கிறார்கள் என்பது நாம் அறியாதது அல்ல. சிரியாவில் இஸ்லாமிய தேசம் அமைத்தவர்களுக்கும், இந்தியாவில் வர்ணாச்சிரம தேசம் அமைக்க விரும்புவோருக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை.
நூறு வருடங்களுக்கு முன்னரே, கல்வியாளர் அம்பேத்காரும், சிந்தனையாளர் பெரியாரும் தத்தமது அறிவுப்புலத்தில் நின்று வர்ணாச்சிரமத்தை அலசி ஆராய்ந்துள்ளனர். வேதங்கள், மனுநீதி, புராணக் கதைகளை மேற்கோள் காட்டி தமது மறுப்புரைகளை முன்வைத்தனர். அவற்றை இன்றைக்கும் நாம் வாசிக்கும் வகையில், பெரியார், அம்பேத்கார் எழுதிய நூல்கள் திரும்பத் திரும்ப பதிப்பிக்கப் படுகின்றன.
ஜெயராஜ் அவற்றை மேற்கோள் காட்டி தனது எதிர்க்கருத்துகளை முன்வைப்பார் என்று எதிர்பார்த்தால் நமக்குக் கிடைப்பது ஏமாற்றமே. இதுவரையில் ஐந்து பாகங்களாக வந்துள்ள கட்டுரைகளில் எந்த ஒரு இடத்திலாவது, அம்பேத்கார், பெரியார் கூற்றுக்களில் ஒன்றைக் கூடக் காணவில்லை. ஒருவேளை அவற்றில் உள்ள நியாயத்தன்மை ஜெயராஜை மிரட்டி இருக்கலாம். ஆதாரபூர்வமாக எதிர்க்க முடியாது என்பதால் அவர்களது கூற்றுக்களை மேற்கோள் காட்டுவதை தவிர்த்து விடுகிறார். அதற்குப் பதிலாக பொத்தாம்பொதுவாக "புரட்சியாளர்கள்" என்று சாடுகிறார்.
யார் அந்தப் "புரட்சியாளர்கள்"? அம்பேத்கார், பெரியார், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், கம்யூனிஸ்டுகள் ஆகியோரை ஜெயராஜ் ஒரே பக்கத்திற்கு தள்ளி விடுகிறார். இவர்களுக்கு இடையிலான கொள்கை முரண்பாடுகளை கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல் புறக்கணிக்கிறார். அவரது ஒரே பிரச்சினை "இவர்கள் எல்லோருமே வர்ணாச்சிரம எதிர்ப்பாளர்கள்" என்பது மட்டும் தான்.
சரி, ஒரு பேச்சுக்கு அப்படியே இருக்கட்டும். "அந்தணர்கள் தவறு செய்தார்கள், புரட்சியாளர்கள் ஒழுங்காக இருந்தார்களா?" என்று ஜெயராஜ் எதிர்க் கேள்வி கேட்கிறார். ஆனால், இந்த தர்க்கீகத்தில் குறிப்பிடப் படும் அந்தப் "புரட்சியாளர்கள்" அண்ணாத்துரை தலைமையில் இயங்கிய திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும் தான். இதை அவர் வெளிப்படையாக குறிப்பிடா விட்டாலும், அது தான் உண்மை.
ஜெயராஜின் கட்டுரையில்இருந்து:
//ஒரு காலத்தில் பிராமணர்களைக் குற்றம் சாட்டினர். பின்னர் இனத்தையும் மொழியையும் சொல்லி ஆட்சிக்கு வந்தனர். ஆட்சிக்கு வந்தபின்பு,அந்தணர்கள் செய்த குற்றங்களில் ஒன்றையாவது இவர்கள் நிவர்த்தித்தார்களா? பிரிந்து கிடந்த நம் சமுதாயத்தை ஒன்றுபடுத்தி விட்டார்களா? நம் இனம் மீதும் மொழிமீதும் பற்றை வளர்த்திருக்கிறார்களா? ஒழுக்க நிலையில் நம் சமுதாயத்தை உயர்த்தியிருக்கிறார்களா? மற்றைய இனத்தார் நம்மை மதிக்கும்படி நம் சமூகத்தை வளர்ந்திருக்கிறார்களா? ஜாதிச்சண்டை, மதச்சண்டை, இனச்சண்டை, பிராந்தியச் சண்டை,பொய், களவு, சூது, வஞ்சனை, ஊழல், லஞ்சம் என்பவற்றை,முன்பை விடக் குறைத்துவிட்டார்களா?//(ஜெயராஜ்)
முதலில் நாங்கள், திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு சீர்திருத்தவாத இயக்கம், அது ஒரு புரட்சிகர இயக்கம் அல்ல என்ற உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். அது தேர்தலில் போட்டியிட்டு மாநில அரசு அதிகாரத்தை அடைவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருந்தது. நடைமுறையில் உள்ள முதலாளித்துவ- தாராளவாத அரசமைப்பில், பெரும்பான்மை வாக்குகளை பெறுவதற்காக பல்வேறு கட்சிகள் போட்டியிடுகின்றன.அதற்காக இனத்துவ, சாதிய முரண்பாடுகளையும் பயன்படுத்திக் கொள்கின்றன.
தற்போதுள்ள முதலாளித்துவ- தாராளவாத கட்டமைப்பினுள், ஒரு அமைதியான சமூகப் புரட்சி நடப்பதற்கு வாய்ப்புகள் இல்லை. அதற்கு முதலில் அதிகாரக் கட்டமைப்பு தூக்கி எறியப் பட வேண்டும். ஆனால், ஒரு சில மறுசீரமைப்புகள், சீர்திருத்தங்கள் சாத்தியமாகலாம்.
அந்த வகையில், அனைவருக்குமான பொதுக் கல்வி, வேலை வாய்ப்புகள் போன்றவை தான் திராவிட கட்சியினரால் சாதிக்க முடிந்தது. அத்துடன், வணிகத்துறை முதலீடுகள் பெருகியதால் இடைத்தர சாதிகளும் அரசியல் ஆதிக்கம் பெற்றனர். இவை எல்லாம் முதலாளித்துவ- பொருளாதார நலன்களை எந்த வகையிலும் பாதிக்காதவை. அதனால் சாத்தியமானது.
இந்துத்துவாவாத பாஜக, அல்லது ஆர்எஸ்எஸ், தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியைப் பிடித்தாலும் எந்த மாற்றமும் நடக்கப் போவதில்லை. தற்போது இந்தியாவில் பாஜக பிரதமர் நரேந்திரமோடியின் ஆட்சி நடக்கிறது. மோடி கம்பவாரிதி ஜெயராஜை விட மிகவும் தீவிரமான வர்ணாச்சிரம ஆதரவாளர். அவரது ஆட்சிக் காலத்தில் தேனாறும், பாலாறும் ஓடவில்லை.
ஜெயராஜ் திராவிட கட்சியினரிடம் கேட்ட அதே கேள்வியை பாஜக வை நோக்கியும் கேட்கலாம்: "ஒரு காலத்தில் திராவிட இயக்கத்தினரை குற்றம் சாட்டினார்கள். பின்னர் வர்ணாச்சிரமத்தையும், மதத்தையும் சொல்லி ஆட்சிக்கு வந்தனர். ஆட்சிக்கு வந்தபின்பு,திராவிடர்கள் செய்த குற்றங்களில் ஒன்றையாவது இவர்கள் நிவர்த்தித்தார்களா? பிரிந்து கிடந்த நம் (இந்து) சமுதாயத்தை ஒன்றுபடுத்தி விட்டார்களா?...." இப்படி கேட்டுக் கொண்டே இருக்கலாம். ஆனால் அவர் கேட்க மாட்டார்.
கம்பவாரிதி ஜெயராஜ் பிரதமராக வந்தாலும் நாட்டில் எந்த மாற்றமும் நடக்காது என்பது தான் உண்மை. ஏனென்று கேட்டால் முதலாளித்துவ - தாராளவாத ஜனநாயகக் கட்டமைப்பு சொத்துடமை வர்க்கத்தை பாதுகாப்பதற்காக மட்டுமே உருவாக்கப் பட்டது. ஜாதிச்சண்டை, மதச்சண்டை, இனச்சண்டை, பிராந்தியச் சண்டை, இவையெல்லாம் இருக்கவே செய்யும். உழைக்கும் வர்க்க மக்களை ஒன்று சேர விடாமல் தடுப்பதற்கு இவையெல்லாம் ஆளும்வர்க்கத்திற்கு உதவுகின்றன. பொய், களவு, சூது, வஞ்சனை, ஊழல், லஞ்சம் போன்றன இல்லாமல் முதலாளித்துவ பொருளாதாரம் இயங்குவதில்லை. பொய், களவு, சூது, இல்லாமல் உலகில் எந்த முதலாளியும் செல்வம் சேர்க்க முடியாது.
இந்திய உபகண்டத்தில் ஆரிய இனத்தவர் மேலாதிக்கம் பெற்றது எப்படி என்பதை மானிடவியல் அறிஞர்கள் ஆய்வு செய்து பல நூல்களில் எழுதி இருக்கிறார்கள். அது எதையும் வாசித்திராத ஜெயராஜ், அடக்கப் பட்ட மக்கள் மீது பழி போடுகின்றார். இது "Blame the Victim" என்று ஆங்கிலத்தில் சொல்வதைப் போன்று, பாதிக்கப் பட்டவர்களை குற்றவாளிக் கூண்டில் ஏற்றும் நயவஞ்சகத்தனம்.
ஜெயராஜின் கட்டுரையில் இருந்து:
//நமது வீழ்ச்சிக்கும் நம் இனத்தின் வீழ்ச்சிக்கும் மற்றவர்கள் காரணரல்லர். நாமேதான் காரணர்களாய் இருந்திருக்கிறோம். பெரும்பான்மை இனமொன்று சிறுபான்மை இனத்தை ஆள்வதில் ஆச்சரியம் இல்லை. ஆனால் சிறுபான்மையினர் பெரும்பான்மையை ஆண்டிருக்கிறார்கள். அது எப்படிச் சாத்தியமாயிற்று? நம் பலவீனம் தான் அவர்களைப் பலப்படுத்தியிருக்கிறது. இன்றும் நம் பலத்தை வளர்க்காமல் மற்றவர்கள் பலவீனத்தைச் சொல்லிக்கொண்டிருக்கிறோம். ஏதிலார் குற்றத்தை அகழ்ந்து அகழ்ந்து காணுகிற நாங்கள், நம் குற்றம் காணத் தயங்கி நிற்கிறோம்.// (ஜெயராஜ்)
இதற்கு அண்மைய காலனிய வரலாற்றில் இருந்து பதிலளிக்கலாம். சிறுபான்மை இனமான ஆங்கிலேயர்கள், பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் என்ற பெயரில் உலகில் அரைவாசியை ஆண்டது எப்படி? உள்நாட்டு இனங்களின் பலவீனம் மட்டும் அதற்கு காரணம் அல்ல. துப்பாக்கிகள், பீரங்கிகள் போன்ற நவீன போர்க்கருவிகள் காரணமாக இருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக சூழ்ச்சிகள், துரோகங்கள் காரணமாக இருந்துள்ளன.
ஆரம்ப காலத்தில் அமெரிக்காவில் குடியேறிய ஆங்கிலேயர்கள் செவ்விந்திய இனங்களுடன் ஒற்றுமையாக வாழ்ந்தார்கள். செவ்விந்திய பெண்களை திருமணம் செய்து குடும்பம் நடத்தினார்கள். வணிகம் செய்து சமாதானமாக வாழ்ந்தார்கள். ஆனால், பிற்காலத்தில் அவர்களது பிரதேசங்களை ஆக்கிரமிக்கத் தொடங்கினார்கள். யுத்தம் நடந்தது. இனப்படுகொலை நடந்தது. சமாதான ஒப்பந்தம் செய்தார்கள். பின்னர் அதை கிழித்தெறிந்து விட்டு யுத்தம் செய்தனர். அவ்வாறு தான் அமெரிக்கா முழுவதும் ஆங்கிலேய மயமாகியது.
ஐநூறு வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் நடந்த ஆக்கிரமிப்புக் கதை, ஐயாயிரம் வருடங்களுக்கு முந்திய இந்தியாவில் நடந்திருக்கலாம் அல்லவா? அதற்கான ஆதாரம் வேதங்களில் இருக்கிறது. குறிப்பாக ரிக் வேதத்தில், அன்று நடந்த இனப்படுகொலைகள் பற்றி வெளிப்படையாகவே எழுதப் பட்டுள்ளது.
ஆரிய குலத் தலைவனான இந்திரன், எத்தனை ஆயிரம் கிராமங்களை கொளுத்தினான், எத்தனை ஆயிரம் பேரை படுகொலை செய்தான், எத்தனை ஆயிரம் கால்நடைகளை கொள்ளையடித்தான் என்பன போன்ற விபரங்கள் விலாவாரியாக எழுதப் பட்டுள்ளன. இந்திரனால் ஆக்கிரமிக்கப் பட்ட பிரதேசங்களை சேர்ந்த மக்கள் அடிமைகளாக்கப் பட்டனர். ரிக் வேதம் அவர்களை தாசர்கள், அதாவது அடிமைகள் என்று குறிப்பிடுகின்றது.
பிராமணர்கள் (அந்தணர்கள்) தமது "தவறுகளை" உணர்ந்து திருந்தி விட்டார்களாம். அது என்ன "தவறு"? ஜெயராஜ் ஒரு நகைப்புக்குரிய விளக்கம் தருகிறார்:
//தங்களைப் போலவே மாறி தங்கள் வழியில் வரத் தலைப்பட்ட,இயல்பான ஆற்றலோடு இருந்த பிராமணனுக்கு,வெள்ளைக்காரர்கள் நிறைய உத்தியோகங்களைக் கொடுத்தார்கள். இப்போதுதான் பெரிய தீங்கு உண்டாயிற்று. அதுவரை காலமும் தத்தமக்கென ஒரு தொழிலை நிர்ணயித்து, வாழ்வின் தேவைகள் பற்றிக் கவலையில்லாமல் இருந்து வந்த மற்றையவரும், பிராமணனைப் பார்த்து பரம்பரை பரம்பரையாகச் செய்த தொழிலை விட்டுவிட்டு,வெள்ளைக்காரர்கள் காட்டிய பிறதொழில்களில் போய் விழுந்தனர்.... அதுவரை தன் சுயதர்மத்தை விடாத பிராமணன்,வெள்ளைக்காரனின் புரட்டை நம்பி அதனைக் கைவிட்டான். வெள்ளைக்காரனைப் போலவே ‘டிப்டொப்பாக டிறஸ்’செய்துகொண்டு,சிகரட் குடிக்கவும் ‘டான்ஸ்’ ஆடவும் பழகிக்கொண்டான். தங்களைப் போலவே மாறி தங்கள் வழியில் வரத் தலைப்பட்ட, இயல்பான ஆற்றலோடு இருந்த பிராமணனுக்கு,வெள்ளைக்காரர்கள் நிறைய உத்தியோகங்களைக் கொடுத்தார்கள்.// (ஜெயராஜ்)
கம்ப இராமாயண சொற்பொழிவாற்றும் "அறிஞர்"ஜெயராஜ், இந்தளவு பாமரத்தனமாக எழுதுவது ஏமாற்றத்தை தருகின்றது. நுனிப்புல் மேயும் செம்மறி ஆடுகளுக்கு பதில் அளிக்க வேண்டுமா என்ற ஆயாசம் ஏற்படுகின்றது. வெள்ளைக்காரர்கள் வருவதற்கு முன்னர், இந்தியாவில் பல நூறாண்டுகளாக இஸ்லாமிய மொகலாயரின் ஆட்சி நடந்தது. அப்போது இந்த பிராமணர்கள் சீரழியவில்லையா? தமது சுயதர்மத்தை கைவிடவில்லையா? ஆரம்ப கால இஸ்லாமிய படையெடுப்புகளின் பொழுது இஸ்லாமிய மதத்தை தழுவிக் கொண்ட பிராமணர்கள், இன்றைக்கும் பாகிஸ்தானில் வாழ்கிறார்கள். அங்கேயும் அவர்கள் தான் உயர்ந்த ஆதிக்க சாதி.
உண்மையில் வெள்ளையரின் வருகை, இந்து- பிராமணர்களுக்கு அரசியல் மேலாதிக்கம் பெறுவதற்கான வாய்ப்புகளை வழங்கியது. மொகலாயர் காலத்திலும் பிராமணர்களுக்கு தானங்கள் வழங்கப் பட்டன. சில பிராமணர்கள் அரசவை உத்தியோகங்களிலும் இருந்திருக்கின்றனர். இருப்பினும் அரசியல், பொருளாதாரம் முழுவதும் முஸ்லிம் மேட்டுக்குடியினரின் கைகளில் இருந்தது. அரசு நிர்வாகங்களில், உள்நாட்டு/சர்வதேச வணிகத்தில் பாரசீக மொழி பேசிய முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்தினர்.
ஆங்கிலேய காலனிய காலத்தில், பிராமணர்கள் அந்நிய ஆக்கிரமிப்பாளர்களுடன் ஒத்துழைத்தார்கள். ஆங்கிலேய காலனியாதிக்கவாதிகளுக்கு விசுவாசமாக நடந்து பதவிகளை பெற்றுக் கொண்டனர். இது தக்கன பிழைக்கும் தந்திரம். அதிகாரத்தில் உள்ளவர்களுடன் ஒட்டி உறவாடுவதன் மூலம், தன்னலம் சார்ந்த நன்மைகளை பெற்றுக் கொள்ளும் தந்திரம். இது கலாச்சார சீரழிவு அல்ல. மாறாக காட்டிக்கொடுக்கும் கபட அரசியல்.
மொகலாயர் காலத்தில், பிராமணர்கள் அவர்களைப் போன்றே நடை, உடை, பாவனைகளை பின்பற்றினார்கள். ஒரு சில விதிவிலக்குகளை தவிர, பெரும்பாலான பிராமணர்கள் மதம் மாறவில்லை. உண்மையில் அதற்கு தேவை இருக்கவில்லை. மொகலாயர்கள் இந்தியா முழுவதும் தீவிரமான இஸ்லாமியமயமாக்கலை நடைமுறைப் படுத்தவில்லை. இந்துக்கள் வரி கட்டி விட்டு தம் பாட்டில் வாழ்வதற்கு அனுமதிக்கப் பட்டது. இஸ்லாமியர் அல்லாதவர்களை "இந்திய மதத்தவர்" என்ற அர்த்தத்தில், இந்துக்கள் என்ற பெயர் சூட்டியதே மொகலாயர் தான்.
ஆகவே, மொகலாயர் காலத்தில் மொகலாயர் மாதிரி வாழ்ந்த பிராமணர்கள், ஆங்கிலேயர் காலத்தில் ஆங்கிலேயர் மாதிரி வாழத் தலைப்பட்டதில் வியப்பேதும் இல்லை. ஒவ்வொரு சமூகப் பிரிவினரும் தனக்கு மேலே இருப்பவர்களை பார்த்து தானே பாவனை செய்து கொள்கிறார்கள்? அதைத் தானே "நாகரிகம்" என்கிறார்கள்? அது வழமை தானே?
நமது "கம்பவாரிதி" ஜெயராஜ், ஆங்கிலேயர் கொண்டு வந்த வாழ்க்கை வசதிகளை பின்பற்றவில்லையா? வெள்ளவத்தையில் உள்ள கம்பன் கழகத்திற்கு வெள்ளைக்காரன் அறிமுகப் படுத்திய காரில் வந்து பேசி விட்டுப் போகிறார். வர்ணாச்சிரம தர்மப் படி மாட்டு வண்டிலில் வராத படியால், ஜெயராஜ் சீரழிந்து விட்டார், தவறிழைத்து விட்டார் என்று அர்த்தமா?
இந்தியாவில் மன்னராட்சி அல்லது நிலப்பிரபுத்துவம் இருந்த காலத்தில் வேதம் ஓதிக் கொண்டிருந்த அந்தணர்கள், எப்போதும் அப்படியே இருந்திருக்க வேண்டுமா? அவர்களும் நாகரிக மாற்றத்திற்கு ஏற்றவாறு மாறிக் கொண்டிருப்பார்கள் அல்லவா? கோவணம் மட்டும் கட்டியிருந்த காட்டுவாசிகள், சட்டை, காற்சட்டை போட்டால் அதை நாகரிகம் என்கிறீர்கள். அதே மாதிரி, பிராமணர்களும் நாகரிகம் அடைந்தார்கள். அதிலென்ன தவறு?
ஒன்றை மட்டும் மறந்து விடாதீர்கள். பிராமணர்கள் வெள்ளையரை பின்பற்றி தம்மை மாற்றிக் கொண்டிரா விட்டால், அவர்கள் இன்றைக்கு சமூகத்தில் மிகவும் தாழ்ந்த நிலையில் இருந்திருப்பார்கள். முன்பு கீழே இருந்த சாதிகள், ஆங்கிலேய காலனியாதிக்கவாதிகள் கொடுத்த வாய்ப்புகளை பயன்படுத்தி உயர்ந்த நிலைக்கு வந்திருப்பார்கள். இந்த உண்மை தெரிந்த படியால் தான், "வெள்ளைக்காரன் மாதிரி டான்ஸ் ஆடப் பழகிய" பிராமணர்கள், இன்றைக்கும் மேன் நிலையில் இருக்கிறார்கள். இது கலாச்சார சீரழிவு அல்ல, சமூக அரசியல் மாற்றம்.
(தொடரும்)