mardi 21 février 2017

தமிழகத்தில் மறுதேர்தல் நடத்த : கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி:

சிங்கமில்லாக் காடு
செங்கோல் வாங்கிய சிங்கமொன்று
ஜெயமாய்க் காட்டை ஆண்டது
மறுமுறை ஆட்சியைப் பிடித்தபின்னும்
மர்மமாய் அதுவும் மாண்டது
உடனிருந்த கள்ள நரியொன்றின்
உள்ளத்தில் ஆசையோ மூண்டது
புசிக்கலாம் இந்தக் காட்டையென்றே
புதிய வேடம் பூண்டது!
வேரில் ஊற்றிய வெந்நீராய்
வெடுக்கெனப் பதவியைப் பறித்ததனால்
திடுக்கிட்டுத் திருந்திய ஓநாயோ
தியான நாடகம் போட்டது!
ஊரில் உள்ள உத்தமர்கள்
ஒன்றாய்ச் சேர்ந்திட வேண்டுமென
தேரில் தன்னை ஏற்றிடவே
திருடர்கள் துணையைக் கேட்டது!
அத்தை மறைந்த நல்வாய்ப்பில்
தத்தை ஒன்றும் கிளையமர்ந்து
விழியில் தீபம் ஏற்றியே
வித்தைக் காட்டத் தொடங்கியது!
நத்தை வேகத்தில் நகர்ந்தவொரு
சொத்தை வாங்கிய வழக்கினது
திருத்தி எழுதிய தீர்ப்பாலே
நரியின் கனவோ முடங்கியது!
காட்டைக் காக்கத் தேர்ந்தெடுத்த
அடிமை விலங்குகள் ஓரிடத்தில்
அவரவர் வேலையை மறந்துவிட்டு
அடைபட்டுக் கிடந்து வியர்த்தனவே!
காசை வாங்கி வாக்களித்த
கானகத்து உயிர்களெல்லாம்
ஆசை வெறுத்த மனத்துடனே
அடுத்தடுத்த நாடகம் பார்த்தனவே!

– கமல்ஹாசன் கமல்ஹாசன் அளித்த பேட்டி: நான் அரசியலில் இல்லை. எந்தக் கட்சியையும் ஆதரிக்கவில்லை. ஊழலுக்கு எதிரான என் கசப்புணர்வை அவ்வப்போது வெளிப்படுத்தி வந்திருக்கிறேன். ஆரம்பத்தில் நான், குற்றப் பின்னணி கொண்ட கும்பல் என்று சொன்னபோது, அது அரசியல் சார்பில்லாத ஒருவனின் கோபமாக கருதப்பட்டது. இப்போது வந்துள்ள உச்சநீதிமன்ற தீர்ப்பு அதை உறுதிப்படுத்தி இருக்கிறது. சசிகலா மட்டுமின்றி, ஜெயலலிதாவும் குற்றவாளி என உச்சநீதிமன்றம் தெரிவித்து இருக்கிறது.


சட்டப்பேரவையை சுத்தம் செய்ய வேண்டும். மாறாக, பரிசோதிக்கக் கூடாது. எனவே, மறுதேர்தல் நடத்த வேண்டும். இப்போது மக்கள் தங்கள் கருத்தை தெளிவாக வெளிப்படுத்த முடியவில்லை. காரணம், தற்சமயம் கவுன்சிலர்கள் மூலமும், எம்எல்ஏக்கள் மூலமும் பேச வேண்டியிருக்கிறது. மறுதேர்தல் வைத்தால், தங்கள் மனதில் உள்ளதை வெளிப்படையாக மக்கள் உணர்த்துவார்கள். மறுதேர்தல் என்பது மக்களுக்குச் செலவு வைக்கக்கூடிய ஒன்றுதான். ஆனால், என்ன செய்வது? தரையில் பாலைக் கொட்டிவிட்டோம். அதைச் சுத்தம் செய்ய வேண்டும். எனவே, மறுதேர்தல் வைத்து, மீண்டும் பால் கறக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனக்கு அரசியலுக்கு வர பயமாக இருக்கிறது. காரணம், நாம் வேறுவிதமான சிந்தனை கொண்ட மக்கள். இந்தியாவுக்கு இப்போதுள்ள அரசியல் தேவையில்லை. நான் மிகவும் கோபக்காரன். இந்தியாவுக்கு என்னைப் போன்ற கோபக்கார அரசியல்வாதிகள் வேண்டாம். சமநிலை கொண்ட மனிதர்கள்தான் அரசியலுக்கு தேவை. நான் எப்படி கோபமாக இருக்கிறேனோ, அதுபோலவே மக்களும் இருக்கிறார்கள். நல்ல அரசியல்வாதிகளை தேடிப் பாருங்கள். அத்தகைய மனிதர்களை எல்லா நேரமும் சட்டமன்றத்திலோ அல்லது நாடாளுமன்றத்திலோ காண முடியாது.

சில நேரம் வீதியில் கூட அத்தகைய மனிதர்களை நீங்கள் கண்டுபிடிக்க முடியும். மெரினாவில் நடந்ததைப் போல் இன்னொரு திட்டமிடப்பட்ட ஒடுக்குமுறை நிகழ்ந்தால், நிச்சயம் மக்கள் கொந்தளிப்பார்கள். அப்படியொரு நிலை ஏற்படும்வரை நாம் காத்திருக்க வேண்டாம் என்றார்.

ப்ளஸ்: ஒரு மாநில சட்டசபையை நடத்த முடியாத சூழலில் கவர்னர் அவையை முடக்கி வைக்க நடவடிக்கை எடுக்கலாம். முடக்குவதால் பயனில்லை என்ற சூழலில் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 356வது விதியின் கீழ் அரசை கலைக்கலாம் என்று கவர்னர் குடியரசு தலைவருக்கு பரிந்துரைக்கலாம். அதற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்குவார்

Aucun commentaire:

Enregistrer un commentaire