கேப்பாபுலவு மக்கள் போராட்டம் நியாயமானது எனத் தெரிவித்துள்ள தென் மாகாண சபை உறுப்பினர் பத்தேகம சமித்த தேரர் மக்களின் பிரச்சினையை தென் பகுதி மக்களுக்கு தெளிவுபடுத்துவதாகவும் உறுதியளித்துள்ளார்.
தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த இரு வாரங்களாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கேப்பாபுலவு மக்களை நேற்றைய தினம் சந்தித்து கலந்துரையாடிய பத்தேக சமித்த தேரர் உள்ளிட்ட குழுவினர் அவர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து கொண்டனர்.
இந்த சந்தர்ப்பத்திலேயே பத்தேக சமித்த தேரர் இந்த விடயத்தை தெரிவித்ததோடு, கேப்பாபுலவு மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண தம்மாலான பங்களிப்பினை வழங்குவதாகவும் உறுதியளித்தார்.
இந்த நாட்டில் கடந்த காலங்களில் சிங்கள மக்கள் தனியாகவும், தமிழர்கள் தனியாகவும் போராட்டங்களை முன்னெடுத்தனர். அவரவர் தனித்தனியாக வாழ்ந்தனர்.
எனினும் எங்களைப் பொறுத்தவரை தமிழ் மக்கள் சிங்கள மக்களின் பிரச்சினைகளையும், சிங்கள மக்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளையும் புரிந்துகொள்ள வேண்டும். ஒன்றிணைந்து பேசி பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டும்.
தனித்தனியாக இனவாத அடிப்படையில் செயற்படுவதால் பிர்ச்சினைகளுக்கு தீர்வுகாண முடியாது. கடந்த காலங்களில் இந்த தவறுகளே நடந்தேறின. பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை இனவாத அடிப்படையில் நோக்கக்கூடாது.
30 வருட யுத்தத்தின்போது அனைவரும் பாதிக்கப்பட்டோம். அனைவரும் தோல்வியடைந்தோம். வெற்றிபெற்றவரென்று யாருமில்லை. இந்த பிரச்சினைக்கு உடனடித் தீர்வினை வழங்க முடியாது. வடக்கில் ஒரு கருத்தையும் தெற்கில் ஒரு கருத்தையும் வெளியிட என்னால் முடியாது.
இந்த மக்கள் பாரிய பிரச்சினைக்கு முகம்கொடுத்திருப்பதை நான் அறிவேன். எனினும் தகவல் பரிமாற்றத்தில் தமிழ் சிங்கள மக்களிடையே பாரிய இடைவெளி காணப்படுகின்றது.
இனவாதத்தை இரண்டு பக்கங்களிலும் நிராகரித்து மக்களோடு இணைந்து செயற்பட வேண்டுமென்பதே எனது நிலைப்பாடு. இந்த பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி, பிரதமருக்கு தெளிவுபடுத்த நான் முயற்சிக்கின்றேன். எதிர்காலத்தில் ஸ்ரீலங்கா பிரஜைகளாக ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பில் சிந்திக்க வேண்டும். கடந்த காலத்தில் நடைபெற்ற தவறு எதிர்காலத்தில் நடைபெறாத வகையில் செயற்பட வேண்டும்.
சில இனவாத அரசியல்வாதிகளைப் போல் தீர்மானங்களை மேற்கொள்ள முடியாது. நடுநிலையாக தீர்மானங்களை மேற்கொள்வது தொடர்பில் சிந்திக்க வேண்டும்.
இந்த பிரச்சினையை நாம் நிச்சயம் தெற்கிற்கு எடுத்துச்செல்வோம். எங்களால் முடியுமான உதவிகளை நாம் செய்வோம். அனைவருக்கும் பிரச்சினைகள் காணப்படுகின்றன. ஆகவே தீர்வுகளை பெற்றுக்கொள்ள அமைதியாக செயற்பட வேண்டும் எனத் தெரிவித்தார்
Aucun commentaire:
Enregistrer un commentaire