samedi 11 juillet 2015

தன்மானத்தை காத்துக் கொள்வதற்காக கணவனை கவுரவக்கொலை செய்த இளம்பெண்

உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அடிக்கடி பிற சாதிக்காரர்களை காதலிப்பவர்களையோ, திருமணம் செய்தவர்களையோ அவர்களது குடும்பத்தினர் கொன்று விடுவது வாடிக்கையாகி விட்டது. குடும்பத்தின் கவுரவம் பறிபோகாமால் காப்பாற்றவே இந்த காட்டுமிராண்டித்தனமான செயல்களை செய்ததாக அவர்கள் கூறுவதால் இவ்வகையிலான கொலை ‘கவுரவக்கொலை’  என்று ஊடகங்களால் வர்ணிக்கப்படுகின்றது.
தொடர்ந்து, எத்தனை காலத்துக்குதான், ஆண்களே பெண்களை கவுரவக்கொலை செய்வது? என்ற கேள்விக்கு விடையளிக்கும் விதமாக துருக்கி நாட்டை சேர்ந்த ஒரு பெண் இதற்கு மாறாக தனது கவுரவத்தையும், தன்மானத்தையும் காத்துக் கொள்வதற்காக கணவனையே சுட்டுக் கொன்றுள்ளார்.
சிலெம் காராபுலுட்(28) என்னும் அந்த பெண், அவரது கணவர் ஹாசன் காராபுலுட்(33) என்பவரை வீட்டிலிருந்த துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதற்காக போலீசார் கைது செய்தனர். ஒன்றரை வயது பெண் குழந்தையின் தாயான சிலெம், இதுபற்றிய தகவல் கொடுத்துவிட்டு தானே முன்வந்து போலீசாரிடம் சரணடைந்தார்.
அவர்களிடம் சிலெம் அளித்த வாக்குமூலத்தில், எப்போதும் ஏன் பெண்களே கொல்லப்பட வேண்டும்? நான் என்னுடைய கவுரவத்தைக் காத்துக்கொள்ளும் முயற்சியில் என் கணவரைக் கொலை செய்தேன்’ என துணிச்சலுடன் கூறியுள்ளார்.
அவர் என்னை தொடர்ந்து அடித்து, உதைத்து சித்ரவதை செய்துகொண்டு இருந்தார். இதுதவிர, போதை பழக்கத்துக்கு அடிமையாக்கி விபச்சாரத்தில் ஈடுபடுத்தப் போவதாக மிரட்டி வந்தார். இந்த வழிகளில் சென்றால் எனது கவுரவம் பாழாகி விடும் என்று தீர்மானித்து அவரை சுட்டுக் கொன்றேன் எனவும் தனது வாக்குமூலத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
துருக்கியில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. பல காலமாக, பெண்கள் அவர்களது கணவராலோ அல்லது உறவினராலோ கொலை செய்யப்பட்டு வருகின்றனர். கடந்த 2014-ஆம் ஆண்டு மட்டும் 286 பெண்கள் கொல்லப்பட்டனர். இந்த ஆண்டு துவக்கத்திலிருந்து இதுவரை 160 பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவற்றுக்கு நேர்மாறாக கொடுமைக்கார கணவனை மனைவியே சுட்டுக் கொன்ற சம்பவம் அங்கே அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Aucun commentaire:

Enregistrer un commentaire