வானத்தில் இடி இடித்தால் மற்ற பறவைகள் இடிக்கு அஞ்சி நடுங்கும் போது, அந்த இடியை விட அதிக உயரத்தில் பறக்கும் கழுகின் மீது புத்திசாலி காகம் ஒன்று லிப்டு கேட்டு(?) சவாரி செய்த புகைப்படம், சமூக ஊடகங்களில் தற்போது தீயாகப் பரவி வருகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த புகைப்படக் கலைஞரான பூ சான் (50) சமீபத்தில் வாஷிங்டன் கடற்கரையில் வானத்தை மெய் மறந்து ரசித்துக் கொண்டிருந்தார். அப்போது வானில் வட்டமடித்து வந்த பெரிய கழுகின் மீது சிறிய காகம் ஒன்று சவாரி செய்ததைப் பார்த்து ஆச்சரியமடைந்த சான், அதை அப்படியே தனது ஒளிப்படக்கருவியில் தத்ரூபமாகப் புகைப்படம் எடுத்து, இணைய தளங்களில் அதனை வெளியிட்டார். இந்தப் புகைப்படத்திற்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தப் புகைப்படம் குறித்துச் சான் கூறுகையில், “ஒரு இரை தேடிக்கொண்டிருக்கும் கழுகைப் படம் பிடிக்க கேமராவின் கண்கள் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது, நான் பார்த்துக் கொண்டிருந்த கழுகின் அருகே காகம் ஒன்று பின்புறம் பறந்து வந்தது. முதலில் நான் அது, கழுகிற்குப் பயந்து முந்திக் கொண்டு பறந்து விடும் என்று தான் நினைத்தேன். ஆனால் நான் எதிர்பார்க்காத தருணத்தில் அந்தக் காகம் தரையில் இறங்குவது போல கழுகின் முதுகுப்பகுதியில் போய் இறங்கியது. ஒரு சில வினாடிகள் அந்தக் காகம், கழுகின் மீது இலவச சவாரி செய்தது. எதிர்பாராமல் நடந்த இந்த காகத்தின் செயல் எனக்கு ஆச்சரியத்தை அளித்தாலும், அதைவிட ஆச்சர்யம் கழுகிடம் எந்த மாற்றமும் இல்லாததுதான்.” என்று கூறி சிரிக்கிறார் சான்.
Aucun commentaire:
Enregistrer un commentaire