mercredi 26 août 2015

இலங்கையில், 2009ல், நடந்த சண்டையில் ஐ.நா.,வில் ஆதரவு அமெரிக்க அரசு...பல்டி

இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டை பின்பற்றிவந்த அமெரிக்கா, அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, திடீர், 'பல்டி' அடித்துள்ளது. இலங்கைக்கு ஆதரவாக, ஐ.நா., வில் தீர்மானம் கொண்டு வரப் போவதாக அறிவித்துள்ளது.

இலங்கையில், 2009 ல், நடந்த சண்டையில், மனித உரிமை மீறல்கள் நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக, சர்வதேச விசாரணை நடத்தக்கோரி, ஐ.நா ,, மனித உரிமை கவுன்சிலில், அமெரிக்கா சார்பில் கொண்டுவரப்பட்ட தீர்மானம், கடந்தாண்டு நிறைவேறியது. இந்நிலையில், இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, மைத்ரிபால சிறிசேன, அதிபராக பதவியேற்றுள்ளார். இதையடுத்து, இலங்கையுடன் மோதல் போக்கை பின்பற்றி வந்த அமெரிக்கா, தற்போது, ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

இலங்கை வந்துள்ள, மத்திய மற்றும் தெற்காசிய நாடுகளுக்கான, அமெரிக்க வெளியுறவு துறை இணை அமைச்சரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான, நிஷா தேசாய் பிஸ்வால்,
செய்தியாளர்களிடம் கூறியதாவது: இலங்கையில் நடந்ததாக கூறப்படும் மனித உரிமை மீறல் பிரச்னைகளுக்கு தீர்வு காண, புதிதாக பதவியேற்ற அரசுக்கு, போதிய வாய்ப்பு அளிக்க வேண்டும். போர்க்குற்றம் தொடர்பான விசாரணையை இலங்கை அரசே நடத்தும் வகையிலான தீர்மானத்தை, அடுத்த மாதம் நடக்கவுள்ள, ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில் தாக்கல் செய்ய, அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக, சர்வதேச நாடுகளுடன் ஏற்கனவே பேச்சு நடத்தப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் பிற நாடுகளுடன் இணைந்து, இந்த தீர்மானத்தை கொண்டுவர முடிவு செய்யப்பட்டு உள்ளது. இலங்கையில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. அரசியல் நிகழ்வுகளும் மாறியுள்ளன; இதை, அமெரிக்கா உணர்ந்துள்ளது. இதை எதிரொலிக்கும் வகையில், அமெரிக்காவின் தீர்மானம் இருக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.

இலங்கையில் நடந்த போர்க்குற்றம் தொடர்பான அறிக்கையை, ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில், இலங்கை தாக்கல் செய்யவுள்ளது. இந்நிலையில், இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டை அமெரிக்கா எடுத்துள்ளது, சர்வதேச அளவில் பரபரப்பையும், ஆச்சர்யத்தையும்
ஏற்படுத்தியுள்ளது.

ஏன் இந்த மாற்றம்? சர்வதேச அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது: ராஜபக் ஷே, இலங்கை அதிபராக இருந்தபோது, சீனாவுடன் நெருக்கமான உறவு வைத்திருந்தார். இலங்கையில் உள்ள ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த ஹம்பன்தோட்டாவில், பிரம்மாண்டமான துறை
முகத்தை அமைக்க, சீனாவுக்கு அனுமதி அளித்தார்.

இலங்கை கடல் பகுதிக்குள், சீன போர்க்கப்பல்கள் வருவதற்கும் அனுமதி அளித்தார். இதனால், 'இந்திய பெருங்கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்கும்' என, கருதிய அமெரிக்கா, இலங்கைக்கு எதிராக காய் நகர்த்தியது. இலங்கைக்கு எதிராக, ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்ததற்கு, இதுவே காரணமாக கூறப்பட்டது.

தற்போது, இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதிபராக பதவியேற்றுள்ள மைத்ரிபால சிறிசேன, சீனாவுடனான உறவில், ஆர்வம் காட்டவில்லை. இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் நட்புடன் இருக்க விரும்புகிறார். இதனால், அமெரிக்காவும், இலங்கை விஷயத்தில், தன் நிலைப்பாட்டை மாற்றியுள்ளது. இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ரூ .6.5 கோடி உதவி: இலங்கையில் உள்நாட்டு போரால் இடம் பெயர்ந்த தமிழர்களை மறுகுடியமர்த்தும் பணி, வேகமாக நடந்து வருகிறது. திரிகோணமலை மாவட்டம், சாம்பூரில், மறுகுடியமர்த்தும் பணிகள் சமீபத்தில் துவக்கி வைக்கப்பட்டன. இந்த பணிகளுக்காக, 6.5 கோடி ரூபாய் அளிக்க, அமெரிக்கா முன்வந்துள்ளது. அமெரிக்காவின் நிதியில், சாம்பூரில், பள்ளி, மருத்துவமனை, வணிக வளாகங்கள் ஆகியவை கட்டப்படவுள்ளன.

முந்தைய தீர்மானம் என்ன?

* இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரில், மனித உரிமை மீறல்கள் நடந்ததாக புகார் எழுந்தது.
* இது தொடர்பாக, விரிவான, சர்வதேச விசாரணை நடத்தக் கோரி, இலங்கைக்கு எதிராக, 2014 மார்ச்சில், ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில், அமெரிக்கா சார்பில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
* இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக, அமெரிக்கா உட்பட, 23 நாடுகள் ஓட்டளித்தன.
* பாகிஸ்தான், ரஷ்யா, சீனா உட்பட, 12 நாடுகள், தீர்மானத்துக்கு எதிராக ஓட்டளித்தன.
* இந்தியா உட்பட, 12 நாடுகள் ஓட்டெடுப்பில் பங்கேற்கவில்லை. 23 நாடுகள் ஆதரவுடன்
தீர்மானம் நிறைவேறியது.

Aucun commentaire:

Enregistrer un commentaire