samedi 5 décembre 2015

வெள்ளப் பெருக்கு, திட்டமிடப்படாத அறிவியல் மற்றும் சுற்றுச்சுழலுக்கான நகரமயமாக்கலின் விளைவே

பெரும் வெள்ளப் பெருக்கு, திட்டமிடப்படாத வகையில் நடந்துள்ள நகரமயமாக்கலின் விளைவே என்று இந்தியாவின் அறிவியல் மற்றும் சுற்றுச்சுழலுக்கான மையம் கூறியுள்ளது.

Image captionவிளை நிலங்களில் வீடுகளை கட்டியதால் பலர் வெள்ளத்தில் சிக்கினர்

கடந்த நூறாண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்துள்ள மழை நகரை முழுமையாகப் நிலைகுலையச் செய்துள்ளது என செண்டர் ஃபார் சயன்ஸ் அண்ட் என்விரோன்மெண்ட் அமைப்பின் தலைமை இயக்குநர் சுனிதா நரெயின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இயற்கையான நீர்நிலைகளை பராமரிப்பது தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படாதது, தற்போது சென்னையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு முக்கியமான காரணம் என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Image copyrightbbctamil
Image captionசிறிய சாலைகள் கூட வெள்ள நீரில் மூழ்கியுள்ளன

சென்னை மட்டுமல்லாமல் டில்லி,கொல்கத்தா, மும்பை, ஸ்ரீநகர் ஆகிய நகரங்களும் இத்தகைய நெருக்கடியை எதிர்கொள்ளும் அபாயம் உள்ளதாகவும் அவர் கூறுகிறார்.
இயற்கை நீர்நிலைகளும், வடிகால்களும் முறையாக பராமரிக்கப்பட்டிந்ருதால், சென்னை இப்படியான வரலாறு காணாத நெருக்கடியைத் தவிர்த்திருக்கலாம் என அந்த மையத்தின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

Image captionவெள்ள நீர் எந்த அளவுக்கு தேங்கியிருந்தது என்பதற்கு இந்தப் படம் ஒரு உதாரணம்

சென்னை,மும்பை போன்ற பெரு நகரங்களில் போதுமான வகையில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படாமல், திட்டமிடாத வகையில் நகரம் வளர்ந்து கட்டிடங்கள் கட்டப்படுவதால், வெள்ளம் ஏற்பட்டதும் தாக்குப்பிடிக்க முடியாமல் திணறுகிறது என சுனிதா நரெயன் கூறுகிறார்.
இப்படியான அதிவேக நகரமயமாக்கல்கள், இயற்கை வடிகால்களை அழித்துள்ளன என்றும், சென்னை போன்ற நகரங்கள் இதன் தாக்கத்தை இப்போது உணர்ந்துள்ளன எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

Image copyrightbbctamil
Image captionவடிகால்கள் சரியாக பராமரிக்கப்படாததால் அடையாறில் வெள்ளம் ஏற்பட்டது

சென்னை தனது இயற்கை வடிகால் வசதிகளை பராமரிக்கத் தவறியுள்ளது எனவும் சி எஸ் இ அமைப்பின் அறிக்கை கூறுகிறது.
கடந்த 1980களில் சென்னையில் 600 நீர் நிலைகள் இருந்தன, ஆனால் இப்போது அதில் மிகச் சொற்பமானவையே எஞ்சியுள்ளன என்றும் சுனிதா நரெயின் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Image captionமுன்னர் ஏரிகள் இருந்த இடங்களில் வீடுகளை கட்டியவர்களின் நிலை இதுதான்

நீர்நிலைகள் மற்றும் வடிகால் அமைப்புகளை பேணிப் பராமரிக்காத நிலையில் பருவநிலை மாற்றத்தால் அசாதாரணமான அளவுக்கு மழை பெய்யும்போது, நிலைமை கட்டுக்கடங்காமல் போகிறது எனவும் அந்த அறிக்கை கோடிட்டுக் காட்டுகிறது.
பாரிஸில் பருவநிலை மாற்றம் குறித்த உச்சிமாநாடு நடைபெற்று வரும் வேளையில், இப்படியான விஷயங்கள் உடனடியாக கவனிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகிறது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image captionசென்னையிலுள்ள பல சுரங்கப் பாதைகளில் நீரின் அளவு குறையவில்லை

நீர்நிலைகள் எப்படி சீரழிந்து போயுள்ளன என்பதற்கு போரூர் ஏரி ஒரு உதாரணம் எனக் கூறும் அந்த அறிக்கை, அப்படியான நீர்நிலைகள், நிலத்தடி நீர் மீண்டும் ஊறுவதற்கும், வெள்ளம் ஏற்படும் போது அதை சமாளிப்பதற்கும் பெரும் உதவியாக இருந்திருக்கும் எனவும் மேலும் தெரிவித்துள்ளது.
ஈரநிலப்பகுயில் எப்படி கட்டுமானங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகின்றன எனும் கேள்விக்கு ஒருநாளும் பதில் கிடைத்தது இல்லை எனக் கூறும் அந்த அறிக்கை, அப்படியான நிலங்கள் நகர நிலச் சட்டங்களின் கீழ் மிகவும் அரிதாகவே பதியப்படுகின்றன எனவும், அதன் காரணமாக பலருக்கு அது தெரியவருவதில்லை எனவும் சுனிதா நரெயின் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.

Image captionநீர்நிலைகளின் கரையோரங்களில் இருந்தவர்களின் நிலை மிகவும் மோசமானது.

அனுமதி கோரி மனுக்கள் வரும்போது மேலோட்டமாக நிலங்களை மட்டுமே அதிகாரிகள் பார்க்கிறார்கள், அதிலுள்ள நீராதாரங்களைப் பார்ப்பதில்லை, எனவே பேராசை பிடித்த கட்டுமான நிறுவனங்கள் அதை தமக்கு சாதகமாக்கிக் கொள்கின்றன எனவும் சி எஸ் இயின் அறிக்கை தெரிவிக்கிறது.
தமிழக அரசின் ஆவணங்களின்படி கடந்த 1980களில் 19 பெரிய ஏரிகளின் பரப்பளவு 1,130ஹெக்டேர்களாக இருந்தது, 2000ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் 645 ஹெக்டேர்களாக சுருங்கியுள்ளன, அதன் காரணமாக அந்த ஏரிகளின் கொள்ளளவு குறைந்து போயின என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

Image copyrightBBCtamil
Image captionபல வீடுகளின் கீழ் தளங்கள் முழுவதும் நீர் புகுந்து பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டது.

சென்னையின் பல இடங்களில் மழைநீர் கால்வாய்களில் குப்பைக் கூளங்களால் அடைப்புகள் ஏற்பட்டுள்ளன, அவை உடனடியாக தூர்வாரி சரிசெய்யப்பட வேண்டும் எனவும் அந்த அமைப்பு கோரியுள்ளது.
சென்னை மாநகரில் 2,847 கிமீ நீளத்துக்கு சாலைகள் உள்ள நிலையில், மழைநீர் கால்வாய்கள் 855கிமீ மட்டுமே உள்ளன என்றும், இதுவே பெருமழையின் போது, சாலைகளில் நீர் ஓடுவதற்கும் தேங்கி நிற்பதற்கும் காரணமாகின்றன எனவும் அந்த அறிக்கை கூறியுள்ளது.

Image copyrightbbctamil
Image captionசாலைகளில் ஓடும் நீர் முற்றாக வடிய பல நாட்களாகலாம் எனக் கருதப்படுகிறது

மனிதர்களால் உருவாக்கப்படும் வடிகால் அமைப்புகள், ஒருநாளும் இயற்கை வடிகால் அமைப்புகளுக்கு மாற்றாக இருக்க முடியாது எனவும் அந்த அறிக்கை வலியுறுத்தியுள்ளது.
சென்னையில் கூவம், அடையாறு போன்ற நதிகளை இணைக்கும் இயற்கை கால்வாய்களும், வடிகால்களும் இருப்பதை தமது ஆய்வுகள் காட்டுகின்றன என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

Image captionஏரிகள் முன்னறிவிப்பின்றி திறந்துவிடப்பட்டதால் பல முக்கியச் சாலைகள் நீரில் மூழ்கின.

உதாரணமாக, நகரின் 75 குளங்களில் நீரின் அளவு உயர்ந்து கொள்ளளவைக் கடக்கும்போது, அந்த நீர் கூவத்தில் கலக்கவும், அதேபோல் 450 குளங்களில் உள்ள உபரி நீரும், செம்பரம்பாக்கம் ஏரியின் அளவு உயரும்போது அதிலுள்ள உபரி நீரும் அடையாற்றில் கலப்பதற்கு வசதிகள் இருந்தன என்று அந்த அறிக்கையில் விளக்கப்பட்டுள்ளது.

Image captionபுறநகர் பகுதிகளில் வீடுகளைக் கட்டும்போது நில ஆவணங்கள் கவனமாகப் பார்க்கப்படுவதில்லை எனக் குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன

கடந்த நூறாண்டுகளில் இல்லாத வகையில் சென்னையில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் மட்டும் 1,218 மிமீ மழை பெய்துள்ளது.
இது சராசரியாக ஆண்டொன்றுக்கு கிடைக்கும் மழையின் அளவைவிட மூன்று மடங்கானது.                                          bbc

சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில்

சிட்னி: ஆஸ்திரேலியா அருகே தெற்கு இந்திய பெருங்கடலில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி அச்சம் ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா அருகே தெற்கு இந்திய பெருங்கடலில் இன்று காலை சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இதுகுறித்து அமெரிக்க புவியியல் நிபுணர்கள் விடுத்துள்ள அறிக்கையில், தெற்கு இந்திய பெருங்கடலில் இன்று காலை 6.24 மணிக்கு சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது.

ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் நகரில் இருந்து சுமார் 3100 கிமீ தொலைவில், ஹியர்டு தீவுக்கு 1000 கிமீ தொலைவிலும் இந்த நில நடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 7.1 புள்ளிகளாக பதிவாகியிருந்தது. இந்த நிலநடுக்கம் இந்திய கடற்கரைக்கு தென் கிழக்கே தெற்கு இந்திய பெருங்கடலில் ஏற்பட்டது. இருந்த போதிலும் இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் ஆஸ்திரேலியாவுக்கு விடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய இளஞர்களே நண்பர்களே தோழர்களே சமூக நலன் விரும்பிகளே 06/12/2015 9.rue saint Bruno 75018 -paris .metro : la chapelle 15.00 மணி தொடக்கம் 20.00 மணிவரை அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்


இன்றைய இளஞர்களே நண்பர்களே தோழர்களே சமூக நலன் விரும்பிகளே காந்தீயத்தின் முன்னோடி டேவிட் அய்யா அவர்களை நினைவு கூறும் முகமாக பாரிஸில் (பிரான்ஸ்) டிசம்பர் 6 ஆம் திகதி நினைவஞ்சலி கூட்டம் நடைபெறவுள்ளது.தமிழ்த் தேசியம் தொடர்பில் ஒரு நீண்ட சிந்தனையுடன் தனது இறுதிகாலம்வரை செயற்பட்ட அன்னார் அவர்கள் காந்தீய சிந்தனைக்குள் ஆற்றிய அளப்பரிய செயற்பாடுகள் பற்றிய நினைவுகளை இன்றைய இளையவர்களும் தெரிந்து கொள்வது ஒரு வரலாற்றுக் கடமையாகும். மேலும்.கருவி ஏந்திப் போராடும் சிந்தனையை, நான்தான் நீதான் என்று பலரும் நூல்கள் வழியாக பெருமை பேசிக்கொள்கின்றனர். ஆயுதப் போராட்டத்துக்கு 1968 சம்பியாஊடாக இஸ்ரேல் சென்று நம் இளைஞர்கள் பயிட்சி எடுக்கும் முயற்சிக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர் பின் பேச்சு முறிந்தவுடன் ஈழ தேசம் அனைத்திளும் காந்திய வழியை கடைப்பிடித்தார் உயர்திரு. டேவிட் ஐயாதான் என்பது பின்நாளில் வளர்ச்சிப்பெற்ற கட்சிகளுக்கும் இயக்கங்களுக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை! அன்னாரை 06/12/2015 நினைவுகூறும் இன்நாளின் நம் விடுதலை விரும்பிகள் சமுக ஆர்வாழர்கள் இளைஞர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம் ... 9.rue துறவி புருனோ 75018 -paris .metro: லா சப்பலில் 15.00 மணி தொடக்கம் 20.00 மணிவரை



lundi 30 novembre 2015

உலகத் தமிழராய்ச்சி மன்றம் அமைக்கப்பட்டதற்கு முக்கிய காரணமாக இருந்தார். 1989 முதல் 2010-ம் ஆண்டு வரை அதன் தலைவராக இருந்த.......

KARASHIMAசிறந்த தமிழறிஞரும் தெற்காசிய வரலாற்றாய்வாளருமான பேராசிரியர் நொபுரு கராஷிமா தனது 82-வது வயதில் டோக்கியோவில் கடந்த வியாழக்கிழமை காலமானார்.
இவரின் ஆய்வுகள், இடைக்கால தென்னிந்தியாவின் பொருளாதார, சமூக வரலாற்றை மாற்றியெழுதின. நொபுரு கராஷிமா தன் இறுதிக்காலம் வரை டோக்கியோ பல்கலைக்கழகத்தில் சிறப்புப் பேராசிரியர், டாய்ஷோ பல்கலைக்கழக இந்தியவியல் துறையின் சிறப்புப் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார்.
இந்திய-ஜப்பான் உறவுக் கட்டமைப்பில் சிறப்பான பங்களிப்புக்காக முனைவர் நொபுரு கராஷிமாவுக்கு இந்திய அரசு 2013-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது அறிவித்தது.
உடல்நலக் குறைவு காரணமாக, கராஷிமா இந்தியா வரவில்லை. இதையடுத்து, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் ஜப்பான் சென்றிருந்தபோது, ஜப்பானில் வைத்தே அவ்விருதை நொபுரு கராஷிமாவுக்கு வழங்கி கவுரவித்தார்.
இந்தியப் பிரதமரைப் பார்த்ததும் கராஷிமா சொன்ன முதல் வார்த்தை தமிழில் ‘வணக்கம்’. பதிலுக்கு மன்மோகனும் வணக்கம் சொன்னார். விருதைப் பெற்ற பிறகு கராஷிமா சொன்ன வார்த்தை ‘நன்றி’. இந்தியப் பிரதமரை அயல் மண்ணில் தமிழில் வணக்கம் சொல்ல வைத்த தமிழ்ப்பற்றாளர் கராஷிமா.
சுமார் 55 ஆண்டுகளுக்கு முன்பு கராஷிமா வெளியிட்ட முதல் ஆய்வுக் கட்டுரை சுருக்கமானது. ஆனால், பெரும் விளைவுகளை ஏற்படுத்தியது. சோழர் கால கல்வெட்டில், காவேரிப் படுகையைச் சேர்ந்த அல்லூர், ஈசானமங்களம் ஆகிய இரு ஊர்களுக்கிடையே நிலப் பிரச்சினை தொடர்பான விவரம் இடம்பெற்றிருந்தது. அது தொடர்பாக ஆய்ந்து எழுதினார் கராஷிமா.
இடைக்கால தமிழகத்தில் நில உரிமை முறைகள், சமூக உறவுகளை ஆழமாக ஆய்வு செய்து வெளிக்கொணர இந்த ஆய்வு உந்துதலாக இருந்தது.
தென்னிந்திய வரலாற்றை அறிந்து கொள்வதற்கு ஏராளமான கல்வெட்டுகளிலிருந்து தேவையான தகவல்களைத் திரட்ட, புள்ளியியல் உத்தியை அவர் பயன்படுத்தினார். இதனால், நம்பகமான முடிவுகள் அவரின் ஆய்வில் வெளிப்பட்டன.
அவர் இறுதியாக எழுதிய நூல், ‘தென்னிந்தியாவின் சுருக்கமான வரலாறு’ கடந்த ஆண்டு வெளியானது.
உலகத் தமிழராய்ச்சி மன்றம் அமைக்கப்பட்டதற்கு முக்கிய காரணமாக இருந்தார். 1989 முதல் 2010-ம் ஆண்டு வரை அதன் தலைவராக இருந்தார்.
தஞ்சாவூரில் 1995-ம் ஆண்டு நடைபெற்ற 8-வது உலகத் தமிழ் மாநாட்டின் முதன்மை ஒருங்கிணைப்பாளராக இருந்தார். உலகத் தமிழ் மாநாடுகளில் அரசியல் கலந்ததையடுத்து, 9-வது உலகத் தமிழ் மாநாடு நடத்துவதிலிருந்து விலகியே இருந்தார்.
1996 முதல் 2000-வரை தெற்காசிய ஆய்வுகளுக்கான ஜப்பானிய சங்கத்தின் தலைவராக இருந்தார். தற்போதும் துடிப்புடன் செயல்பட்டு வரும் இத்துறை சிறப்பாக கட்டமைக்கப்படுவதற்கு பேருதவி புரிந்துள்ளார்.
தெற்காசிய கலாச்சாரம் மற்றும் உணவுகள் தொடர்பாக உரையாற்றுவதன் மூலம் ஜப்பான் தொலைக்காட்சிகளில் இவர் மிகவும் பிரபலம்.
இந்தியா மீது குறிப்பாக தமிழகத்தின் மீது மிகுந்த ஈடுபாடும் பற்றும் கொண்டவரான கராஷிமா, இந்தியா மற்றும் ஜப்பானில் ஒரு தலைமுறை தமிழறிஞர்கள் மீது வலிமையான அறிவுசார் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.
கராஷிமாவுக்கு டகாகோ என்ற மனைவி, மூன்று மகன்கள், மூன்று பேரக் குழந்தைகள் உள்ளனர். டகாகோ கராஷிமா எழுதிய இந்தியா தொடர்பான புத்தகம் பல பதிப்புகளைக் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பார்வதி மேனன்

யாழ்ப்பாணத்து பொதுச் சூழலில்அண்ணளவாக 500 க்கும் மேற்பட்டவர்கள்


விதை-vithai's photo.
விதை-vithai's photo.

1 - அண்ணளவாக 500 க்கும் மேற்பட்டவர்கள் தங்களை மாற்றுப் பாலினத்தவர்களாக உணர்ந்தும் அது தொடர்பில் சிகிச்சைகளுக்கும் உட்பட்டிருக்கின்றனர் .
2 - குடும்ப அலகில் ஏற்படும் அடிப்படையான சிக்கலுக்கே இவர்கள் முதலில் முகம் கொடுக்கின்றனர் . பலரும் இன்றுவரை வீட்டுக்கு பயந்தவர்களாகவும் தங்களது விருப்பங்களை வெளிப்படுத்த முடியாதவர்களாகவும் ஒரு கலாசார தடையை உணருகின்றனர் .
3 - வேலையில்லாப் பிரச்சினை இவர்கள் முன் வைக்கும் பிரதான பிரச்சினை .
4 - மேலும் மருத்துவச் செலவுகளும் அதிகம் . யாழ்ப்பாணத்து பொதுச் சூழலில் பெண்களை விட அதிகம் வன்முறைக்குள்ளாகும் தொகுதியினராகவே இவர்கள் உள்ளனர் , உதாரணமாக , ஒரு பெண்ணை வீதியில் மறித்து சேட்டை செய்வது கடினம் , ஆனால் மாற்றுப் பாலினராக - பெண்ணாக தன்னை உணர்ந்தவரை சேட்டை செய்வது அதிகமாகவே உள்ளது , வீதியில் வருவதே பிரச்சினை !
5 - பின்னர் நிகழ்வில் - அடிப்படையான உளவியல் உடலியல் மாற்றங்கள் பற்றியும் பொதுவான சந்தேகங்கள் பற்றியும் தங்களது அபிப்பிராயங்களை பரிமாறிக் கொண்டனர் .
6 - இந்த பொதுச் சிக்கலை ஓரளவு தீர்த்துக் கொள்வதற்கு அமைப்பு ரீதியான முன் நகர்வு வேண்டும் என்றும் அதற்க்கான தேவையை பின்வருமாறும் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர் .
* பிரதேச ரீதியாக மாற்றுப் பாலினத்தவர்கள் கையாளப்படும் முறை வித்தியாசமானது . அதனால் நமது சூழலின் பிரச்சினைகளை உரையாட முன் வர குழு ரீதியான உரையாடல்கள் அவசியம் .
* வேலை வாய்ப்பு பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளவும் அமைப்பு ரீதியான நகர்வுகள் உதவும் . உதாரணமாக , அமைப்பு ரீதியாக இயங்கும் போது பொது தரவுத் தளம் ஒன்றை உருவாக்கினால் , அதில் அணைத்து தரவுகளும் அவர்களின் தகமைகளும் பதிவிடப்படும் , அதன் மூலம் உதவ நினைப்பவர்கள் அமைப்பை தொடர்பு கொண்டாலே விடயனகளை பெற்றுக் கொள்ளலாம் , அல்லது கலந்துரையாடலாம் ,
* மூடப்பட்ட - கட்டிறுக்கமான இந்த சமூக அமைப்பில் மாற்றுப் பாலினமாக தான் எல்லோருமே உள்ளோம் . ஒன்றுக்கு ஒன்று மாற்று ,
* இது ஒரு முன் ஆயத்தம் மட்டுமே , ஒரு பொது உரையாடலுக்கான வெளி இதன் மூலம் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக நாம் கருதுகிறோம் , மேலும் விரித்தும் வளர்த்தும் செல்லப்பட வேண்டிய விடயமாகவே இதை கருதுகிறோம்
விரிவான தகவல்களை பின்னர் எழுதுகிறோம் ...
விதை குழுமம் .
-
விதை-vithai's photo.விதை-vithai's photo.

பாரிஸ் பருவநிலை மாநாட்டில்

பருவ நிலை குறித்த உலகின் எதிர்பார்ப்புகள் மற்றும் பொறுப்புகள் அனைத்தையும் இந்தியா பூர்த்தி செய்யும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தார். மேலும், இந்தியாவின் சுற்றுசூழலை சீர்குலைக்காத வகையில் நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பாரிஸ் பருவநிலை மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்தார்.
பாரிஸ் பருவநிலை மாநாட்டில் 140-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ள அமெரிக்க அதிபர் ஒபாமாவும், பிரதமர் நரேந்திர மோடியும், நேரில் சந்தித்து பருவ நிலை மாற்றத்தை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தினர். 

அப்போது பேசிய அதிபர் ஒபாமா, வறுமை மற்றும் புகை மாசு வெளியேற்றத்திற்கு எதிராக இந்தியா தொடர்ந்து போராடும் என நம்பிக்கை தெரிவித்தார். பின்னர் பேசிய பிரதமர் மோடி, பூமியையும், இயற்கையையும் பாதுகாப்பதே இந்தியாவின் முதன்மைக் குறிக்கோள் என்றும் பருவ நிலை குறித்த உலகின் எதிர்பார்ப்புகள் மற்றும் பொறுப்புகள் அனைத்தையும் இந்தியா பூர்த்தி செய்யும் என்றும் குறிப்பிட்டார்.   
பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய இடத்தை அமெரிக்கா அதிபர் ஒபாமா நேரில் அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்ச்சியின்போது பிரான்ஸ் அதிபர் ஹாலந்தேவும் உடன் இருந்தார்.  பருவநிலை மாற்றம் தொடர்பாக ஐ.நா. சார்பில் நடத்தப்படும் சர்வதேச மாநாட்டில் பங்கேற்க அமெரிக்கா அதிபர் ஒபாமா பாரீஸில் உள்ளார். அங்கு தனது முதல் நிகழ்ச்சியாக பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பகுதியைப் பார்வையிட்டு உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தினார். 

பிரான்சுக்கு அமெரிக்கா அளித்து வரும் ஆதரவை உறுதிபடுத்தும் நிகழ்வாக ஒபாமாவின் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கருதப்படுகிறது. அவர் பருவ நிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடியையும் சந்திக்கிறார். இந்த சந்திப்பின் போது பயங்கரவாதம் உள்ளிட்ட இருநாடுகளும் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், இருதரப்பு உறவுகள் குறித்து இரு தலைவர்களும் விவாதிக்க உள்ளனர்.

mardi 17 novembre 2015

சேகுவராவையும் விஜயவீராவையும் கட்டிப்போட்ட நினைவுகளை உறுத்தியவை;எஸ்.எம்.எம்.பஷீர்

srimathi
"நான் , நிழல்களின் இராணுவத்துடன் , தோல்வியின் வீதி ஓரமாக திரும்பிக் கொண்டிருக்கிறேன் 
இபொழுது எல்லாமே முடிந்துவிட்டன , என்னுடைய பயணத்தின் இறுதி கட்டம் -உறுதியானது - நெருங்கிவிட்டது." 

 ( சேகுவாரா தனது மனைவிக்கு தன்சானியாவில் இருந்து  எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டது  ) 

இலங்கையில் ஜே வீ பீ எனப்படும் மக்கள் ஐக்கிய முன்னணியின் ஸ்தாபகரும் தலைவருமான ரோகண விஜயவீரா மாறு வேடத்தில் தலைமறைவாக உலப்பனையில் வாழ்ந்த பொழுது பிரிகேடியர் ஜானக பெரேராவினால் கைது செய்யப்பட்டார். 
அங்கிருந்து கொழும்புக்கு கொண்டு வரப்பட்டார் , சித்திரவதை செய்யப்பட்டார் , பின்னர் பொரள்ளையில்  உள்ள கனத்தை  மயானத்துக்கு , அரைகுறை உயிருடன் எடுத்துச் செல்லப்பட்டு அங்கு உயிருடன் எரிக்கப்பட்டார் என்று அண்மையில் செய்திகள் மிக விரிவாக வெளி வந்துள்ளன. 
அவரை கனத்தை மயானத்தில் வைத்தே கொன்றார்கள் என்று எனது இடதுசாரி நண்பர் 1990 களில்  இலங்கையில் கொழுபில் எனது வீட்டில் வைத்தே என்னிடம் கூறினார் . அதுபற்றி நான் முன்னமே எழுதியும் இருந்தேன்(http://www.bazeerlanka.com/2011/03/description-whither-jvp-racist-party.html.)எனக்கு கூறிய நண்பரும் என்றோ ஒருநாள் தான் அதுபற்றி எழுதப் போவதாகவும் கூறினார். ஆனால் இதுவரை அவர் எழுதவில்லை .


படத்தில் 1980 களில்  விஜேவீர தன் மனைவி குழந்தைகளுடன்

ஆனால் விஜேவீரா கொல்லப்பட்ட விதம் குறித்த செய்திகள் மாயானக் காப்பாளராக அப்பொழுது தொழில் புரிந்தவர் , இராணுவத்தில் தொழில் புரிந்த ஜே வீ பீ அனுதாபி என்பவர்களால் அப்பொழுதைய பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜயரத்தினா உட்பட உளவுத்துறையின் உயர்  மட்ட உத்தியோகத்தவர்கள் வரை செயற்பட்ட விதம் குறித்து மட்டுப்படுத்தப்பட்ட செய்திகளே வெளி வந்துள்ளன. 

ஒருவேளை இன்னமும் , பல மறைக்கப்பட்ட சங்கதிகளை வெளிக் கொணரும் நபர்களுக்கு தகுந்த பாதுகாப்பு இல்லாமல் இருக்கலாம் என்பது ஒன்று.

மற்றொன்று,  உத்தியோகபூர்வமாக விஜேவீராவின் கொலை குறித்து விசாரணை செய்ய யாரும் முயற்சிக்கவில்லை , ஜே வீ பீ உட்பட. 

விசாரணைகள் எதுவும் முன்னெடுக்கப்படாத நிலையில் , பல புதைக்கப்பட்ட உண்மைகள் விஜவீரா போன்ற பலரைப் பற்றி  தோண்டப்படாதவரையில்  , தெரிவிக்கப்பட்டவை மட்டுமே சரித்திரம் ஆகின்றன!. 

எது எப்படியாயினும்  , இலங்கையின் சரித்திரத்தில் சமூகப் புரட்சியில் ஆயுதத்தின் மீது நம்பிக்கை வைத்தவர் விஜேவீரா , அவரைப் போலவே பிரபாகரனும் இன விடுதலைக்கு ஆயுதத்தின் மீது  நம்பிக்கை வைத்தார். இருவரும் எப்படியோ கொல்லப்பட்டு  போனார்கள்.   

ஆனால் இவர்கள் இருவரும் பலரைக் கொன்றனர் , அப்பாவிகள் கருத்து முரன்பட்டோரைக்  கொன்றனர்.

சமூக மாற்றங்களுக்கான ஆயதப் புரட்சி சேகுவாரா காலத்து ஆட்சிக் கெதிரான  போராட்டங்களிலிருந்து மாறுபட்டு வந்திருக்கிறது. மக்களுக்கான ஆயுதப் போராட்டங்கள் , சகிப்புத்தன்மையற்ற ,  மாற்றுக் கருத்துக் கெதிரான  , சுய இன அழிப்பு செய்யும் , அப்பாவிகளை  அழித்தொழிக்கும் பண்பியல்புகளை நியாயங்களாக்கிக் கொண்டன.  

ஆனால் இலங்கையின் அரசியல் வரலாற்றில் விஜெவீராவும் முறையான ஒப்பீடின்றி  சேகுவரா என்றே அழைக்கப்பட்டார். அவரின் மனைவி பிள்ளைகள் அவருடன் ஏதோ ஒரு விதத்தில் புதைக்கப்பட்டுப் போனார்கள் , அல்லது புதைக்கப்பட விரும்பினார்கள் 
  சேகுவராவையும் விஜயவீராவையும் கட்டிப்போட்ட மண வாழ்க்கையும்
,கட்டுப்போடப்படாத காயங்களும்

“சில வலிமைமிகு அக்கறைகளின் கருவியாகவே  நீதி இருக்கிறது,  ஒடுக்கும் சக்திகளின் வசதிகேற்றவாறே சட்ட வியாக்கியானங்கள் செய்யப்படுவதும் தொடரும்”சேகுவேரா
1989  நவம்பர் 13, ஆம் திகதி ரோஹன விஜயவீரா கொல்லப்பட்டு நேற்றுடன் 26வருடங்கள் உருண்டோடிவிட்டன. விஜவீராவின் கொலை ஒரு அரசியல் படுகொலை, அதுவும் அன்றைய பிரேமதாசா ஆட்சியினர்,நீதி விசாரணை இன்றி,தன்னிச்சையாக அவரைக் கொல்லவே வேண்டும் என்று, அவர் கைது செய்யப்பட்டு 24மணித்தியாலத்துள் முடிவு எடுத்தனர் கொன்றனர்.
அப்பொழுது அவருக்கு ஐந்து பிள்ளைகள் இருந்தனர், அவரின் ஆறாவது பிள்ளை தாயின் வயிற்றில் இருந்தது. உலகம் அறியாத,கணவனின் அரசியல் சித்தாந்தம் பற்றி அக்கறையும் தெளிவும் அற்ற,தனது கணவனின் ஒளிவு  மறைவு வாழ்க்கையில் “கைதியாக “வாழ்ந்த ஒரு சாமான்ய இளம் பெண் செய்வதறியாது, சமூகத்துக்குள் மீள் பிரவேசம் செய்ய முடியாது, தனது குழந்தைகளுடன் இராணுவத்திடம் சரண் அடைந்தாள்.
che guevara
தற்பொழுதுவரை அவரின் வாழ்க்கை இரானுவம முகாம்களிலே சிறைபட்டு இருக்கிறது. 
இலங்கையில் ஒரு சமவுடமை அரசினை ஆயுத புரட்சி மூலம் வென்றெடுக்க முடியும் என்று நம்பியவர் விஜயவீரா, ஆயிரமாயிரம் சிங்கள இளைஞர்களை ஆகர்சித்த ஒரு தலைவனின் மனைவி விஜயவீராவின் படுகொலையின் பின், விஜயவீராவின் மனைவி பிள்ளைகள்  என்பதற்காய் வழங்கிய விலை, மிகத் துன்பமானது. இன்றுவரை நீடித்திருப்பது.
விஜேவீராவின் மனைவி சிரிமதி சித்திராங்கனியின் என்று ஆவர் விஜயவீராவின் மனைவி ஆனாரோ, அன்றிலிருந்து இன்றுவரை “சிறை”  வாழ்க்கையையே அவர் வாழ்ந்து  வருகிறார்.
சமூகம் அவரை மீளவும் உள்ளீர்க்க தயாரில்லை, கடந்த 26வருடங்களாக  உபத்திரவங்கள் அவரின் குழந்தைகளையும்  (அவர்கள் இப்பொழுது பெரியவர்களாகிய, சுதந்திர தனி மனிதர்களாகிய  பொழுதும்)  துரத்தி வருகிறது !
அவரின் கணவனால் தாபிக்கப்பட்ட கட்சி ஜனநாயக நீரோட்டத்தில் நுழைந்து, விஜேவீரா எழுதிய ஏழு நூல்களையும் வெளியிடும் மற்றும் விற்பனை  செய்யும் உரிமையையும் தனதாக்கிக் கொண்டு செயற்படும் நிலையில், எவ்வித வருமானமுமின்றி அரசின் அற்ப  தயவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் சித்திராங்கனி. கட்சி ஜே வீ பீ யின் தலைவர் விஜயவீராவைக் கொன்றவர்கள் பற்றி விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எதனையும் முன் வைக்க வில்லை, மாறாக அது பற்றி விசாரணை  செய்யப்பட வேண்டும் என்று சித்திராங்கனி இப்பொழுது கோருகிறார். ஆனால் யாரும் அதை செவிமடுப்பதாக இல்லை. 
தனது கணவனின் புலமைச் சொத்துரிமைக்காக, அவர் கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்தில் வழக்கொன்றை சென்ற வாரம் தாக்கல் செய்திருந்தார். குறித்த மனுவை எதிர்வரும் 27ம் திகதி விசாரிக்க கொழும்பு வர்த்தக நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. அன்றையதினம் நீதிமன்றத்தில் ஜே வீ யின் தலைவர்கள் ஆஜராக வேண்டும் எனவும்  பணிக்கப்பட்டுள்ளது.
சித்திராங்கனி விஜயவீரா தனது சுய சரிதை பற்றி எழுதபோவதாக  கூறி வருகிறார் ஆனாலும் பல சங்கதிகளை அவர் ஏற்கனவே சில நேர்காணல்களில் கூறியும் வருகிறார். ஜே வீ பீ யின் இன்றைய தலைவர்களைப் பற்றிய அவரின் விமர்சனங்கள், இப்பொழுது தாக்கல் செய்யப்பட்டுள்ள   வழக்கு என்பன ஜே வீ பீ கட்சியின் வெளிப்படைத்தன்மை குறித்து  சர்ச்சைகளை கிளப்பப் போகின்றன !
விஜெவீராவுக்கும் தனக்குமிடையிலான திருமண பந்தம் சந்தோசமாக அமையவில்லை ஆனாலும் விஜேவீர மீது தனக்கு ஒரு மரியாதை இருந்தது என்று அவர் சொல்லுகிறார். மறுபுறத்தில் இலங்கையில் ஜே வீ பீயினருக்கு மொத்தத்தில் இலங்கை அரசு சூட்டிய  பெயர் “Che Guevara-karayos “ செகுவராக்காரர்கள்  அதுவே மக்களிடத்திலும் பிரபலம் பெற்றது.
அந்த காலகட்டத்தில் யார் செகுவாரா என்று சாமான்ய பாமர மக்கள்  நன்கு அறிந்திருக்கவில்லை , படித்தவர்களும் அன்று தெரிந்துகொள்ள விரும்பவில்லை.  மக்கள் சேகுவாரா என்றால் கம்யுனிஷ பயங்கரவாதிகள் என்று நம்ப வைக்கப்பட்டார்கள்.
ஒருபுறம், ஜே வீ பியின் பயங்கரவாத நடவடிக்கைகள் சேகுவரா எனும் சென்ற நூற்றாண்டின் வரலாற்று முக்கியத்துவமிக்க ஒரு புரட்சியாளனை மலினப்படுத்தின!  மறுபுறத்தில் விஜேவீராவின் கெட் அப் (தோற்றம்)  சேயின் தோற்றத்தை ஒத்ததாக காட்டப்பட்டது.
1970 களில் தொடங்கிய முதல் ஜே வீ. பீ இயக்க நடவடிக்கைகள்,அதனைத் தொடர்ந்த ஆயுத தாக்குதல்கள், அதன் விளைவான கைதுகள் காரணமாக விஜேவீரா கைது செய்யப்பட்ட பொழுது ,அவரையும் இன்றைய கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியரும் அன்றைய ஜே வீ பீ மாணவ தலைவர்களில் ஒருவரான  ஜெயதேவா உயங்கொடவையும்  காவல் நிலையத்தில் சட்ட உதவி புரிந்தவர் விஜயவீராவை பிணையில் நீதிமன்றில் விடுதலையாக துணை புரிந்தவர் இடதுசாரி கட்சியான -சமசமாஜ கட்சியின் – சட்டத்தரணி. அவர் விஜேவீராவின் விட்தலையின் பின்னர் அவரின் வீட்டிற்கு சென்றது பற்றியும் விஜேவீராவின் தாய் உபசரித்து பற்றியும் இன்றுவரை ஞாபகப்படுத்தி கொள்பவர். 
அதுபோலவே 1990 இல் விஜேவீராவின் கொலை பற்றி எழுதப் போவதாக சொன்னவர் எனது இடதுசாரி தமிழ்  நண்பர் -அவரும் ஒரு சட்டத்தரணி!   விஜேவீராவின்  படுகொலை பற்றிய தகவல்கள் பல கடந்த இரண்டு வருடங்களுக்குள் வெளி வந்தவை, அவரின் கொலை பற்றிய சான்றுகளாக அவை அமைகின்றன.
அன்றைய பாதுகாப்பு அமைச்சர்  ரஞ்சன் விஜயரட்ன  விஜயவீராவின் மரணம் பற்றி சொன்ன பொய்யும் அதனை ஒத்தூதிய அமைச்சர் ஏ சி எஸ். ஹமீதும் இன்றில்லை!
இலங்கை அரசு செய்த நூற்றுக்கணக்கான நிராயுதபானிகளின் படுகொலைகளில் விஜயவீராவின் மற்றும் அவருடன் கூடவே கைதான ஹேரத்தின் படுகொலையும் அடங்கும்.  
விஜயவீராவைக் கொன்ற குற்றவாளிகளில் சிலரே இன்று உயிருடன் இருக்கின்றனர். ஆனாலும் கொலை செய்யக் கட்டளையிட்டவர்கள் இன்று உயிருடன்  இல்லை அவர்கள் பலரின் சாவுகளும் மிகக் கொடூரமானவையாக அமைந்தன. புலிகள் அவர்களின் உயிரைக் குடித்தனர். ஜே வீ பீ யினரின் அரச எதிரிகள் பின்னாளில் புலிகளின் எதிரிகளுமானார்கள். 
ஆனால் விஜயவீராவின் மனைவி சித்திராங்கனி ஒரு பரிதாபத்துக்குரிய பெண் , ஒரு நிர்ப்பந்த திருமணபந்தத்துள் இணைந்த“கைதி”,   இன்றுவரை இராணுவ முகாமில் வாழ்ந்து கொண்டிருக்கும் கைதி. அதை எல்லாவற்றையும் விட சிங்கள சமூகம் தங்களை ” ஒரு சிங்கள பிரபாகரனின் குடும்பத்தவரைப்  போலவே எங்களைப் பார்கிறார்கள், விஜயவீரா கொல்லப்பட்ட நாளில் நாங்களும்  கொல்லப்பட்டிருந்தால் இந்த துன்பங்களை நாங்கள் அனுபவித்திருக்க மாட்டோம்  “ என்று இலங்கையை விட்டே எங்காவது ஓடிவிட நினைக்கிற ஒரு  அபலை ! 
இங்குதான் சேகுவராவின் மனைவியும் (அலீடா மார்ச்) , தனது குழந்தைகளுடன் ஒளிவு மறைவு வாழ்க்கையில் அனுபவித்த துன்பங்கள் கவனத்துக்கு வருகின்றன. ஆனாலும் சித்தாந்த ரீதியாக அவர் சேயுடன் இணைந்தவர் ஆயுதமும்  தூக்கி போராடியவர். கியூபா புரட்சியினை வெற்றிகரமாக முடித்த பின்னரும் சேகுவரா  தனது பணி முடியவில்லை என்று நம்பினார்.  ஆபிரிக்காவிற்கு பயணமானார். ஆனாலும் அவரின் மனைவியால்  செகுவாராவின் தொடரும் பயணங்களை -பணியை-  தடுக்க முடியவில்லை.
சீ ஐ ஏ எனப்படும் அமெரிக்க உளவு இஸ்தாபனத்தின் அரசியல் படுகொலை நிரலில் சேயின் இடம் தென்னமரிக்காவில் முதன்மை இடத்தில் இருந்த காலகட்டங்களில் சேகுவரா மாறுவேடத்திலே தனது சொந்தக் குழந்தைகளுக்கே, தான் சேகுவராவின் நண்பர்  என்று பழக்கம் ஏற்படுத்தி அவர்களுடன் பொழுதைக் கழித்துள்ளார். தகப்பன் இவர்தான் என்று அறியாமல் அவரின் சொந்தக் குழந்தைகள் நால்வரும் அவரிடம் நெருக்கமாக பழகும் சூழலை உருவாக்கி இருக்கிறார். சேகுவரா  கொல்லப்பட்டதும் , தன்னையும் குழந்தைகளையும்  வளர்க்க தான் பட்ட இன்னல்களை சேகுவராவின் மனைவி  நூலக வெளியிட்டுள்ளார். அவர் சித்திராங்கனி போல் சமூகப் பிரதிஷ்டத்தை அனுபவிக்கவில்லை.
விஜேவீராவின் குடுமபம் போலல்லாது சேகுவராவின் குடும்பம் பிடல் காஸ்ட்ரோவின் கியூபா அரசால் பாதுகாக்கப்பட்டனர்.
பிள்ளைகள் மீது விஜேவீரா மிகுந்த பாசம் கொண்டிருந்தார், அந்த விதத்தில் அவர் மாறு வேடத்தில் ஒரு எஸ்டேட்டில்  வாழ்ந்த பொழுதும் தமது பிள்ளைகள் மீது அபரித அன்பு கொண்டிருந்தார். ஒரு நல்ல தந்தையாகத் திகழ்ந்தார். இறுதியில் தான் கைது செய்யப்பட்டு,விசாரணையின் பொழுது   தன் மீது பரிவு காட்டிய ஒரு உயர் இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் சரத் முனசிங்கவிடம்  தனது  மனைவிக்கும் குழந்தைகளுக்கும் சில பிரத்தியேக செய்திகளை சொல்லுமாறு பணிவுடன் வேண்டிக் கொண்டுள்ளார். அவர் பின்னர் கொல்லப்படப் போவதை  அறிந்தும் கூட தனது குடுபத்தினருக்கு எதுவும் செய்துவிட வேண்டாம் என்றும்  வேண்டிக் கொண்டுள்ளார். 
சேகுவராவின் மனைவி, அலீடா மார்ச் எழுதிய செகுவராவுடன் எனது வாழ்க்கை என்ற நூல் சொல்லுகின்ற செய்திகள் சேகுவராவின் மனைவி குழந்தைகள்  ” இலங்கை சேகுவாரா”  எனப்பட்ட விஜேவீராவின் மனைவி குழந்தைகள் , அதனையொத்த பலரின் வாழ்க்கை மீது ஒரு ஈர்ப்பினை ஏற்படுத்தும் . அவர்களின் துயரங்களும் சக மனிதர்களின் வாழ்வியல் துன்பங்களின் துயரங்களுக்கு எந்த விதத்திலும் குறைந்தவையல்ல !
எஸ்.எம்.எம்.பஷீர்    

தமிழ் மக்கள் வடுலைப்புலிகள் தலைவர் ரகுவின் விசாரனை முன்னெடுக்கப்பட வேண்டும். – நளினிகாந்.

தமிழ் மக்கள் வடுலைப்புலிகள் கட்சியின் முன்னாள் தலைவர் நந்தகோபன்(ரகு) அவர்கள் கொலை செய்யப்பட்டு இன்று 7 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் அவரது கொலை தொடர்பில் எவ்வித விசாரனைகளும் நடைபெறாதுள்ளது. நல்லாட்சி நடைபெறுவதாக கூறிக்கொள்ளும் அரசாங்கம் எமது தலைவரான சந்திரகாந்தன் மற்றும் செயலாளர் பிரசாந்தனை கைதுசெய்து எமது கட்சியை முடக்கும் நோக்கில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.
கடந்தஆட்சியில் கொலை செய்யப்பட்ட எத்தனையே சமபவங்ள் உண்டு அந்தவகையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னால் தலைவரும் எனது சகோதரருமான நந்தகோபனின் (ரகு) விசாரனைகளும் நடத்தப்பட வேன்டுமென கேட்டுக்கொண்டார்.
ரகு கொலை செய்யப்பட்ட 7வது நினைவுநாள் மட்டக்களப்பு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமைக்காரியாலயத்தில் இன்று பிரதித்தலைவர் யோகவேள் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.
இன்நிகழ்வில் கடசியின் பிரதித்தலைவரும், மாணசபை உறுப்பினருமான திரு.திரவியம்(ஜெயம்) பிரதிச்செயலாளர் ஜேர்ஜ்பிள்ளை,பொருளாளர் தேவராஜா, மற்றும் முக்கிய உறுப்பினர்களும் கட்சித்தொண்டர்களும்,பொது மக்களும் கலந்து கொண்டனர்.

திடீர் சந்திப்பு ஒபாமாவும் ரஷ்ய அதிபர் புதினும்

அதிபர் ஒபாமாவும் ரஷ்ய அதிபர் புதினும் திடீர் சந்திப்பு

அதிபர் ஒபாமாவும் ரஷ்ய அதிபர் புதினும் திடீர் சந்திப்பு

ஜி-20 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக துருக்கி நாட்டுக்கு வந்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமாவும் ரஷ்ய அதிபர் புதினும் திடீரென சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்கள்.
கடந்த மாதம் சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக ரஷ்யா தாக்குதல் நடத்த தொடங்கியது முதல் அமெரிக்கவிற்கும் ரஷ்யாவிற்குமான உறவில் விரிசல் ஏற்பட தொடங்கியது. உலகின் இரண்டு வல்லரசுகளுக்கும் இடையில் மீண்டும் பனிப்போர் அச்சம் நிலவிவந்தது.
இந்நிலையில் நேற்று நடந்த ஜி-20 நாடுகளின் மாநாட்டின் போது ஒபாமாவும் புதினும் திடிரென சந்தித்து சுமார் 20 நிமிடங்கள் பேச்சு நடத்தினார்கள். இதில் சிரியா பிரச்சனை பற்றி அதிகம் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க ராணுவ உதவி : ஜெயலலிதா

தாம்பரம் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வெளியேற முடியாமல் இருக்கும் மக்களை மீட்பதற்கு ராணுவ உதவி கேட்கப்பட்டுள்ளது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.


 
 
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. வடகிழக்கு பருவ மழை துவங்குவதற்கு முன்னரே கனமழையை எதிர்கொள்ளும் வகையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு உயரதிகாரிகள், மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்கு நான் உத்தரவு பிறப்பித்திருந்தேன். அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசின் அனைத்துத் துறை அதிகாரிகளும் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். 
பருவகாலம் முழுவதும் பெய்ய வேண்டிய மழை ஒரு சில நாட்களிலேயே கொட்டி தீர்க்கும்போது எத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டாலும், மழைநீர் தேங்குவது மற்றும் சேதங்கள் ஏற்படுவது தவிர்க்க இயலாததாகும். வெள்ளம் மற்றும் சேதங்கள் ஏற்பட்ட இடங்களில் துரிதமாக மீட்பு, நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
 
கடலூர் மாவட்டத்தில் நெய்வேலி, பரங்கிப்பேட்டை, சிதம்பரம்; காஞ்சீபுரம் மாவட்டத்தில் செங்கல்பட்டு, தாம்பரம், திருக்கழுக்குன்றம் மற்றும் மாமல்லபுரம்; திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, தாமரைப்பாக்கம், செம்பரம்பாக்கம், செங்குன்றம், மற்றும் சோழவரம்; விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் ஒரே நாளில் 23 செ.மீ. முதல் 37 செ.மீ. வரை மழை பெய்துள்ளது. இவ்வாறு, மிக அதிக அளவு மழை பெய்த காரணத்தால் ஏற்பட்ட சேதங்களைத் தொடர்ந்து நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள மூத்த அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் அடங்கிய குழுவினை நான் உடனடியாக அனுப்பி வைத்தேன்.
 
அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் நேரடி பார்வையில் மேற்கொள்ளப்பட்ட துரித நடவடிக்கைகள் காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள 683 கிராம ஊராட்சிகளில் 671 கிராம ஊராட்சிகளில் மின் வினியோகம் சரிசெய்யப்பட்டு தடையற்ற மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மின் வினியோகம் இல்லாத கிராமங்களில் ஜெனரேட்டர்கள் மூலம் குடிநீர் மேல்நிலைத் தொட்டிகளில் ஏற்றப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் சீரமைக்கப்பட்டு சாலைப் போக்குவரத்து சீரான முறையில் நடைபெற்று வருகிறது.
 
மழை வெள்ளத்தால் உயிரிழந்த நபர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணத் தொகையும்; குடிசைகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. 40 மருத்துவ முகாம்கள் மூலம் பொதுமக்களுக்கு ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 121 சிறப்பு கால்நடை முகாம்கள் நடத்தப்பட்டு கால்நடைகளுக்கு தடுப்பூசியும், குடற்புழு நீக்க மருந்துகளும் வழங்கப்பட்டுள்ளன. கால்நடை தீவனங்களும் விலை ஏதுமின்றி வழங்கப்பட்டு வருகின்றன.
 
மேலும், 70 நிவாரண முகாம்கள் மூலமாக 58 ஆயிரம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சீபுரம் மாவட்டங்களும் பெருமழையால் பாதிக்கப்பட்டுள்ளன. சென்னையில், மழையால் பாதிக்கப்பட்ட 587 இடங்களில், 207 இடங்களில் மழை நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 380 இடங்களில் மாநகராட்சிப் பணியாளர்கள் போர்க்கால அடிப்படையில் மழை நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை மாநகரத்தில் உள்ள சுரங்கப்பாதைகளில், 6 சுரங்கப்பாதைகளைத் தவிர மற்ற அனைத்து சுரங்கப்பாதைகளிலும் தேங்கியிருந்த நீர் வெளியேற்றப்பட்டு, சாலைப் போக்குவரத்து சீர் செய்யப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசித்த 5,335 நபர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பாக 16 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
 
சென்னை மாநகராட்சி மூலம் 101 இடங்களில் 90 ஆயிரம் உணவுப் பொட்டலங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. பெருமழையால் சாலையில் விழுந்த மரங்களை அகற்றும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.
 
காஞ்சீபுரம் மாவட்டத்தில், மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட தாம்பரம், பல்லாவரம், முடிச்சூர், பள்ளிக்கரணை, நாராயணபுரம், வரதராஜபுரம் போன்ற இடங்களில் 60 முகாம்கள் அமைக்கப்பட்டு 16 ஆயிரம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. இம்மாவட்டத்தில், தேசிய பேரிடர் மீட்புப் படை, தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மற்றும் கடலோரக் காவல்படை மூலமாக தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த மக்கள் படகுகள் மூலமாக வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.
 
மாவட்ட நிர்வாகத்திற்கு மீட்புப் பணிகளில் உதவிடும் பொருட்டு தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சார்ந்த 160 நபர்கள் கொண்ட 9 குழுக்களும், மாநில பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 60 நபர்கள் கொண்ட 3 குழுக்களும், கடலோர காவல் படையினைச் சார்ந்த 87 நபர்கள் கொண்ட 5 குழுக்களும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுவன்றி, சென்னை மாநகரில், தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையைச் சார்ந்த 43 குழுக்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
 
மேலும், தாம்பரம் பகுதியில் வெள்ளம் ஏற்பட்டுள்ள பகுதிகளில் இருந்து மக்களை மீட்பதற்கு ராணுவ உதவியும் கோரப்பட்டுள்ளது. 16-11-2015 அன்று (நேற்று) நான் சென்னை மாநகரில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்டு, மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்ததோடு, அரசு செய்து வரும் நிவாரணப் பணிகளை பற்றி எடுத்துக் கூறியும் அவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் எனது தலைமையிலான அரசு செய்து கொடுக்கும் என்ற உறுதியையும் அளித்துள்ளேன்” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.