எம்.ஆர்.ஸ்ராலின்
காலனித்துவ ஆட்சியின் பின்னரான இலங்கைத்தமிழரின் அரசியல் வரலாற்றில் இந்த மரபுவழித்தாயகம் எனும் கருத்தாக்கம் சுமார் நூறு ஆண்டுகள் கோலோச்சி இருக்கின்றது. “தமிழ் தேசியவாதம் எனும் கோட்பாடு தமிழரின் அரசியலில் தாக்கம் செலுத்த தொடங்கியதில் இருந்து இந்த மரபுவழித்தாயகத்துக்கான தேடலும் அதிகரிக்கத்தொடங்கியது. 1800 களிலேயே ஆங்கில காலனித்துவத்துக்கு எதிராக தமிழர் மத்தியில் உருவான எதிர்ப்புணர்வுகள் தமிழ் தேசியவாதத்திற்கான விதைகளைத் தூவியிருக்கின்றன என கொள்ளப்படுகின்றது. 1847 ஆம் ஆண்டில் தொடங்கி ஆறுமுகநாவலர் தலைமையில் இடம்பெற்ற சைவ பிரசங்க உரைகளும், சைவத்தமிழ் பாடசாலைகளின் உருவாக்கமும் தமிழ் நூற்பதிப்புகளும் தமிழர் மத்தியில் நமது மொழி, நமது மதம், நமது பாரம்பரியம், நமது கலாசாரம் என்பதாக தேசிய உணர்வுகளைத் தூண்ட ஆரம்பித்தன. அந்தவகையில் தேசியவாதத்தின் தோற்றுவாயாக ஆறுமுகநாவலரின் செயற்பாடுகள் இருந்தன. ஆனபோதிலும் அவையொரு “மரபுவழித்தாயகம்” எனும் கருத்தாக்கத்தை நோக்கி அவ்வேளைகளில் விரிவடையவில்லை. ஆங்கில ஆதிக்கத்துக்கு எதிரான சுதேச மொழி, மற்றும் மதங்களைப் பாதுகாக்கும் செயற்பாடுகளாக அவை தம்மை மட்டுப்படுத்திக்கொண்டிருந்தன.
நாவலர் காலத்தைத் தொடர்ந்து இலங்கைத்தமிழரின் அரசியல் வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்களாக பொன்னம்பலம் சகோதரர்கள் காணப்பட்டார்கள். இலங்கைத் தேசிய காங்கிரசின் முதலாவது தலைவராக இருந்த பொன்.அருணாசலம் சட்டநிரூபண சபைக்கு மேல்மாகாணத்தில் ஒரு ஆசனம் தமிழர்களுக்காக வழங்கப்பட வேண்டும் என்கின்ற வேண்டுகோள் சிங்களத் தலைவர்களினால் மறுக்கப்பட்டது என்கின்ற குற்றச்சாட்டை முன்வைத்து 1923 ஆம் ஆண்டு காங்கிரசைவிட்டு விலகி தமிழர் மகாசபை எனும் அமைப்பை உருவாக்கினார். பொன்.அருணாசலத்தின் இந்த செயற்பாடானது தமிழர் தேசியவாதம் எனும் புதியதொரு அரசியல் போக்கினை பகிரங்கமாக அடையாளப்படுத்தியது. இந்த தமிழர் மகாசபையின் அங்குரார்பண உரையில் “தாயக மீட்பு” எனும் அபிலாசையை நோக்கி தமிழர்களை ஒருங்கிணைய அழைப்புவிடுத்தார் அருணாசலம். “எமது தாயகத்தை மீட்டெடுப்பதற்கு நாம் அனைவரும் ஒருமித்து கைகோர்ப்பது அவசியம்.” என அவரது உரை அமைந்திருந்தது. தமிழீழம் என்கின்ற ஒரு தாயகக் கோட்பாட்டை நோக்கிய முதலாவது அடையாளமாக “நமது தாயகம்” என்கின்ற இந்த சொல்லாடல் அமைந்திருந்தது.
தமிழர் மகாசபையின் தொடக்கமானது இலங்கை என்கின்ற ஒரே நாட்டினுள் தமிழ் மொழி எனும் அடையாளத்தினூடாக புதியதொரு தேசியத்தை நோக்கி தமிழர்களை ஒன்றிணையுமாறு அழைப்பு விடுத்தது. அதேவேளை இலங்கை தேசிய காங்கிரசு என்கின்ற மொழி, இனவேறுபாடுகளைத் தாண்டிய இலங்கையருக்கான ஒரு பொது அமைப்பு தேய்ந்து சிங்களத் தேசியமாக குறுகிப்போகவும் காணரமாயிற்று. ஆனபோதிலும் மேட்டுக்குடியினர் மத்தியிலும், கல்விகற்ற வகுப்பினராகவும், தனவந்தர்களாகவும் கொழும்பை மையமாகக்கொண்டிருந்த தமிழர்கள் மத்தியிலும் தமிழர் மகாசபையின் உருவாக்கம் செல்வாக்கு செலுத்த ஆரம்பித்தது. அதேவேளை வடக்கு கிழக்கில் வாழ்ந்த பெரும்பான்மையான தமிழர்கள் மேற்படி “தாயகம்” பற்றி அக்கறையற்றவர்களாகவே காணப்பட்டனர். அதற்கு காரணமாக தமிழர்களிடையே காணப்பட்ட சாதிய, பிரதேச வேறுபாடுகள் அமைந்திருந்தன. வட இலங்கையில் வேளாள மேட்டுக்குடிகளுக்கும் பஞ்சமர்கள் என்று அழைக்கப்பட்ட தலித் மக்களுக்குமிடையேயான வாழ்வியல் அம்சங்களில் இருவேறு உலகங்களே அங்கு சிருஷ்டிக்கப்பட்டிருந்தன. வன்னி, கிழக்கிலங்கை, மலையகம் போன்ற பகுதிகளில் வாழ்ந்த தமிழர்கள் “யாழ்ப்பாணத்தவர்கள் சம அந்தஸ்துடன் தம்மை ஏற்றுக்கொள்ளாதவர்கள்” என்கின்ற மனக்குறைகளுடனும் நம்பிக்கையீனத்துடனுமே இந்தத்தலைவர்களை அணுகினர். குறிப்பாக யாழ் - அகற்றுச்சங்கம், நாவலர் எதிர்ப்பியக்கம் போன்றன இப்பிரதேசங்களில் பிற்காலங்களில் உருவாவதற்கு மேற்படி மனநிலைகள் காரணமாயின. பொன்.இராமநாதன் காலத்திற்கு பின்னர் யாழ்ப்பாணத்தின் பெருந்தலைவராக வளர்ந்துவந்த ஜி.ஜி.பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் காங்கிரசு கூட கிழக்கில் காலூன்றுவதற்கு செய்த பகிரதப்பிரயத்தனம் இறுதிவரை தோல்வியிலேயே முடிந்தது. சுருங்கக் கூறினால் மரபுவழித்தாயகம் ஒன்றைக் கட்டியமைக்கும் முயற்சியில் யாழ்ப்பாணத் தமிழர்கள் கிழக்கு மாகாண மக்களின் ஆதரவினைப் பெறுவதென்பது மேற்படி கருத்தாக்கம் உருவாகி சுமார் அரைநூற்றாண்டுவரை இயலாத காரியமாகவே இருந்தது. கிழக்கு மக்கள் எதிர்கொண்ட வாழ்வியல் பிரச்சனைகளுக்கும் தமிழ் தேசியம் மரபுவழித்தாயகம் எனும் அரசியல் கோசங்களுக்கும் இடையில் இருந்து வந்த பிணைப்பற்ற நிலைமையே இதற்கு காரணமாயிற்று.
இந்தநிலையில்தான் இந்தியா, இலங்கை போன்ற நாடுகள் பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தில் இருந்து விடுதலை பெறத்தொடங்கின. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது அதிலிருந்து பிரிந்து பாகிஷ்தான் என்கின்ற புதியநாட்டை உருவாக்கினார் ஜின்னா. இந்த பாகிஷ்தானின் உருவாக்கம் உலகெங்கிலும் செய்தியாக பரவியபோது யாழ் முற்றவெளியில் நடந்த கூட்டமொன்றில் உரையாற்றிய ஜி.ஜி.பொன்னம்பலம் “இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் அதிலிருந்து பாகிஷ்தானை பிரித்தெடுத்த ஜின்னாவைப்போல் இலங்கை சுதந்திரமடைந்தவுடன் அதிலிருந்து தமிழீழத்தை மீட்டெடுக்கப்போகும் ஜின்னா நானே” என்று மார்புதட்டிப்பேசினார். பொன்.அருணாசலம் காலத்தில் இருந்த நமது தாயகம் எனும் அடையாள வார்த்தை பிரயோகம் இங்கே “தமிழீழம்” என முதன்முறையாக தாயக கோட்பாட்டை நோக்கிய பெயரிடலாக பரிணமிப்பதைக் காணலாம்.
1947 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட டி.எஸ்.சேனநாயக்கா தலைமையிலான அரசாங்கம் புதிய நீர்ப்பாசனத் திட்டங்களை அமுல்படுத்தியது. இத்திட்டங்கள் திருமலை மாவட்டத்தின் கந்தளாய், மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்திருந்த அம்பாறை பிரதேசத்தின் கல்லோயா போன்ற பகுதிகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. எனவே தமிழர் வாழும் பிரதேசங்களை மையமாகக் கொண்டு அமைந்திருந்த இத்திட்டங்கள் எமது தாயகத்தை ஆக்கிரமிக்கும் செயற்பாடு என்று எஸ்.ஜே.வி.செல்வநாயகம் போன்ற தலைவர்கள் எதிர்ப்புக்குரல் எழுப்பினர். தமிழர்களின் மரபுவழித்தாயகமான வடக்கு கிழக்கு மாகாணங்களை பலவீனப்படுத்தும் முயற்சி இதுவென தமிழ் தலைவர்கள் வாதங்களை முன்வைத்தனர். கல்லோயா போன்ற பகுதிகளில் சிங்களகுடியேற்றங்களை அரசாங்கம் ஏற்படுத்துவதால் தமிழர்கள் மட்டும் அல்ல முஸ்லிம்களும் தங்கள் பிரதிநிதித்துவத்தை இழக்கலாம் என்று செல்வநாயகம் குரலெழுப்பினார்.
இந்த நீர்ப்பாசனதிட்டங்களில் இனவேறுபாடு இன்றி சகலருக்கும் காணி கச்சேரிகள் மூலம் நிலங்கள் பிரித்து வழங்கப்பட்டபோதிலும் தமிழர்கள் அங்கே குடியேற விரும்பவில்லை. அதற்கான அவசியமும் இயற்கை வளங்களுக்கு பஞ்சமற்ற கிழக்கு மாகாணமக்களுக்கு ஏற்படவில்லை. எனவே இத்திட்டங்களை சிங்கள மக்கள் முழுமையாக பயன்படுத்திக்கொண்டார்கள் என்பதே உண்மையாகும். அதேவேளை கல்லோயா அணைக்கட்டு திட்டம் பற்றி “மட்டக்களப்பின் தென்பகுதியில் இருந்த காடுகளை எல்லாம் பரந்த நீர்வளம், நிலவளம் சான்ற வயல்வெளிகளாகவும், குடியேற்ற நிலமாகவும் விளங்கவைத்திருக்கும் இத்திட்டம் மட்டக்களப்பு நாட்டின் பொருள் வளத்தை உயர்த்தும் அமுத சுரபியாகும்”(மட்டக்களப்பு தமிழகம் -பக்-22) என வி.சி.கந்தையா போன்ற தமிழ் அறிஞர்கள் முன்வைத்த கருத்துக்கள் எல்லாம் அரசியல்வாதிகளின் பெரும் குரல்களுக்கு மத்தியில் அமுங்கிப்போயின என்கின்ற உண்மைகளும் உண்டு.
1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரமடைந்தபின்னர் கொண்டுவரப்பட்ட பிரஜாவுரிமைச் சட்டம் 10 லட்சம் இந்திய வம்சாவழி தமிழர்களின் வாக்குரிமையைப் பறித்து அவர்களை நாடற்றவர்களாக்கியது. இச்சட்டம் கொண்டுவரப்பட்ட போது தனது மந்திரிப் பதவியை காப்பாற்றிக்கொள்வதற்காக தமிழ் காங்கிரசின் தலைவராக இருந்த ஜி.ஜி. பொன்னம்பலம் அதனை ஆதரித்தார் எனக்கூறி காங்கிரசுக்குள் உடைவு ஏற்பட்டது. அதனடிப்படையில் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தலைமையிலானோர் தமிழ் காங்கிரசை விட்டு வெளியேறி 1949 ஆண்டு டிசம்பர் மாதம் தமிழரசுக்கட்சியை உருவாக்கினர். இந்த தமிழரசுக்கட்சியே தமிழரின் தாயகக்கோட்பாடு எனும் கருத்தாக்கத்தை வடகிழக்கின் மூலைமுடுக்குகள் எல்லாம் புகுத்துவதில் பிற்காலத்தில் வெற்றிபெற்றது. மலையக மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக குரல்கொடுத்த செல்வநாயகம் “இன்று அவர்களுக்கு நாளை நமக்கு” என்று வடக்கு கிழக்கு மக்களை நோக்கி எச்சரிக்கை செய்தார். அதேவேளை கந்தளாய், கல்லோயா பிரதேசங்களில் இடம்பெற்ற குடியேற்றங்களை எதிர்ப்பதிலும் தீவிர அக்கறை காட்டினார்.
1951 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழரசுக்கட்சியின் திருமலை மகாநாடு பின்வருமாறு தீர்மானத்தை நிறைவேற்றியது. “பாரம்பரியமாக தமிழ் பேசும் மக்கள் எந்தப்பிரதேசத்தில் வாழ்ந்து வந்திருக்கிறார்களோ! அந்தப்பிரதேசத்தை தமதாக்கிக்கொள்ள அவர்களுக்கு பூரண உரிமை இருக்கின்றது.” தமிழரசுக்கட்சியின் இந்த முதலாவது மகாநாட்டுத் தீர்மானமே 1952 ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் முக்கிய பிரச்சாரமாய் இருந்தது. மரபுவழித்தாயகம்.- எழுச்சியும் வீழ்ச்சியும் (2) http://www.akkininews.com/2013/08/blog-post_16.html
Ce commentaire a été supprimé par l'auteur.
RépondreSupprimer