இலங்கை கிளிநொச்சியில் முன்பு விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்டு வந்த செஞ்சோலை சிறுவர் இல்லத்துக்கு இன்று மதியம் விஜயம் செய்தார் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷே.
முன்பு விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்டு வந்த செஞ்சோலை சிறுவர் இல்லம், தற்போது அதே இடத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் பிரமுகர் கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதனால் நடத்தப்பட்டு வருகிறது. போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் இங்கு வைத்து பராமரிக்கப்படுகிறார்கள்.
இன்று கிளிநொச்சிக்கு ரயில் சேவை விடப்பட்டதையடுத்து அங்கு விஜயம் செய்த இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷே, செஞ்சோலை சிறுவர் இல்லத்துக்கும் விஜயம் செய்தார். அவரை செஞ்சோலை இல்லத்தில் வசிக்கும் குழந்தைகளும், இல்லத்தை நடத்தும் கே.பி.யும் வரவேற்றனர்.
விடுதலைப் புலிகள் இயக்கம் முன்பு யுத்தத்தில் வெற்றிகளை பெற்ற தாக்குதல்கள் நடந்தபோது, அந்த இயக்கத்துக்கான ஆயுதங்களை அனுப்பி வைத்தவர் கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன் (செல்வராசா பத்மநாதன்). இலங்கை வடபகுதியில் உள்ள ஆனையிறவு ராணுவ முகாமை விடுதலைப்புலிகள் கைப்பற்றியபின், அந்த இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், “இந்த வெற்றிக்கு முக்கிய காரணமே, கே.பி. அனுப்பி வைத்த ஆயுதங்கள்தான்” என்று விடுதலைப்புலிகள் தளபதிகள் மத்தியில் பேசினார்.
இன்று கிளிநொச்சிக்கு விஜயம் செய்த இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷே, கே.பி.யால் நடத்தப்படும் செஞ்சோலை சிறுவர் இல்லத்துக்கு விஜயம் செய்திருக்கிறார். கே.பி.யையும் சந்தித்திருக்கிறார்.
இது தொடர்பாக தமிழ் மீடியாக்களில் காரசாரமாக கருத்துக்கள் எழுதப்படும். ஆனால், செஞ்சோலை இல்லத்தில் உள்ள, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் குழந்தைகளுக்கு, ஏதாவது நல்லது நடந்தாலும் நடக்கலாம். எழுதுங்க சார் எழுதுங்க.. எழுதுவதற்கு முன் அந்தக் குழந்தைகளுக்கு ஒரு பென்சிலாவது வாங்கி கொடுத்துவிட்டு எழுதுங்க..!
Aucun commentaire:
Enregistrer un commentaire