வடமாகாண சபை தேர்தல் தமிழ் மக்களை பொறுத்தவரையில் இந்த அரசாங்கம் என்ன செய்தது அல்லது என்ன செய்யும் என்பது பற்றியதல்ல. மாறாக TNA யினர் என்ன செய்கின்றனர்? நடை முறையில் என்ன செய்யப்போகின்றனர் என்பது பற்றியதே!
ஒளிவு மறைவு இன்றி இந்த அரசாங்கம் அதிகார பரவலாக்கம் தொடர்பாக தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வந்திருக்கின்றது. சுருக்கமாக சொல்வதானால்; அதிகாரப்பரவலாக்கம் பிரிவினைக்கு இட்டு செல்லும் என்றும் நாட்டை பிளவு படுத்த விடமாட்டோம் என்பதுமே ஆட்சியாளர்களின் நிலைப்பாடாக இருக்கின்றது.
அரசாங்கம் TNA இனருடன் பல சுற்றுக்கள் பேசியிருக்கின்றது எனவே சாதாரண பொதுஅறிவுள்ள அனைவருக்குமே தெரிந்த இந்த விடயம் TNA இனருக்கும் நன்றாகவே தெரியும்.
அரசின் இந்த நிலைப்பாட்டை நிர்ணயிக்கும் காரணிகளில் மிகவும் முக்கியமானது விமல் வீரவன்சா, சம்பிக்க, பொது பல சேனா போன்ற சக்திகளின் அடிப்படைவாதமே என்பதுவும் தெரிகின்றது.
அரசாங்கத்தின் தீர்வு தொடர்பான போக்கு அரசில் அங்கம் வகிக்கும் LSSP, CP, வாசுதேவா, EPDP மற்றும் ராஜித போன்றவர்களுக்குமே திருப்தி அளிப்பதாக இருக்கவில்லை என்பதை வெளிப்படையாகவும் தொடர்ச்சியாகவும் தெரிவித்து வந்திருக்கின்றனர்.
பெரும்பாலான தமிழ் மக்களுக்கும் அரசின் அதிகார பரவலாக்கம் தொடர்பான தற்போதைய நிலைப்பாடு திருப்தியாக இல்லை. இந்த நாட்டிலுள்ள பெரும்பான்மையான நியாயமாக சிந்திக்கும் சிங்கள முஸ்லிம் மக்களும் தமிழ் மக்களுக்கு கௌரவமான தீர்வு ஒன்று வேண்டும் என்றே கருதுகிறார்கள்.
மொத்தத்தில் அரசியல் தீர்வு தொடர்பாக காத்திரமான நகர்வுகளை இன்றைய UPFA அரசு துணிவுடன் மேற்கொள்ளும் என்ற நம்பிக்கை தமிழ் வாக்காளர்களுக்கு இல்லை என்பதும் உண்மையே.
அதே நேரம் தமிழ் மக்களை பொறுத்த வரையில் தங்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளான TNA யினர் இது தொடர்பாக என்ன செய்தார்கள், செய்கின்றார்கள் என்பதே இன்றுள்ள முதன்மையான கேள்வியாகும்.
கடந்த தேர்தல்களில் பெரும்பான்மையாக தெரிவு செய்யப்பட்ட TNA யினர் இந்த நெருக்கடியான சூழ்நிலையிலிருந்து தமிழ் மக்களை கௌரவாமான தீர்வை நோக்கி சமயோசிதமாக முன்நகர்த்தவேண்டும் என்ற எதிர்பார்ப்பு பலருக்கு இருந்தது. ஆனால் TNA யினரின் கதைகளும் போக்குகளும் அப்படி எந்த வித நம்பிக்கையையும் தருவதாக இல்லை.
உயர் நீதிபதி விக்னேஸ்வரனின் வருகை
உயர் நீதிபதி விக்னேஸ்வரன் இந்த சிக்கலான ஆடு களத்திற்க்குள் சம்பந்தரால் கொண்டுவரப்பட்டபோது மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை இருந்தது, இன்னும் இருக்கின்றது . “புதிய துடைப்பம் நன்றாக கூட்டும்” என்பார்களே அது போல. நீதிபதியாக இருந்தவர், சட்டவல்லுனர், சிங்கள மக்களுக்கு நிதானமாக தமிழ் மக்களின் உண்மையான பிரச்சினைகளை சொல்ல கூடியவர், ஊழலற்ற நேர்மையான நடைமுறைகளை பின்பற்றுவார் என்று நம்பினார்கள், நம்புகிறார்கள்.
இன்று தமிழ் அரசியல் அரங்கில் இருக்கும் TNA தலைவர்கள் தங்களது இயலாமையை, ஊழல்களை, அங்கிடுதத்தி தனங்களை மறைக்கவவே “தமிழ் வீர” காட்டு கூச்சல் போடுகிறார்கள் என்பது பொது அறிவுள்ளவர்களுக்கு தெரியும்.
ஆனால் உயர் நீதி அரசரின் தேர்தல் பிரச்சார சாகச பேச்சுக்களும், வெளியிடப்பட்டிருக்கும் விஞாபனத்தையும் பார்த்தால் இவரும் இந்த சித்திரக்குள்ளர்களுடன் சேர்ந்து தமிழ் மக்களின் கண்களை கட்டி, “எவடம் எவடம் புளியடி புளியடி” என்ற விளையாட்டை மீண்டும் தொடங்க போகிறார்கள் போல் தெரிகின்றது.
தமிழ், சிங்கள அடிப்படைவாத அரசியல்:
ஒருகணம் நீங்கள் சாதாரண இனவாதமில்லாத சிங்கள பொது மகனாக இருப்பதாக நினைத்துக்கொண்டு சம்பந்தன் சுரேஷ் போன்றவர்களின் வெட்டி வீராப்பு கதைகளை கேட்டு பார்ப்பதாக நினையுங்கள்; எங்களுக்கு பொது பல சேனா போன்ற அடிப்படைவாதிகளின் கதைகளை கேட்கும் போது தோன்றும் அதே உணர்வுதானே அவர்களுக்கும் ஏற்படும்.
ஸ்ரீ லங்கா அரசியலை பொறுத்த வரையில் பொது பல சேனாவின் இனவாத அரசியலும் TNA இனரின் பிரிவினை கோஷமும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் ஆகும். பொது பல சேனா போன்ற அடிப்படைவாதிகளால் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை வழங்க முடியாது என்று தமிழர்கள் எவ்வாறு நம்புகிறார்களோ அதே போல் தான் சிங்கள மக்களும் TNA யினரின் வெட்டி வீராப்பு கதைகள் நாட்டை பிரிப்பதற்க்கும் அதனை தொடர்ந்து அந்நிய சக்திகளுடன் இணைந்து சிங்கள மக்கள் ஆக்கிரமிக்கப்படுத்தலுக்குமே வழி கோலும் என்று நம்புவதில் என்ன தவறு இருக்கின்றது?
இரு தரப்பிலும் உள்ள இவர்கள்; அடிப்படை வாதத்தை பூஜித்து, போசித்து வருகின்றார்கள் . ஒன்றில்லாமல் மற்றது உயிர் வாழ முடியாது என்பதே உண்மை. உண்மையிலேயே நாட்டில் சுமூகமான நிலை தோன்ற வேண்டும் என்றால் சிங்கள தமிழ் அடிப்படை வாத போக்குகள் இரண்டுமே அரசியல் அரங்கிலிருந்து அகற்றப்படல் வேண்டும். இதுவே இன்று ஸ்ரீ லங்கா மக்களுக்கான முதன்மையானதும் முக்கிய மானதுமான அரசியற் கடமையாகும்.
இந்த பின்னணியில் தான் TNA இனரின் கோசங்களும் அணுகுமுறைகளும் பொது அறிவுள்ளவர்களினால் நிதானமாகவும் நுணுக்கமாகவும் பரிசீலிக்கப்படல் வேண்டும். தமிழ் பேசும் மக்களை பொறுத்தவரையில் இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாகும்.
தமிழ் அடிப்படை வாத அரசியல் கடந்த மூன்று தசாப்தங்களாக தமிழ் மக்களுக்கு இழைத்த சொல்லொணா துன்ப துயரங்கள் இன்னும் தொடரத்தான் வேண்டுமா என்பதை தீர்மானிக்கப்போகும் தேர்தல் இது.
மாவை சேனாதிராசா போன்ற அப்பாவி தேசியவாதிகளை ஒரங்கட்டி தமிழ் அடிப்படை வாத அரசியலை முன்னோக்கி நகர்த்த்துவதன் மூலம் தொடர்ந்தும் அரசியல் பிழைப்பு நடத்த முயலும் சுரேஷ், ஸ்ரீதரன் போன்றவர்களுக்கு தகுந்த பாடம் கற்பிக்க வாக்காளர்களுக்கு கிடைத்திருக்கும் பொன்னான சந்தர்ப்பம் இதுவாகும்.
ஆகவே அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும். சிந்திக்கும் மக்கள் நூறு சத விகிதம் வாக்களிப்பு நடைபெற ஊக்குவிக்க வேண்டும்.
வட மாகாண தமிழ் வாக்காளர்கள் முன்னாலுள்ள தெரிவுகள் என்ன?
இருபதுக்கு மேற்பட்ட குழுக்கள் போட்டி இடுகின்றன என்று சொல்லப்பட்டாலும் முக்கியமாக ஐக்கிய சுதந்திர முன்னணியும்(UPFA) தமிழ் தேசிய கூட்டமைப்புமே (TNA) பிரதானமான போட்டியாளர்களாகும்.
ஐக்கிய தேசியக்கட்சிக்கு (UNP) யாழ் வர்த்தக சமூகத்தினரிடம் உள்ள ஆதரவு, ஊர்க்காரன் மற்றும் முன்னைய வாக்களிக்கும் விதங்கள், போன்ற காரணிகளை வைத்து பார்க்கும் போது யாழ் மாவட்டத்தில் ஒரு ஆசனம் கிடைக்கலாம்.
மிகுதி முப்பத்தைந்து ஆசனங்களும் TNA க்கும் UPFA க்கும் இடையே தான் பகிர்ந்து கொள்ளப்படும். ஏனைய குழுக்களுக்கு அளிக்கும் வாக்குகள் வீணாகப்போகும் வாக்குகள் என்பதை மனங்கொள்ளல் வேண்டும்.
எனவே இந்த தேர்தலில் TNA க்கு வாக்கு போடும் போது எதற்காக போடுகிறோம் UPFA க்கு வாக்கு போடும் போது என்ன செய்தியை சொல்ல விரும்புகிறோம்; என்பதை தெளிவாக புரிந்து கொண்டு அதன் விளைவுகளையும் புரிந்துகொண்டு நேர்மையாக வாக்களிக்க வேண்டும். இந்த அடிப்படையில் பின்வரும் விடயங்களை கவனத்தில் எடுக்கவும்.
கூட்டமைப்பு பற்றிய உண்மையான நிலை சுருக்கமாக:
கூட்டமைப்பானது இன்று 13 பாராளுமன்ற உறுப்பினர்களையும், கிழக்கு மாகாணத்தில் 11 மாகாண சபை உறுப்பினர்களையும் உள்ளுர் ஆட்சி சபைகளில் 400 வரையிலான உறுப்பினர்களையும் கொண்டுள்ளது
இவர்கள் அனைவரும் அரச சம்பளம், அரச பாதுகாப்பு சலுகைகள், சொகுசு வாகனங்கள், மானியங்கள் இலவச பிரயாணங்கள் போன்ற எல்லாவற்றையும் மக்களின் பெயரால் அனுபவித்து வருகிறார்கள்.
இவ்வளவு பொறுப்புகளையும் இவர்களிடம் கொடுத்திருந்த போதும், தமிழ் மக்கள் அரசியற் பலமும் இழந்து வாழ்வாதார தேவைகளுக்கே நித்தமும், எதற்க்கும், எல்லோரிடமும் யாசிக்கும் இன்றைய கேவலமான நிலைக்கு யார் காரணமானவர்கள் என்றால் அதற்க்கு பொறுப்பு கூற யாரும் இல்லை. இந்த முறை வாக்களித்த்தால் எல்லாம் தீர்க்கப்படும் என்பதே ஒவொரு தேர்தல்களிலும் இவர்களது ஒரே பதில்.
இவ்வளவு பொறுப்புக்களையும் தமிழ் மக்கள் இவர்களை நம்பி கொடுத்தும் இவர்கள் தமிழ் மக்களுக்கு செய்தது என்ன? குறைந்த பட்சம் ஒரு நேர்த்தியான ஜனநாயக அமைப்பாகவாவது இருக்கிறார்களா? என்றால் இல்லை என்பதே உண்மையாகும்.
இவர்களிடம்; கூட்டமைப்பை தேர்தல் திணைக்களத்தில் ஒரு அமைப்பாக பதிவு செய்யும் பக்குவம் கூட இருக்கவில்லை. இது விடயத்தில் இவர்களுக்குள் நடந்த குத்துவெட்டுக்களும் குழிபறிப்புக்களும் ஊரறிந்தவிடயமே. தேர்தல் முடிவடைந்ததும் மீண்டும் இந்த சுயநல குடுமி பிடி சண்டை தொடரும் என்பது பொது அறிவுள்ள அனைவருக்கும் தெரியும்.
கூட்டமைப்பிற்கு இன்றுவரை வடக்கு கிழக்கில் உத்தியோக பூர்வமான அலுவலகமும் கிடையாது. ஆளுக்காள் தங்களது வியாபாரங்களை தொடர்வதற்க்காக கடைகள் பரப்பி இருக்கிறார்கள்.
கூட்டமைப்பிற்கு உத்தியோக பூர்வமான பத்திரிகையோ, இணையத் த்தளமோ, பேச்சாளரோ இன்று வரை இல்லை. இவர்களுக்கு வாக்களித்த நேர்மையான பெரும்பாலான வாக்காளர்களுக்கு எந்த ஒரு விடயத்திலும் இவர்களது நிலைப்பாடு என்ன என்பதும் தெரியாது. ஏன்? நேர்மையாக ஊழலற்ற நிர்வாகம் நடத்த விரும்பும் TNA உள்ளூர் ஆட்சி உறுப்பினர்களுக்குமே தெரியுமா என்பதும் சந்தேகமே.
மொத்தத்தில் TNA அரசியல் என்பது அடிப்படை வாத அரசியலை தொடர்ந்து தக்க வைத்து கொள்வதன் மூலம் தத்தமது பதவி சுகங்களை காப்பாற்றி கொள்வதென்பதே
UPFA க்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்பது பற்றி ஓரிரு குறிப்புக்கள்:
கூட்டமைப்பு தொடர்பாக தமிழ் சமூகம் தங்களது அதிருப்தியை பதிவு செய்வதற்கான ஒரு சந்தர்ப்பம் இதுவாகும்.
தமிழ் மக்கள் இனவாத அடிப்படை வாத அரசியலை நிராகரிக்கிறார்கள் என்று உறுதியாக கூறுவதற்கான சந்தர்ப்பமும் இதுவாகும்
கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்னும் மூன்று வருடங்களுக்கு, அதாவது 2016 ம் ஆண்டுவரை பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்க தான் போகிறார்கள். எனவே அவர்கள் உண்மையாகவே நிரந்தர அரசியல் தீர்வு நோக்கி முயற்சிகள் மேற்கொள்ளும் பட்சத்தில் அவர்கள் எடுக்கும் முயற்சிக்களுக்கு இத்தேர்தல் தோல்வி தடையாக இருக்காது.
UPFA க்குள் இருக்கக்கூடிய அதிகார பரவலாக்கலுக்கு ஆதரவான CP, LSSP, EPDP போன்றவற்றின் கரங்களை பலப்படுத்துவதன் மூலம் அரசின் மீது அரசியல் தீர்வு தொடர்பான அழுத்தத்தை அதிகரிக்கலாம்.
முடிவாக தமிழ் மக்கள் தீர்மானிக்க வேண்டிய விடயம் அடிப்படைவாத அரசியலை தொடர்வதா? இல்லையேல் இந்த மாகாண சபை தேர்தலில் ஒரே ஒரு மாற்றாக உள்ள அணியை ஆதரிப்பதன் மூலம் ஒரு புதிய அணுகுமுறையை ஆரம்பிப்பதா என்பதே.
முடிவு வாக்காளர்களின் கைகளிலேயே உள்ளது!
Aucun commentaire:
Enregistrer un commentaire