vendredi 6 septembre 2013

வெளிநாட்டு உதவிகளின்றி தீவிரவாதத்தை தோற்கடிக்க முடியும் என்று வழிகாட்டிய நாடு இலங்கை


விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட மே மாதம் 19ம் நாளை தீவிரவாதம் ஒழிக்கப்பட்ட வெற்றி நாளாக அனைவரும் கொண்டாட வேண்டும் என்று தெரிவித்துள்ளார் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி.

இலங்கை இராணுவம் ஏற்பாடு செய்திருந்த, பாதுகாப்புக் கருத்தரங்கில் நேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

‘போருக்குப் பிந்திய சிறிலங்கா – சவால்களும் பிராந்திய உறுதிப்பாடும்‘ என்ற தொனிப்பொருளில் சுப்பிரமணியன் சுவாமி நிகழ்த்திய உரையில்,
“ஜனநாயக நாடு ஒன்று வெளிநாட்டு உதவிகளின்றி தீவிரவாதத்தை தோற்கடிக்க முடியும் என்று வழிகாட்டிய நாடு சிறிலங்கா.

இதற்காக பிராந்திய நாடுகள் இலங்கைக்வுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளன.

இஸ்ரேல் இராணுவத்தின் வினைத்திறனை மிஞ்சும் அளவுக்கு இலங்கை இராணுவம் திறமையானதாக மாறியுள்ளது.

சிறிலங்கா தொடர்பாக தமிழ்நாட்டில் இருந்து வெளியாகும் செய்திகளை பார்க்கும் போது, முழு இந்தியாவும் சிறிலங்காவை எதிர்ப்பதான உணர்வு ஏற்படலாம். ஆனால், உண்மையான நிலைமை அதுவல்ல.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் அவரது பிரதான தளபதிகளும் 2009 மே மாதம் 19ம் நாள் கொல்லப்பட்டதுடன், மூன்று பத்தாண்டுகளாக இரத்தஆறு பெருக்கெடுக்கக் காரணமான போர் முடிவுக்கு வந்தது.

எனவே, மே மாதம் 19ம் நாளை தீவிரவாதம் ஒழிக்கப்பட்ட வெற்றி நாளாக அனைவரும் கொண்டாட வேண்டும்.

இலங்கைபோரில் வெற்றி பெறுவதற்கு இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் உதவி செய்தன.

இதற்கென இந்தியாவுடன் பேச்சுக்களை நடத்தி ஒத்துழைப்பை பெறுவதற்காக, இருதரப்பிலும் தலா மூவரைக் கொண்டதாக - ஆறு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழு மிகவும் இரகசியமான முறையில் போர் உச்சகட்டத்தில் நடந்து கொண்டிருந்த போது உடனுக்குடன் தீர்மானங்களை எடுத்து அவற்றை வெற்றிகரமாக நிறைவேற்றியது.

தமிழ்நாட்டின் அப்போதைய முதல்வரான கருணாநிதிக்கு போரின் முன்னேற்றம் பற்றி அடிக்கடி எடுத்துக் கூறப்பட்டது.

பிரபாகரனும் அவரது குடும்பத்தினரும் கொல்லப்படுவது கூட கருணாநிதிக்கு அறிவிக்கப்பட்டது.

கருணாநிதி மதிநுட்பத்துடன் நிலைமையை உணர்ந்து இந்த விடயத்தில் தலையிடவில்லை.

சிறிலங்காவின் உள்விவகாரங்களில் இந்தியா தலையிடும் என்று அச்சம் கொள்ளத் தேவையில்லை. }

ஐ.நாவின் கீழ் அல்லது சார்க் அமைப்பின் கீழ் ஏதாவது இருதரப்பு உடன்பாடுகள் நிறைவேற்றப்படும் போது மட்டுமே இந்தியா இவற்றில் சம்பந்தப்படும்.

தமிழர்களும் சிங்களவர்களும் இருவேறு மொழிகளைப் பேசினாலும் இன ரீதியாக ஒன்றுபட்ட சமூகம் என்ற நிலைப்பாட்டிலேயே இந்தியாவில் உள்ள நானும் என்னைப் போன்ற பெரும்பாலானோரும் இருக்கின்றனர்.

இதனை மரபணுப் பரிசோதனைகள் மூலம் உறுதிப்படுத்தலாம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire