mercredi 16 avril 2014

திருநங்கைகள் நாட்டின் மூன்றாவது பாலினமாக உச்சநீதிமன்றம் உத்தரவு

ஆண், பெண் என குறிப்பிடப்படும் பாலினங்களைப் போல, திருநங்கைகள் நாட்டின் மூன்றாவது பாலினமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என கூறி இந்திய உச்சநீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கியுள்ளது.
திருநங்கைகளுக்கும் சமத்துவம் அளிக்கும் வகையில் வழிவகை செய்யக் கோரி இந்திய உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனு மீதான விசாரணையில், நீதிபதி ராதாகிருஷ்ணன் தலைமையிலான அமர்வு இந்த தீர்ப்பை இன்று அளித்துள்ளது.இது தொடர்பில் தேவையான சட்டதிருத்தங்களை ஏற்படுத்தக் கூறியுள்ள அந்த அமர்வு, மத்திய ,மாநில அரசுகள் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது.
பின்னர் அவர்கள் ஆறு மாதகாலத்தில், இந்த விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், அமல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்தும் தங்களது அறிக்கையை சமர்ப்பிக்கவும் நீதிமன்றம் கோரியுள்ளது.
மேலும் மூன்றாவது பாலினமாக அங்கீகரிக்கப்படும் திருநங்கைகளுக்கு வேலை வாய்ப்பு, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளிலும் உரிய உரிமையை பெறுவதற்கு தேவையான
வழிமுறைகளை பின்பற்ற நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
அத்தோடு திருநங்கைகளுக்கான சிறப்பு இடஒதுக்கீடு அளிக்கவும், பொருளாதாரம் மற்றும் சமுகரீதியில் அவர்களை பின்தங்கியவர்களாக அங்கீகரிக்கவும் அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
தேசிய சட்ட உதவி மையத்தின் உறுதுணையுடன் தொடரப்பட்ட இந்த வழக்கின் விசாரணையில், நீண்ட கால காத்திருப்புக்கு பிறகு இன்று தங்களுக்கு நீதி கிடைத்துள்ளதாக திருநங்கைகளின் ஆதரவு அமைப்புகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளன.

Aucun commentaire:

Enregistrer un commentaire