தலிபான் தீவிரவாதிகளின் தொடர் தாக்குதல்களுக்கிடையே ஆப்கானிஸ்தான் அரசு அதிபர் தேர்தலை எதிர்கொள்கின்றது. இதன் விளைவு எதுவாக இருக்கும்போதிலும் அமைதியான முறையில் ஒரு அரசிடமிருந்து மற்றொரு அரசுக்கு மாற்றம் நடைபெறுவது என்பதே இங்கு ஏற்பட்டுள்ள பெரிய முன்னேற்றம் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். இன்றைய அதிபர் தேர்வின் முன்னணியில் முன்னாள் வடக்கு கூட்டணித் தலைவரும், ஹமீத் கர்சாய் அரசின் வெளியுறவு அமைச்சருமான அப்துல்லா இருப்பதாகக் கருதப்படுகின்றது. இருப்பினும் தனி மெஜாரிட்டியுடன் அரசு அமைக்கத் தேவையான 51 சதவிகித வாக்குகளை அவர் பெறுவாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
அவ்வாறு இருக்கும் பட்சத்தில் பஷ்டுன் பிரிவினரின் வாக்குகளைப் பெறும் அஷ்ரப் கனி அல்லது சல்மை ரசூல் இரண்டாவது இடத்தைப் பெறக்கூடும். இவர்களில் கனி வெற்றி பெற்றால் கர்சாய் கையெழுத்திட மறுத்த அமெரிக்காவின் இருதரப்பு பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு அனுமதி கிடைக்கும் என்பது மேற்கத்திய நாடுகளின் கணிப்பாக இருக்கின்றது.
இவர்களில் யார் ஆட்சி அமைத்தாலும் இந்தியா தன்னுடைய நிலையான உறவைத் தொடரமுடியும் என்ற நம்பிக்கையில் உள்ளது. உணவு, எரிபொருள் மற்றும் ஆயுத திறனை உலக நாடுகள் ஆப்கானிஸ்தானுக்கு வழங்கமுடியும் என்றால் அவர்களால் தலிபான்களை எதிர்க்கவும் பின்னர் ஒரு கட்டத்தில் அவர்களுடனான சமாதான உடன்பாட்டை எட்டவும் முடியும் என்று ஆப்கானிஸ்தானின் முன்னாள் இந்தியத் தூதர் ஜெயந்த் பிரசாத் தெரிவிக்கின்றார்.
ஆப்கானிய அரசுக்கான ராணுவ தளவாட உதவிகளும், ராணுவ, காவல் மற்றும் சிறப்புப் படையினருக்கான பயிற்சி முறைகளும் இந்திய அரசால் விரிவுபடுத்தப்பட வேண்டும். இது இல்லாமல் உட்கட்டமைப்பு மற்றும் பொருளாதார உதவிகள் மட்டும் வழங்கப்படுவது என்பது இந்திய நலன்களைப் பாதுகாப்பதற்கான மூலோபாய முயற்சிகளுக்கோ, முதலீடுகளுக்கோ ஏற்படும் பின்னடைவாகவே இருக்கும் என்பது அனந்தா-அஸ்பன் மையம், டெல்லி பாலிசி குரூப் என்ற இரண்டு சிந்தனை மையங்கள் வெளியிட்டுள்ள ஆய்வுக் கணிப்பாகும்.
இந்த கணிப்பு இந்தியப் பிரதமரின் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானுக்கான சிறப்புத்தூதரான எஸ்.கே.லம்பாவால் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
Aucun commentaire:
Enregistrer un commentaire