தமது உள்நாட்டுப் பொருளாதார சமூக நெருக்கடிகளை எதிர்கொள்வதற்காக இலங்கை அரசாங்கம் புலிகள் மீண்டுள்ளதாக மக்களை ஏமாற்றி வருகிறது. 2009 ஆம் ஆண்டில் இனப்படுகொலைக்கு சற்று முற்பட்ட காலத்தில் சிங்களப் பகுதிகளில் புலிகளுக்குப் போட்டியாக மக்கள் நடமாடும் இடங்களில் இலங்கை அரசே வெடுகுண்டுகளை வெடிக்கவைத்தது. இது போன்ற நடவடிக்கைகளையும் எதிர்காலத்தில் இலங்கை அரசு மேற்கொள்ள வாய்ப்புக்கள் காணப்படுவதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புலிகளைக் காரணம் காட்டி சமூக அக்கறைகொண்டவர்களை இலங்கை அரசு கைதுசெய்து சிறையிலடைத்துவருகிறது. புலிகள் இயக்கம் இனிமேல் இல்லை என்றும் மக்கள் மத்தியிலிருந்தே போராட்டங்கள் தோன்ற வேண்டும் என்றும் கூறி புதிய மக்கள் சார்ந்த அரசியலை முன்வைத்து உலகிலுள்ள ஜனநாயக முற்போக்கு சக்திகளின் ஆதரவைத் திரட்டாமால் ராஜபக்ச அரசின் நோக்கங்களுக்கு ஆதரவாக புலம்பெயர் அரசியல் தலைமைகள் நடந்துகொள்கின்றன.
தமிழ் நாட்டில் உளவு நிறுவனங்களாலும் அதிகாரவர்க்கதாலும் வழி நடத்தப்படும் குழுக்களும் ராஜபக்சவின் நோக்கத்திற்கு இசைவாக நடந்துவருகின்றன.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ராஜபக்ச பாசிச அதிகாரம் ஐம்பதிற்கு மேற்பட்டவர்களைக் கைது செய்துள்ளது. விடுதலை செய்யப்பட்டுள்ள முன்னை நாள் போராளிகள் சிலரும் கைதாகியுள்ளனர். அவர்களின் அரசியலுரிமை மறுக்கப்பட்டு நடைப்பிணங்களாக உலாவ விடப்பட்டுள்ள நிலையில் அவர்கள் மீண்டும் கைதுசெய்யப்படுகின்றனர்.
மக்களை அணிதிரட்டுவதும் போராடுவதுமே இவர்கள் முன்னால் உள்ள ஒரே வழி என்பதை இலங்கை அரசே அவர்களுக்குச் சொல்லித் தருகிறது.
விடுதலை செய்யப்பட்ட முன்னை நாள் போராளியான பத்திரிநாதன் அலன்மன்ரோ (வயது௩0) என்பவர் பயங்கரவாதக் குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பருத்தித்துறைப் பொலிஸார் நேற்று தெரிவித்தனர். இவர் யாழ்.பருத்தித்துறைமுனை இறங்குதுறையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்ட ஐந்து மீனவர்களை விட மேலதிகமாகத் தேடப்பட்டு வந்த நபரென பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் கிளிநொச்சிக்குச் சென்று கொண்டிருக்கையில் கைது செய்யப்பட்டதாகவும் இவரையும் வவுனியாவிற்குக் கொண்டு சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
யாழ். பருத்தித்துறைமுனை இறங்குதுறையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பருத்தித்துறையைச் சேர்ந்த 5 மீனவர்களை பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினர் கைதுசெய்து வவுனியாவிற்குக் கொண்டுசென்றனர். பத்திரிநாதன் ரெஜினோல்ட் (வயது 47), பத்திரிநாதன் வின்சன் பெனடிக் (வயது 38), செல்வராசா அன்ரன் இருதயராசா (வயது 32), அழகநாதன் வின்சன் மரியதாஸ் (வயது 45), நாகப்பு மிக்கல்பிள்ளை (வயது 53) ஆகியோரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டிருந்தனர்.எனினும் கடல்வழியாக ஆட்களை அவுஸ்திரேலியாவிற்கு அனுப்பியமை தொடர்பினில் ஏற்கனவே முல்லைதீவினில் ஜவர் கைதாகியுள்ள நிலையினில் இவர்களும் கைதாகியிருப்பதாக நம்பப்படுகின்றது.
Aucun commentaire:
Enregistrer un commentaire