மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர்கள் இருவரும் தேசத்துரோகக் குற்றங்களைப் புரிந்திருப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ள பொதுபலசேனா அமைப்பு அவர்கள் இருவரையும் கைது செய்ய வேண்டும் என்று கோரி, காவல்துறையினரிடம் முறைப்பாடு ஒன்றைச் செய்திருந்தது. இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப், அவர்களுடைய கூற்று அர்த்தமற்ற கூற்று என்று நிராகரித்திருக்கின்றார். "பொதுபலசேனா எல்லா விடயங்களிலும் தலையிட்டுக் கொண்டிருக்கின்றார்கள். நாடு என்று சொன்னால், அது மக்களுக்கு, நாட்டு பிரஜைகள் அனைவருக்கும் சொந்தமானது. அதைவிடுத்து, சிங்களம் பேசுபவர்களுக்கு மாத்திரம்தான் அது சொந்தம், பௌத்தர்களுக்குத்தான் அது இன்னும் கூட சொந்தம் என்று சொல்லிக் கொண்டிருப்பதெல்லாம் மனிதத் தன்மைக்கு ஒவ்வாத காரியமாகும்" என மன்னார் ஆயர் பி.பி.சி. தமிழோசைக்குத் தெரிவித்தார். தங்களைப் பொறுத்த வரையில் தாங்கள் மக்களுக்குத் தலைவர்களாக இருப்பதுடன், கத்தோலிக்க சமயத்தில் சமயம் வேறு, சமூகம் வேறு என்று பார்ப்பதில்லை என்றும் அவர் கூறினார். அரசியல் என்பது மக்களுடைய வாழ்க்கையில் பின்னிப் பிணைந்திருக்கின்றது எனவே அரசியலில் மக்களுக்கு சரியான தீர்மானங்களை எடுப்பதற்கு வழிகாட்ட வேண்டியது தமது கடமையென்றும் அவர் குறிப்பிட்டார். "இருப்பினும் நாங்கள் பொது அரசியலில் ஈடுபடுவோமே தவிர, கட்சி அரசியலில் ஈடுபடுவதில்லை. ஈடுபடவும் மாட்டோம். சமயம் சமூகம் என்ற வகையில் நாங்கள் எங்களுடைய பணிகளை மேற்கொண்டு வருகின்றோம்" என்றும் மன்னார் ஆயர் தெரிவித்தார். -
Aucun commentaire:
Enregistrer un commentaire