கடந்த இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்னர் இலங்கையிலிருந்து புறப்பட்ட தமிழ்கட்சித் தலைவர்களான ஆனந்தசங்கரி, செல்வம் அடைக்கலநாதன், ரெலோ வின் முக்கியஸ்தர் சிவாஜிலிங்கம் மற்றும் சித்தார்த்தன் ஆகியோரின் ஐரோப்பிய சுற்றுலாவில் தொண்டர்களின் தலைமை வழிபாடு, புலிகளின் தலைமை வழிபாட்டு வழிமுறைகட்கு சற்று மேலானதாக அமைந்திருந்ததை அவதானிக்க முடிந்திருந்தது.
மேற்படி தொண்டர்கள் ஒருகாலத்தில் புலிகள் தலைமை வழிபாட்டில் ஈடுபடுகின்றனர் என்றும் பிரபாரனை சுகபோகமாளிகையில் அடைத்து வைத்து சகல சுகங்களையும் அளிப்பதன் ஊடாக போராட்டத்தை தவறான வழிக்கு கொண்டு செல்கின்றனர் என்றும் பல்வேறு மேடைகளிலும் தொலைக்காட்சிகளிலும் வானொலிகளிலும் கூக்குரலிட்டவர்கள். ஆனால் இன்று இவர்கள் தமது தலைவர்கட்டு சேவகம் செய்வதற்கு முட்டி மோதிக்கொள்கின்றனர்.
முட்டி மோதி சேவகம் செய்வதற்கு மேற்படி தலைவர்களில் எவரும் தமிழ் மக்கள் மத்தியில் மதிப்பை பெற்றவர்களோ அன்றில் தனித்துவமாக மக்களுக்கு சேவையாற்றியவர்களோ கிடையாது. மாறாக இவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் மக்களால் தூக்கி வீசப்பட்டவர்கள். 2000 ம் ஆண்டளவில் புலிகள் தம்மை தமிழ் மக்கள் ஏக பிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என உலகிற்கு பறை சாற்றுவதற்காக உருவாக்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அதன் உணர்ச்சி ஊட்டும் வாசகங்களும் இன்று இவர்களது கதிரையை உறுதி செய்கின்றது.
சித்தார்த்தனின் "தம்பி புராணம் '
அன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை பார்த்து கூலிக்கு பொதி சுமக்கும் கழுதைகள் என்ற புளொட்டின் மத்திய குழு உறுப்பினரும் ரிபிசி யின் அரசியல் ஆய்வாளருமான ஜெகநாதன் பிரபாகரன் ஓரு பொல்பொட், பிணம்தின்னி, தமிழ் மக்களின் அரிய பெரிய தலைவர்களை கொன்றொழித்த கொடுங்கோலன், கற்பிணிகளைக் கூட குண்டுதாரிகளாக மாற்றிய யுத்த தர்மம் தெரியாத கோழை, இறுதியாக மஹிந்த ராஜபக்சவிடம் சரணாகதி அடைந்து முழந்தாளிட்டு மஹிந்தவினதும் இலங்கை இராணுவ அதிகாரிகளினதும் செருப்பை நக்கி உயிர்பிச்சை கேட்டு நின்றான், இவன் தமிழ் மக்களின் அவமானச் சின்னம் என்று வசைமாலை பொழிந்தார். ஆனால் இன்று மேற்படி கொடுங்கோலனை, கோழையை, அவமானச்சின்னத்தை தனது தலைவர் "தம்பி 'என்கின்றபோது கொடுப்புக்குள் புன்சிரிப்புடன் பூரித்துகொள்வதை காணமுடிவதுடன் அதற்குமேலும் ஒருபடி சென்று தள்ளாடும் வயதிலும் தலைமை வழிபாட்டுடன், தவறை தட்டிக்கேட்பதற்கு திராணியற்று சுவிஸிலே இடம்பெற்ற சந்திப்பொன்றில் பிரபாகரன் செல்வந்த குடும்பத்தில் பிறந்தவர் என்றும் அவர் தமிழீழத்தின் மீது கொண்ட பற்றுதல் காரணமாவே மரணத்தை தழுவிக்கொண்டார் என்றும் அந்தர் பல்டி அடித்துள்ளார்.
இச்சந்தர்ப்பவாதிகளின் வாய்சொல்லின் பெறுமதி என்ன?
இந்தக்கேள்வியை நான் ஜெகநாதனை நோக்கி மாத்திரம் கேட்கவில்லை அன்று ஜெகநாதன் வானொலியில் முழங்குகையில் பிரபாகரனின் கோரமுகத்தை எங்கள் சர்வதேச தலைவர் சர்வதேசத்தின் காதுகளில் கேட்கும் வண்ணம் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கின்றார் என்றும் எங்களால் மாத்திரமே பிரபாகரனின் கோரமுகத்தை வெளிக்கொணரமுடியும் என்றும் மார்பினை நிமிர்த்தி நின்ற அத்தனை புளொட்டுக்களையும் பார்த்துக் கேட்கின்றேன். இன்று உங்கள் தலைவர் சித்தார்த்தன் பாடும் "தம்பி 'புராணத்திற்கும் அன்று உங்கள் சர்வதேச பொறுப்பாளர் ஜெகநாதன் முழங்கியவற்றிற்கும் இடையே முரண்பாடுகள் உண்டு. தலைவர் சித்தார்த்தனின் கருத்தை ஏற்றுக்கொள்வதா அன்றில்; சர்வதேச தலைவர் ஜெகநாதனின் கருத்தை ஏற்றுக்கொள்வதா? தலைமை வழிபாட்டின் நிமிர்த்தம் சித்தார்தனின் கருத்தை ஏற்றுக்கொள்வதாயின், பிரபாகரன் எங்கள் தலைவருக்கு "தம்பி! 'என்றும் இந்திய மலையாளி திருவேங்கடம் வேலுப்பிள்ளை எங்கள் அனைவருக்கும் "சித்தப்பா 'என்றும் கூறுகின்றீகளா?
சித்தார்த்தன் அவர்களே!
புளொட் இயக்கம் சார்பாக வீரமக்கள் தினம் நாடாத்தி வருகின்றீர்கள். அண்மையிலே சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற வீரமக்கள் தின நிகழ்வுகளை குத்து விழக்கேற்றி ஆரம்பித்து வைத்த தங்களையும் உருவப்படங்களையும் மீண்டும் ஒருமுறை நோட்டம் விடுமாறு வேண்டுகின்றேன்.
மேலுள்ள படத்தில் உள்ளவர்களில் தலைவர் உமாமகேஸ்வரனை தவிர வலது புறத்திலுள்ள மாணிக்கதாசன், சிறி சபாரட்ணம் இடது புறத்திலுள்ள அமிர்தலிங்கம் பத்மநாபா ஆகிய யாவரும் புலிகளால் படுகொலை செய்யப்பட்டவர்கள். தங்கத்துரை குட்டிமணியை சிங்களக்காடையர்கள் வெலிக்கடை சிறைச்சாலையினுள் படுகொலை செய்தார்கள். ஆனால் தங்கத்துரை குட்டிமணியை கள்ளக்கடத்தல் போட்டி காரணமாக நயவஞ்சகத்தனமாக பிரபாகரன் காட்டிக்கொடுத்திருக்காவிட்டால் அவர்கள் படுகொலைக்கு ஆளாகியிருக்க மாட்டார்கள் என்றும் அவர்களின் இழப்பிற்கு பிரபாகரனே காரணம் என்றும் தங்கள் சர்வதேச தலைவர் ஜெகநாதன் வானொலியில் பகிரங்கமாக கூறியிருக்கின்றார். எனவே ஒட்டு மொத்தத்தில் நீங்கள் மலர்தூவி கண்ணீர் சொட்ட அஞ்சலி செலுத்திய அத்தனை பேரும் புலிகளால் படுகொலை செய்யப்பட்டவர்கள்.
இக்கொலைகள் புலிகளின் மிலேச்சத்தனத்தை உணர்த்துபவை என்றும் புளொட் அமைப்பு தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடியதாகவும் பாசிஸ்டுவான பிரபாகரன் தான் கொண்ட ஏகப்பிரதிநிதித்துவ மோகம் காரணமாக புளொட் இயக்க உறுப்பினர்கள் உட்பட தமிழ் தலைமைகள் மற்றும் சக போராட்ட இயக்க உறுப்பினர்களை கொன்றொழித்ததாகவும் புளொட் இயக்கம் கூறிவந்திருக்கின்றது.
மறுபுறத்தில் இன்றும் புலிகளால் இக்கொலைகள் நியாயப்படுத்தப்படுகின்றது. இக்கொலைகள் தமிழீழத்தின் பெயரால் மேற்கொள்ளப்பட்ட கொலைகள் எனப்படுகின்றது. தமிழீழத்திற்கு எதிரான துரோகிகளை பிரபாகரன் தான் கொண்ட தமிழீழத்தின் மீதான பற்றுறுதிகாராணமாக அழிக்க உத்தரவிட்டதாக அவ்வமைப்பு கூறுகின்றது.
புலிகளால் படுகொலை செய்யப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அமிர்தலிங்கம் அவரது நூற்றுக்கணக்கான சகாக்கள், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் பத்மநாபா அவரது ஆயிரக்கணக்கான தோழர்கள், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறி சபாரட்ணம் அவரது ஆயிரக்கணக்கான தோழர்கள், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் உபதலைவரும் இராணுவத் தளபதியும் இன்றும் கழகத்தின் தோழர்களால் நேசிக்கப்படுகின்றவருமான மாணிக்கதாசன் மற்றும் அவரது ஆயிரக்கணக்கான தோழர்கட்கு மலர்தூவி கண்ணீர் சொரிய அஞ்சலி செலுத்திவிட்டு கண்ணீரின் ஈரம் முகத்தில் காயமுன்பு நீங்கள் பேசுகையில் "தம்பி பிரபாகரன் தமிழீழம் மீது கொண்டிருந்த பற்றுதலில் எனக்கு எந்த சந்தேகமும் கிடையாது. தம்பி பிரபாகரனின் பலமும் பலவீனமும் தமிழீழத்தில் அவர் கொண்டிருந்த பற்றுறுதி 'என்றீர்கள். அவ்வாறாயின் நீங்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தியவர்கள் யாவரும் துரோகிகள்தான் என்றல்லவா அர்த்தப்படுத்துகின்றீர்கள்.
பிரபாகரன் தமிழீழம் மீது கொண்டிருந்த பற்றுறுதியில் தங்களுக்கு சந்தேகம் இருந்திருக்காவிட்டால் எதற்காக அந்த அமைப்புடன் போரில் ஈடுபட்டீர்கள். இன்று நீங்கள் கலைத்துள்ள புளொட் அமைப்பை அன்றே கலைத்திருக்கலாம் அல்லவா! அதை அன்று செய்திருந்தால் புளொட் என்ற காரணத்திற்காக புலிகளால் வேட்டையாடப்பட்ட உயிர்களும் புலி என்ற காரணத்தால் புளொட்டால் வேட்டையாடப்பட்ட உயிர்களும் எஞ்சியிருக்குமல்லவா?
சித்தார்தன் அவர்களே! நீங்கள் கொழும்பில் தங்கியிருந்து வழங்கிய கட்டளையை ஏற்று புலிகளுடன் சமர்புரிந்த தங்களது தோழர்கள் மற்றும் தங்களது கட்டளையை ஏற்று மடிந்த சகாக்களின் குடும்பங்கள் இன்றும் வடகிழக்கிலும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் துரோகிகளாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இந்த துரோகிப்பட்டம் தங்களது "தம்பி பிரபாகரனை 'ஏகப்பிரதிநிதி என்று ஏற்றுக்கொள்ள மறுத்தமைக்கு வழங்கப்பட்ட பரிசு.
இத்தனை காயங்களையும் பட்டவர்களை சுமக்கவிட்டு நீங்கள் "தமிழினத்தின் அவமானச்சின்னமான பிரபாகரனை 'தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதியாக ஏற்றுக்கொண்ட கூட்டணியில் பங்காளியாகியுள்ளீர்கள். இனியாவது தங்களது தலைமைத்துவத்தை ஏற்றுக்கொண்டமைக்காக துரோகிப்பட்டம் சுமந்து நிற்கும் அந்த குடும்பங்களை துரோகிகள் என்பதிலிருந்து விடுவிக்க முடியுமா?
சுவிஸ் வீரமக்கள் தினத்தில் திருடப்பட்ட "வங்கம் தந்த பாடம்"
சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற 25 வது வீரமக்கள் தின நிகழ்வில் கலந்து கொண்ட புளொட்டின் நோர்வே கிளை பொறுப்பாளர் ராஜன் (புளொட்டின் நோர்வே கிளை பொறுப்பாளர் என்பதை விட புளொட்டின் நோர்வே இலை பொறுப்பாளர் என்பது சிறந்தது. காரணம் நோர்வே கிளையில் ராஜன் எனும் தனி இலை மாத்திரமே உண்டு) தமிழீழப் போராட்டம் மௌனித்துள்ளதாகவும், போராட்டம் என்றோ ஓர் நாள் வெடிக்கும் என்றும் தெரிவித்ததுடன், தமிழ் மக்களின் தமிழீழப் போராட்டம் இந்தியாவால் தோற்கடிக்கப்பட்டதாகவும் இந்தியாவின் கபடநோக்கங்களை தமது அமைப்பு அறிந்து வைத்திருந்தாகவும், இந்தியாவின் கபடநோக்கங்கள் தொடர்பில் தலைவர் உமா மகேஸ்வரன் எழுதிய "வங்கம் தந்த பாடம் 'எனும் புத்தகத்தில் விலாவாரியாக விபரித்துள்ளதாகவும் கூறினார்.
"வங்கம் தந்த பாடத்தை 'வைத்து புளொட்டுக்கு பெருமை தேடிக்கொள்ள முயலும் அதே நேரம் வங்கம் தந்த பாடத்தின் ஆசிரியரும், புளொட்டின் சிந்தனைச் சிற்பியுமான சந்ததியாரை வீரமக்கள் என்ற வரிசையில் ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் புளொட் அமைப்பில் தலைவர் சித்தார்தனிலும் முத்த உறுப்பினர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சித்தார்த்தன், "சந்ததியாருக்கு தலைமையால் மரணதண்டனை வழங்கப்பட்டதால் உள்ள சிக்கல்களுக்கு அப்பால் அஞ்சலி செலுத்துவதாயின் அவரது படத்தை எங்கே வைப்பதென்ற பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இலங்கையிலேயே யுத்தம் நடைபெற்றுகொண்டிருந்தபோது படையினருக்கு ஆசிவேண்டி நோர்வேயிலுள்ள பௌத்த விகாரையில் பிக்குவுடன் இணைந்து பிரித் ஓதிக்கொண்டிருந்த சித்தார்த்தனின் சகா ராஜன் கூறுகின்ற தமிழீழம் எங்கே உள்ளது. சித்தார்தனின் "தம்பி பிரபாகரன் 'தமிழீழம் கோரவில்லை என்று உறுதியாக தெரிவித்திருந்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு நீதிமன்றிலே "நாங்கள் தமிழீழம் கோரமாட்டோம் 'என சத்திக்கடதாசி வழங்க தயார் என்கின்றது. சித்தார்தன் ஒன்றுக்கு நூறு தடவை தனது வாயால் சொல்லியிருக்கின்றார் தாம் ஒருபோதும் தமிழீழம் கோரவில்லையென்று. எனவே சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற 25 வது வீரமக்கள் தினத்தில் பேசப்பட்ட "தமிழீழம் 'எங்கே உள்ளது. எத்தனை நாட்களுக்கு இந்த சுத்துமாத்து?