அரியானாவில் 125 அடி தூர சுரங்கம் தோண்டி வங்கியில் கோடிக்கணக்கில் கொள்ளை அடிக்கப்பட்டது. இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டவர்கள் பற்றி துப்புக் கொடுத்தால் ரூ.10 லட்சம் பரிசு அளிக்கப்படும் என போலீசார் அறிவித்துள்ளனர். இதற்கிடையில் கொள்ளை குறித்து விசாரணை நடத்த பிரதமர் அலுவலகத்தில் இருந்து உயர் அதிகாரி விரைந்துள்ளார்.அரியானாவில் உள்ள சோனிபட் நகரில் பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு சுமார் 125 அடி தூரத்துக்கு தரைக்கு அடியில் சுரங்க பாதை தோண்டி அந்த வழியாக வந்த கொள்ளையர்கள் வங்கியில் இருந்த லாக்கர்களை உடைத்து பல கோடி ரூபாய் - மதிப்புள்ள பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்றனர். நேற்று கொள்ளை சம்பவம் தெரியவந்ததும் அதிகாரிகளும், வாடிக்கையாளர்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். ஹாலிவுட் பட பாணியில், அருகில் இருந்த பாழடைந்த வீட்டின் உட்புறத்தில் இருந்து வங்கி வரை சுரங்கம் தோண்டி பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அரியானா போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்திஉள்ளது.
அரியானா காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து டிஜிபி கூறுகையில், கொள்ளையர்கள் அருகில் உள்ள வீட்டில் இருந்து 125 அடி தூரத்துக்கு 2.5 அடி அகலமுள்ள சுரங்க பாதையை தோண்டி 80 லாக்கர்களை உடைத்து கொள்ளையடித்துள்ளனர். இதில் ரூ.40 லட்சம் ரொக்க பணம் மற்றும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளை போயுள்ளது. இந்த சம்பவத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் ஈடுபட்டுள்ளதும் தெரிகிறது. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றார். கொள்ளையர் பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும் என போலீசார் அறிவித்துள்ளனர்.இதற்கிடையில், இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக நேரில் விசாரணை நடத்துவதற்காக பிரதமர் அலுவலகத்தில் இருந்து உயர் அதிகாரி ஒருவர் அனுப்பப்பட்டுள்ளார். கொள்ளை குறித்து விசாரணை நடத்தி பிரதமரிடம் விரிவாக அறிக்கை தாக்கல் செய்வார் என பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Aucun commentaire:
Enregistrer un commentaire