வத்திக்கானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று வத்திக்கான் அப்போஸ்தலர் மாளிகையில் பரிசுத்த பாப்பரசர் முதலாவது பிரான்ஸிஸ் ஆண்டகையைச் சந்திக்கவுள்ளார். ஜனாதிபதியுடன் முதல் பெண்மணி திருமதி ஷிரந்தி ராஜபக்ஷவும் இன்று பரிசுத்த பாப்பரசரைச் சந்தித்து ஆசிபெறுவதுடன் அதனையடுத்து வத்திக்கானின் பிரதமரும் ராஜாங்க செயலாளருமான அதிவணக்கத்திற்குரிய பியென்த்ரோ பெரோவின் கர்தினாலையும் ஜனாதிபதி அவர்கள் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.வத்திக்கான் திருப்பீடத்தின் அழைப்பை ஏற்று நேற்றைய தினம் இலங்கையிலிருந்து வத்திக்கானுக்கு பயணம் மேற்கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் திருமதி ஷிரந்தி ராஜபக்ஷ ஆகியோர் நேற்று மாலை பியூமிசினோ விமான நிலையத்தை சென்றடைந்தனர். அங்கிருந்து அவர்கள் உரோம் நகருக்குச் செல்வதுடன் இன்று முற்பகல் பரிசுத்த பாப்பரசரைச் சந்திக்கவுள்ளனர்.
ஜனாதிபதியுடனான இவ்விஜயத்தில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், அமைச்சர்கள் தயாசிறி த திசேரா. பீலிக்ஸ் பெரேரா. பிரதியமைச்சர் நியோமால் பெரேரா, எதிர்க் கட்சியின் பிரதம கொரடா ஜோன் அமரதுங்க, பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன. வெளிவிவகார அமைச்சின் செயலாளர் திருமதி ஷேனுக்கா செனவிரத்ன ஆகியோரும் இணைந்து கொண்டுள்ளனர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இத்தாலிக்கும் வத்திக்கானுக்குமான விஜயத்தினை மேற்கொண்டுள்ள நிலையில் அவர் இத்தாலியில் தங்கியிருக்கும் காலத்தில் அங்குள்ள இலங்கை மக்களைச் சந்திக்கவுள்ளார்.
அத்துடன் ஐரோப்பிய யூனியன் நாடுகளிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர்களையும் ரோமிலும் வடக்கு இத்தாலியிலும் சந்தித்துக் கலந்துரையாடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
Aucun commentaire:
Enregistrer un commentaire