நக்சல்பாரி கிராமம் பற்றிய நக்கல் பதிவு ஒன்றை டைம்ஸ் ஒப் இந்தியா பத்திரிகை பிரசுரித்துள்ளது. மேற்கு வங்காளத்தில், 1967 ம் ஆண்டு, டார்ஜிலிங் பகுதியில் உள்ள நக்சல்பாரி கிராமத்தில், சாரு மஜூம்தார் தலைமையில் விவசாயிகளின் புரட்சி வெடித்தது. இந்தியா முழுவதும் ஆயுதமேந்திய கம்யூனிசப் புரட்சிக்கு அது வித்திட்டது.
லெனின், மாவோ, சாருமஜூம்தார் சிலைகளைத் தவிர, அந்த இடத்தில் கம்யூனிசப் புரட்சி நடந்ததற்கான தடயமே இல்லை என்றும், மக்களுக்கு அதைப் பற்றிய நினைப்பே இல்லை என்றும் எழுதி இருக்கிறார்.
முதலாளித்துவ நுகர்வுக் கலாச்சாரம் நக்சல்பாரிக் கிராமத்தையும் விட்டு வைக்கவில்லை. நுகர்வுப் பொருட்களை வாங்கிக் குவிப்பதிலும், விலை ஏறிக் கொண்டிருக்கும் காணிகளை வாங்கி விற்பதிலும் தான் மக்கள் குறியாக இருக்கிறார்கள்.
தேர்தல் அரசியலில் கூட, காங்கிரஸ், பாஜக போன்ற கட்சிகள் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுக் கொள்கின்றன என்றும், நக்சல்பாரி புரட்சியின் பின்னர் உருவான CP ML - லிபெரேஷன் கட்சி, வெறும் இரண்டு சதவீத வாக்குகளை மட்டும் பெற்றுள்ளது என்றும் எழுதுகின்றார்.
சுருக்கமாக சொல்வதென்றால், "கம்யூனிசம் காலாவதியாகிவிட்டது" என்ற முதலாளித்துவ பரப்புரைகளுக்கு வலுச் சேர்ப்பதற்காக எழுதப் பட்ட கட்டுரை இது.
நல்லது, தமிழீழத்திற்கான ஆயுதப் போராட்டம் வெடித்த யாழ்ப்பாணத்திற்கு சென்று பார்த்தாலும் இதே மாதிரியான காட்சிகளைக் காணலாம். யாழ்ப்பாணத்தில் வாழும் தமிழர்கள், நுகர்வுப் பொருட்களை வாங்கிக் குவிப்பதிலும், விலை ஏறிக் கொண்டிருக்கும் காணிகளை வாங்கி விற்பதிலும் அதிக அக்கறை காட்டுகிறார்கள். அதுமட்டுமல்ல, தேர்தலில் கூட, தமிழீழத்தை கைவிட்டு விட்டதாக அறிவித்துக் கொண்ட தமிழ்தேசியக் கூட்டமைப்புக்கு தான் பெருமளவில் ஓட்டுப் போடுகின்றார்கள்.
நக்சல்பாரியில் நடந்த விவசாயிகளின் வர்க்கப் போராட்டத்தையும், யாழ்ப்பாணத்தில் நடந்த தேசியவாதப் போராட்டத்தையும் ஒப்பிட முடியுமா என்று சிலர் கேட்கலாம். மார்க்சியத்தின் வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தில் இருந்து இதைப் பார்க்க வேண்டும். முதலில், எழுபதுகளில் இந்தியாவிலும், இலங்கையிலும் இருந்த அரசியல் பொருளாதார நிலைமையை கருத்தில் எடுக்க வேண்டும்.
நக்சல்பாரி கிராமம், இந்தியாவில் மிகவும் பின்தங்கிய பகுதியாக இருந்தது. யாழ்ப்பாணத்தின் நிலைமையும் அது தான். ஒரு காலத்தில், யாழ்ப்பாணப் பொருளாதாரம் "மணி ஓர்டர் (Money Order) பொருளாதாரம்" என்று அழைக்கப் பட்டது. (அதாவது, கொழும்பில் வேலை செய்த அரச ஊழியர்கள் அனுப்பும் பணத்தில் தங்கி இருந்தது.) மேலும், எழுபதுகளில் இருந்த யாழ்ப்பாணம், நிலப்பிரபுத்துவ கலாச்சாரத்தை கறாராக பின்பற்றி வந்தது. முதலாளித்துவ பொருளாதாரம் வளர்ச்சி குன்றியிருந்த படியால், நிலப்பிரபுத்துவ பொருளாதார அடிப்படை கொண்டவர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.
தற்போது எழுபதுகளில் இருந்த நக்சல்பாரி பக்கம் பார்வையை திருப்புவோம். முதலாளித்துவம் ஊடுருவி இருக்காத காலகட்டத்தில், அது நிலப்பிரபுக்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. இதைப் புரிந்து கொள்ள அதிக சிரமப் படத் தேவையில்லை. சாரு மஜூம்தார் தலைமையிலான விவசாயிகளின் புரட்சி யாருக்கெதிராக நடந்தது?
அன்று நிலவுடையாளர்கள் தான் நக்சல்பாரி மக்களின் எதிரிகளாக இருந்தனர். நக்சல்பாரி புரட்சி வெடித்த நேரம், காலங் காலமாக உழைப்பாளிகளை சுரண்டிக் கொழுத்து வந்த, நிலவுடைமையாளர்கள், பண்ணையார்கள், கந்துவட்டிக் காரர்கள் ஆகியோர் எழுச்சி பெற்ற மக்களால் கொல்லப் பட்டனர், அல்லது விரட்டப் பட்டனர்.
நிச்சயமாக, இதையெல்லாம் இந்திய அரசு கையைக் கட்டிக் கொண்டு பார்த்துக் கொண்டிருக்கப் போவதில்லை. அரச படைகளை அனுப்பி விவசாயிகளின் புரட்சியை அடக்கியது. கிளர்ச்சியில் ஈடுபட்ட மக்கள், ஈவிரக்கமின்றி படுகொலை செய்யப் பட்டனர். நக்சல்பாரியில் நடந்த படுகொலைகளுக்குப் பிறகு? அங்கு முதலாளித்துவ பொருள் உற்பத்தி ஊக்குவிக்கப் பட்டது. நுகர்வுக் கலாச்சாரம் அறிமுகப் படுத்தப் பட்டது.
இந்த இடத்தில் எல்லோரும் ஒரு முக்கியமான உண்மையை வசதியாக மறந்து விடுகிறார்கள். இந்திய அரசு ஒரு முதலாளித்துவ அரசு. அதன் அர்த்தம், அது முதலாளித்துவ பொருள் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கு தன்னாலியன்ற முயற்சிகளை செய்யும். அது மட்டுமல்ல,முதலாளித்துவம் நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரானது என்ற உண்மையையும் மறந்து விடக் கூடாது.
ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட முதலாளித்துவ அரசுக்கள், நிலப்பிரபுத்துவத்தை ஒழித்துக் கட்டுவதில் மும்முரமாக ஈடுபட்டன. அங்கே நிலப்பிரபுத்துவ காலத்தின் எச்சசொச்சங்கள் அடியோடு ஒழிக்கப் பட்டு விட்டன. ஆனால், இந்தியா, இலங்கை போன்ற நாடுகள், "அரை- நிலப்பிரபுத்துவ, அரை- முதலாளித்துவ" நாடுகளாக இருந்து வந்தன. கடந்த இருபது வருடங்களாக, அந்த நிலைமை பெருமளவு மாறி விட்டது. இன்று முதலாளித்துவம் நுழையாத இடமே இல்லை.
சந்தேகம் இருந்தால், ஒரு தடவை யாழ்ப்பாணத்திற்கு சென்று பாருங்கள். மேற்கத்திய பாணியில் அமைந்த பல்பொருள் அங்காடிகள், யாழ் நகரிலும், சிறிய நகரங்களிலும் வந்து விட்டன. மேற்கத்திய நாடுகளில் கிடைக்கும் அதே நுகர்வுப் பொருட்கள் யாழ்ப்பாணத்தில் கிடைக்கின்றன. கல்வியறிவு பெற்ற இளைய தலைமுறையினர் தனியார் துறைகளில் வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொள்கிறார்கள்.
நிலத்தின் விலை உயர்ந்து கொண்டே செல்வதால், பிரதான வீதிக்கருகில் உள்ள காணிகளின் விலை பல மடங்கு உயர்ந்து விட்டது. வழமையாகவே, யாழ்ப்பாணத்து மக்கள் காணி வாங்குவதில் அதிக ஈடுபாடு காட்டுவார்கள். தற்போது சொல்லவே தேவையில்லை. "தமிழீழமா, கிலோ என்ன விலை?" என்று கேட்கும் அளவிற்கு யாழ்ப்பாணம் மாறி விட்டது.
"கம்யூனிசம் காலாவதியாகி விட்டது" என்ற பிரச்சாரமும், "தமிழ் தேசியம் காலாவதியாகி விட்டது" என்ற பிரச்சாரமும் ஒரே கோட்பாட்டு அடிப்படை கொண்டவை. அறிவிலிகளுக்கும், மர மண்டைகளுக்கும் புரியும் படியாக சொன்னால், உலகமயமாக்கல், நுகர்வுக் கலாச்சாரம் போன்றன, உலகம் முழுவதும் உள்ள மக்களை முதலாளித்துவ நலன்களுக்காக உயிர் வாழும் விலங்குகளாக மாற்றி விட்டன. சங்கிலியால் பிணைக்கப் பட்டிருந்த அடிமைகளுக்கு, தாங்கள் அடிமைகள் என்ற உணர்வாவது இருந்தது. ஆனால், இன்று கடன் என்ற கண்ணுக்குப் புலப்படாத சங்கிலிகளால் கட்டப் பட்டிருக்கும் அடிமைகளுக்கு அந்த உணர்வே கிடையாது.
மார்க்சியம் படிக்காத தற்குறிகள் தான் "கம்யூனிசம் காலாவதியாகி விட்டது" என்று சொல்வார்கள். மார்க்சியம் என்ன சொல்கிறது? ஆண்டான், அடிமை பொருள் உற்பத்தியை ஒழித்துக் கட்டி விட்டு, நிலப்பிரபுத்துவம் மேலாதிக்கத்திற்கு வந்தது. அதே மாதிரி, நிலப்பிரபுத்துவ பொருள் உற்பத்தியை ஒழித்துக் கட்டி விட்டு, முதலாளித்துவம் மேலாதிக்கத்திற்கு வந்தது. முதலாளித்துவ சமுதாய மாற்றம், நக்சல்பாரி போன்ற கிராமங்களை வந்தடைவதற்கு சிறிது காலதமாதமாகி விட்டது.
உண்மையில், நக்சல்பாரி விவசாயிகளின் புரட்சி ஒரு சமுதாய மாற்றத்திற்கான தேவையில் இருந்து உருவானது. முதலாளித்துவம் காலூன்றி இருக்காத பலவீனமான ஒரு பகுதியில் அந்தப் புரட்சி வெடித்தது. அதை இந்திய அரசு ஒடுக்கி விட்டது. தற்போது அந்த வெற்றிடம் முதலாளித்துவத்தால் நிரப்பப் பட்டுள்ளது. இது தான் நடந்தது. ஆகவே, இதை நாங்கள் "நிலப்பிரபுத்துவம் காலாவதியாகி விட்டது" என்றல்லவா சொல்ல வேண்டும்? kalajakam