பண்டா செல்வா பேச்சுவார்த்தை நடைபெற்ற பொழுது கிழக்கில் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட பிராந்திய சபைகளை நிறுவுவதைப் பற்றிய முன்மொழிவுகளைக் கொண்ட பிராந்திய சபைகளுக்கான வரைபு மசோதா ஒன்றினை (Draft Regional Council Bill )பண்டாரநாயகா செல்வநாயகத்திடம் (தமிழரசுக் கட்சியிடம் ) பரிசீலிக்கும்படி கூறி இருந்தார். அத்துடன் சமஷ்டி அமைப்புமுறை அல்லது பிராந்திய சுயாட்சியை ஏற்படுத்துவது சாத்தியமற்றது என்பதையும் பண்டாரநாயக தமிழரசுக் கட்சியிடம் வலியுறுத்தி இருந்தார்.அதன் அடிப்படையிலேயே பண்டா செல்வா ஒப்பந்தம் உருவானது என்பது வரலாறு. ஆனால் பண்டாரனாயகா ஏற்கனவே வரைவு மசோதாவில் முன்வைத்த அம்சமான “வடமாகாணம் ஒரு
பிராந்திய சபையாகவும், கிழக்கு மாகாணம் இரண்டு அல்லது இரண்டுக்கு கூடிய பிராந்திய சபைகளாக அமையும்.” என்ற வரைபு ஏற்பாடுகள் , இரு தரப்பினரின் பேச்சுவார்த்தைகளின் பின் பண்டா செல்வா ஒப்பந்தத்தின் சரதுக்களாக (Clause) மாறியது.
இலங்கையின் சுதந்திரத்துக்கு முன்னரே சமஸ்டி அமைப்பே இலங்கைக்கு பொருத்தமான ஒரு அரசியல் முறைமையாகும் என்று1926இல் யாழ்ப்பாணத்தில் வைத்து சிலாகித்துக் கூறியவர் பண்டாரநாயகா. அவரே பின்னர் சமஷ்டி பற்றிய கோரிக்கையை தமிழ் அரசுக் கட்சி கைவிட வேண்டும் என்று கூறி பிராந்திய கவுன்சில் வரைவு மசோதாவை, தமிழரசுக் கட்சியிடம் பரிசீலனைக்காக முன்வைத்தவர் . பிராந்திய கவுன்சில் வரைவு மசோதா , அதனைத் தொடர்ந்து பரஸ்பர இணக்கத்தின் மூலம் எட்டப்பட்ட பண்டா செல்வா ஒப்பந்தம் என்பன அஸ்ரபிற்கும் முஸ்லிம் மாகாண சபை சம்பந்தமாக ஏதோ நம்பிக்கையைக் கொடுத்திருக்க வேண்டும். ஆகவேதான் முஸ்லிம் மாகாண சபை பற்றி அஸ்ரப் அவ்வப்பொழுது முன் மொழிந்து வந்தார்.
ஏற்கனவே இக்கட்டுரைத் தொடரில் குறிப்பிட்டது போல , தமிழ் இயக்கங்களின் அடாவடித்தனங்களே முஸ்லிம்களின் தனித்துவ ஆட்சி அதிகார சிந்தனைகளுக்கு வித்திட்டது . குறிப்பாக 13 ஆம் திகதி ஏப்ரல் மாதம் 1985 ஆம் ஆண்டு புளொட் இயக்க உறுப்பினர்களின் முஸ்லிம்கள் மீது நடத்திய தாக்குதல்கள் கிழக்கில் தமிழ் முஸ்லிம் பகைமைக்கு , பரஸ்பர உயிர்க் கொலைகளுக்கு வித்திட்ட நிகழ்ச்சிகளாகும் .
ஏனெனில் இந்த சம்பவத்தை தொடர்ந்து மாளிகைக்காடு மற்றும் அயல் கிராம முஸ்லிம் மக்கள் விசேட அதிரடிப் படையுடன் சேர்ந்து காரைதீவின் மீது தாக்குதல்களை மேற்கொண்டனர். தமிழ் ஆயுததாரிகளின் அடாவடித்தனங்களை எதிர்கொள்ள முஸ்லிம்களால் முடியவில்லை . எனவே முஸ்லிம்கள் தங்களின் பாதுகாப்புக்காக ,தங்களின் மீது இழைக்கப்பட்ட அநீதிக்கு பழிதீர்க்கும் வகையில் இலங்கை அரச படையினரை ஆதரித்தனர். அவர்களும் முஸ்லிம்களைப் பயன்படுத்திக் கொண்டனர். . தமிழ் முஸ்லிம் பகைமையில் இலங்கை இராணுவம் குளிர் காய்ந்தது. ஆனாலும் இவ்வாறான சூழ்நிலையை கருக்கொள்ளச் செய்தவர்கள் தமிழ் ஆயுததாரிகளே !
ஆனாலும் காரைதீவுச் சம்பவத்திற்குப் பின்னர் காத்தான்குடி,மஞ்சந்தொடுவாய் போன்ற பகுதிகளில் பரவிய சிறிய கலவரங்கள் காரணமாக சில தமிழர்களும் முஸ்லிம்களும் கொல்லப்பட்டனர். அதிலும் குறிப்பாக உன்னிச்சையில் விவசாயம் செய்துவந்த ஏறாவூர் முஸ்லிம் விவசாயிகள் சிலர் கொல்லப்பட்டனர் , அதன் விளைவாக மட்டக்களப்பிலும் கலவரச் சூழ்நிலைகள் நீட்சி பெற்றன.
முஸ்லிம் காங்கிரஸ் 1981 இல் காத்தான்குடியில் தொடங்கப்பட்டாலும் . அதற்கு ஒத்துழைத்த காத்தான்குடி பட்டினாட்சி மன்றத் தலைவர் மறைந்த அஹமது லெப்பை உட்பட்ட காத்தான்குடியின் சில பிரமுகர்கள் , அதனை ஆதரிக்க முன்னின்ற ஏறாவூர் ஓட்டமாவடி பிரதேச .முஸ்லிம் சமூகத் தலைவர்கள் , ஆசிரியர்கள் , இளைஞர்கள் பலர் தேசியக் கட்சிகளில் அங்கத்துவம் வகித்தவர்கள் , அல்லது அரசியல் தீவிர ஈடுபாடு இல்லாதவர்கள் . இவர்கள் கட்சியின் அங்குரார்ப்பனத்துடன் கிழக்கில் முஸ்லிம் காங்கிரசில் தீவிர ஈடுபாடு காட்டவில்லை . அதற்கான அரசியல் சூழ்நிலையோ அல்லது முஸ்லிம்களின் ஒத்துழைப்போ கானப்படவில்லை .
1985 க்கு பின்னர் முஸ்லிம்களுக்கென ஒரு அரசியல் இஸ்தாதாபனதுக்கானதொரு தேவை நிலவிய சூழ்நிலையில் அஸ்ரப் முஸ்லிம் அரசியலில் மிகுந்த ஆர்வம் காட்டினார். எனவேதான் அதற்கு முன்னர் மிகுந்த விளம்பரத்துடன் செய்யப்படாத தமது கட்சியின் 6வது வருடாந்த மாநாட்டை கொழும்பில் உள்ள பாஷா விலா வில் 1986நவம்பரில் நடத்தில் முஸ்லிம் காங்கிரஸ் மாநாட்டில் முஸ்லிம் காங்கிரஸ் ஒரு அரசியல் கட்சி என்று அறிமுகப்படுத்தினார். உண்மையில் 1985 ஆம் ஆண்டின் பின்னரே முஸ்லிம் காங்கிரஸ் பிராந்திய கவுன்சில் சிந்தனையிலிருந்து விடுபட்டு சாத்தியமற்ற அரசியல் உணர்வூட்டும் “முஸ்லிம் மாகாண சபை” க் கோரிக்கையை சற்று அழுத்தத்துடன் முன் வைத்தது.
ஆனாலும் இலங்கையில் உள்ள ஒன்பது மாகாணங்களை பத்து மாகாணங்களாக மாற்றுவது என்பது இலங்கையின் நீண்ட இன முரண்பாட்டு அரசியலில் சாத்தியாகும் ஒன்றல்ல என்பதை அஸ்ரப் நிச்சயம் அறிந்திருக்க வேண்டும். ஆனாலும் அரசியல் ரீதியில் “தமிழ் ஈழம்” கேட்டு தமிழரால் ஒதுக்கப்பட்ட நிலையில் முஸ்லிம் மாகாண சபை எனும் கோரிக்கை முஸ்லிம்களைப் பொருத்தவரை ஒரு மாற்று அரசியல் தீர்வுக்கான கோரிக்கையாக வலுப் பெறக் காரணம் இணைக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களில் , கிழக்கில் 33வீதமாக தனித்துவமாக பலம்பெற்றிருந்த முஸ்லிம் சமூகம் ,வடக்குடன் இணைக்கப்பட்டதன் மூலம் 18 வீதமாக சிறுபான்மையாக மாற்றப்பட்டதே என்ற மேலோட்டமான காரணத்துக்கு அப்பால்,இந்திய இலங்கை ஒப்பந்தத்துக்கு பின்னர் , வடக்கு கிழக்கில் நிலவிய அரசியல் நிலவரங்கள் அவ்வாறான கோரிக்கையை பலப்படுத்தின. ஆனாலும் முஸ்லிம் காங்கிரஸ் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை வாழவைத்துக் கொண்டு வடக்கு கிழக்கில் எதிர்க்கட்சி இஸ்தானத்தில் இருந்து கொண்டு , முஸ்லிம் மாகாண சபைக் கோரிக்கை எவ்வித முறையான ஆய்வுகள் இன்றியும் முன் வைத்தனர். அரசியல் ரீதியில் ஒரு உணர்வு மயப்படுத்தப்பட்ட கோட்பாட்டு அடிப்படையில் கட்டிவைக்க வேண்டிய தந்திரோபாயத்தை முஸ்லிம் காங்கிரஸ் கையாண்டது.
உதாரணமாக, இந்திய அரசின் கூலிப்படையாக இயங்கிய வடக்கு கிழக்கு மாகாண சபையில் ஆட்சி அதிகாரத்தில் அங்கத்துவம் வகித்தENDLF வடக்கு கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரசின் உறுப்பினராக இருந்த அலி உதுமானை முதலாம் திகதி ஆகஸ்து மாதம் 1989 ஆண்டு சுட்டக் கொன்ற பொழுது, முஸ்லிம் காங்கிரசின் முஸ்லிம் மாகாண சபைக்கான கோரிக்கையை முஸ்லிம் காங்கிரசின் கட்சிப் பத்திரிகையில் பின்வருமாறு வலியுறுத்தி இருந்தார்.
“ வட-கிழக்கு மாகாண ஆட்சிக் கட்டிலில் அமர்திருந்திருக்கும் EPRLF –ENDLF கூட்டரசாங்கத்தின் பங்காளியான ENDLF குழுவினால் – இவ்வெறிச் செயல் நிகழ்தப்பட்டிருப்பதானது, இப்பிரதேச முஸ்லிம்களுக்கான பாதுகாப்பு வட கிழக்கு மாகாணசபையால் வழங்கப்பட முடியாது என்பதையும் , சமூக ரீதியில் அமைந்த அதிகாரப் பரவலாக்கல் அலகு மூலமே -அதாவது முஸ்லிம்களுக்கான தனித்த மாகாணசபைதான் முஸ்லிம்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளக்கூடிய உறுதியானதும் , இறுதியானதுமான தீர்வு என்பதை மேலும் நிச்சயமாக்குகின்றது.”
ஆனாலும் வழக்கம் போலவே அந்தக் கோரிக்கை அடிக்கடி மறக்கப்பட்டுப் போனது. ஏனெனில் கொல்லப்பட்ட அலி உதுமானை தியாகியாக்கி (தமிழர் தரப்பு அரசியல் போலவே) முஸ்லிம் காங்கிரஸ் தனது முஸ்லிம் மக்கள் மீதான உணர்வுமயப்பட்ட அரசியலை பலப்படுத்திக் கொண்டது. மறு புறத்தில் மாகாண சபையில் தகுந்த பாதுகாப்பின்றி பதவியேற்க மாட்டோம் என்று இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியவர்கள். இறுதியில் இந்திய அழுத்தங்களுக்கு பணிந்து பதவி ஏற்றவர்கள் , அலி உதுமானின் கொலைக்குப் பின்னர் ,தங்களின் உறுப்பினரை ஆட்சியில் உள்ள இந்திய கூலிப்படையின் ஆயததாரிகள் கொன்ற பொழுதும் , மாகாண சபையை புறக்கணிக்க முன் வரவில்லை. தங்களுக்கென ஒரு முஸ்லிம் மாகாண சபைக்கான போராட்டத்தை அல்லது அதற்கான கோரிக்கையை நாடாளுமன்றத்தில் கூட வலுவாக முன் வைக்கவில்லை என்பது இங்கு நோக்கப்பட வேண்டும்.
இவ்வாறாக முஸ்லிம் காங்கிரசினால் முஸ்லிம் மாகாண சபைக்கான கோரிக்கை மறக்கப்படுவதும் அவ்வப்பொழுது அரசியல் கோசமாக மீண்டும் மீண்டும் அரசியல் அரங்குகளில் , தேர்தல்களில் உயிர்ப்பிக்கப்படுவதும் ஒரு விதிமுறையாகவே முஸ்லிம் காங்கிரசினால் கையாளப்பட்டது.
முஸ்லிம் மாகாண சபைக் கோரிக்கையை , முஸ்லிம் காங்கிரஸ் முன்வைத்த பொழுது இன்னுமொரு அரசியல் நிலவரம் குறித்தும் இங்கு நினைவு கூறப்பட வேண்டி உள்ளது.
கிழக்கில் எம்.ஐ.எம். மொஹிடீன் தலைமையிலான முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி சென்னைக்கு சென்று புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு ஒப்பந்தத்தை (21/08/1988) செய்தனர். புலிகள் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்த வேளையிலும் இணைக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களை பிரிக்கும் கோரிக்கை எங்கிருந்து வந்தாலும் அதை எதிர்த்தே வந்திருக்கின்றனர் . அவ்வாறே முஸ்லிம்கள் தனித்து தங்களுக்கென மாகாண சபையோ அல்லது ஏதேனும் தனி நிர்வாக அலகோ கோருவதையும் எதிர்த்து வந்திருக்கின்றனர். எனவேதான் முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணியுடன் முஸ்லிம்களின் தாயகமும் வடக்கு- கிழக்கு மாகாணத்துக்குள்ளேயே உள்ளது என்பதை வலியுறுத்தி இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்குள் முஸ்லிம்களுக்கான தீர்வொன்றுக்கும் உடன்பாடு கண்டிருந்தனர். எல்லாவற்றுக்கும் மேலாக எ.ஐ.எம்.மொஹிதீன் , தனது அரசியல் மேம்பாட்டிற்காக புலிகளுடன் உடன்பாட்டை மேற்கொண்டதுடன் , சென்னையிலிருந்து இலங்கை திரும்பியதும் வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஒன்றாகவே இணைத்திருக்க வேண்டும் என்றும் , அதுவே தங்களின் தாயகம் என்றும் இந்திய அரசுக்கு தெரியப்படுத்தினார். இந்தியப் படைகளுடன் புலிகள் மோதலில் ஈடுபட முன்னர் இணைந்த வடக்கு கிழக்கை உறுதி செய்ய புலிகளும் இந்திய அரசும் எம்.ஐ.எம். மொஹிதீனையும் பயன்படுத்திக் கொண்டனர் . ஒரு புறத்தில் கிழக்கிலே முஸ்லிம் காங்கிரசை கைக்குள் வைத்துக் கொண்ட இந்திய அரசு , அதன் அரசியல் கோரிக்கைகளை மறுபுறத்தில் எதிர் கொள்ளும் வகையில் செயற்பட்ட முஸ்லிம் அரசியல் சக்திகளையும் கைக்குள் வைத்துக் கொண்டது. மொத்தத்தில் இணைந்த வடக்கு கிழக்கு மாகாணங்களை உறுதி செய்யும் இந்திய ஒப்பந்தத்தை ஜீவித்திருக்கச் செய்வதில் மட்டுமே இந்தியா கவனம் செலுத்தியது. பங்களாதேசின் உருவாக்கத்தின் பின்னர் மிக நீண்ட கால முயற்சியின் பின்னர் இலங்கையின் மீதான ஆதிக்கத்தை நிலைநாட்டிய இந்திய இலங்கை ஒப்பந்தத்தை என்ன விலை கொடுத்தாயினும் நிலை நிறுத்த வேண்டும் என்பதில் மாத்திரம் கண்ணும் கருத்துமாக இருந்தது.
பதின்மூன்றாவது திருத்தச் சட்டம் தேசிய பாதுகாப்பினை , அல்லது பிரதேச பாதுகாப்பினை உள்ளடக்கியதல்ல. வட கிழக்கு மாகாண சபையை தேர்தல் மூலம் அங்கீகரித்தவர்கள் முஸ்லிம் மாகாண சபை மூலமே தங்களை பாதுகாக்க முடியும் என்று சொல்லிக் கொண்டு வட கிழக்கு மாகாண சபையில் ஆட்சி செய்தவர்கள் முஸ்லிம்கள் மீது இந்தியப் படையுடன் சேர்ந்து கொண்டு செய்த அட்டூழியங்களை தங்களின் அரசிய எழுச்சிக்கு முதலீடாக்குவதில் வெற்றி பெற்றனர். இதனயே தமிழ் தேசிய அரசியலும் செய்தது. ஆனால் ஒரே ஒரு வேற்றுமை முஸ்லிம் அரசியல் ஆயுத பரிமாணம் எடுப்பதை அல்லது முஸ்லிம் இளைஞர்கள் தமிழ் ஆயுத குழுக்களுடன் இணைவதை முஸ்லிம் காங்கிரஸின் வருகை தடுத்தது. அதிலும் முக்கியமாக முஸ்லிம் இளைஞர்கள் தங்களுக்கு எதிராகவும் ஆயுதம் தூக்கலாம் என்ற அச்சமும் மறைந்திருந்தது.
1990 களின் பின்னரான முஸ்லிம் மாகாண சபைக் கோரிக்கை
1990 களின் பின்னர் புலிகளினால் வட மாகாணத்தில் இருந்து முஸ்லிம்கள் முழுமையாக வெளியெற்றப்பட்டு , கிழக்கிலே முஸ்லிம்கள் கொல்லப்பட்டு , வாழிடங்களைவிட்டு விட்டு அகதிகளான பொழுது , மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழும் முஸ்லிம்களின் பாதுகாப்பு கேள்விக்குறியானது. தனித் தமிழ் மக்கள் பிரதேசமாக மட்டக்களப்பு மாவட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்ற புலிகளின் திட்டத்தின்படி முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட பொழுது , முஸ்லிம் காங்கிரஸ் இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் பொழுது நிலவிய சூழ்நிலைகளை மனதில் கொண்டிருந்திருக்க வேண்டும்.
1991 ஆண்டு அளவில் கொள்ளுபிட்டியிலுள்ள ஹக்கீமின் ( இன்றைய முஸ்லிம் காங்கிரசின் தலைவரின் ) வீட்டில் வட கிழக்கில் பரந்து விரிந்து கிடக்கும் நிலத்தொடர்பற்ற முஸ்லிம் வாழிடங்களை உள்ளடக்கி முஸ்லிம் மாகாண சபையை எப்படி உருவாக்கலாம் என்று ஆராய்வதற்காக முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் மறைந்த அஸ்ரப் ஒரு கூட்டத்தைக் கூட்டியிருந்தார். அந்த தனிப்பட்ட கூட்டத்தில் அம்பாறை மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்டு கிழக்கிலுள்ள முஸ்லிம் வாழிடப் பகுதிகளை ( கிராமங்களை நகரங்களை ) தமிழ் வாழிடப் பகுதிகளுக்காக ( கிராமங்களை நகரங்களை ) இடப் பரிமாற்றம் செய்து அதனை முஸ்லிம் மக்களின் செறிவு மிக்க பிரதேசமாக உருவாக்கி , ஏனைய நிலத்தொடர்பற்ற சகல முஸ்லிம் பிரதேசங்களையும் உள்ளடக்கியதாக முஸ்லிம் மாகாண சபை ஒன்றை உருவாக்குவது பற்றிய ஒரு ஆலோசனையை அவர் முன்வைத்த போது, அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட முஸ்லிம் காங்கிரஸின் அன்றைய மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் காத்தான்குடியை எப்படி இடப் பரிமாற்றம் செய்வது என்ற கேள்வியை அஸ்ரபிடம் முன் வைத்தார். அஸ்ரப் அதற்கு பதிலாக காரைதீவை காத்தான்குடிக்கு பகரமாக மாற்றிக் கொள்ளலாம் என்று குறிபிட்டார் . அதனை கேட்டதும் ஹிஸ்புல்லா ,அதை ஒரு பரிகாசமான ஆலோசனையாக எடுத்துக் கொண்டதுடன் ,அவ்வாறான பரிமாற்றம் சாத்தியமற்றது என்பதை வலியுறுத்தினார்.http://www.bazeerlanka.com/2012/03/blog-post.html
அத்துடன் அந்த விவகாரம் முடியவில்லை மீண்டும் 1995 களிலும் இவ்வாறான ஆலோசனைகளை முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ந்து நடத்தியது.
எஸ்.எம்.எம்.பஷீர்.
தொடரும்
Aucun commentaire:
Enregistrer un commentaire