பத்மநாபா ஈபிஆர்எல்எவ், தமது கட்சியின் பெயரில் உள்ள ‘ஈழம்’, ‘விடுதலை’ ஆகிய சொற்களை நீக்கவுள்ளதாக ஐஏஎன்எஸ் செய்தி ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் இன்று இதுதொடர்பான அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியிடப்படவுள்ளது.
2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டதற்குப் பிந்திய சிறிலங்காவின் அரசியல் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டே, பத்மநாபா ஈபிஆர்எல்எவ் கட்சி தமது பெயரை மாற்றிக் கொள்ளும் இந்த முடிவுக்கு வந்துள்ளது.
பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர முன்னணி என்றுள்ள இந்தக் கட்சியின் பெயர், தமிழ் சமூக ஜனநாயக கட்சி என்று மாற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுதந்திர தமிழீழத்தை உருவாக்கும் நோக்கில், ஈபிஆர்எல்எவ் அமைப்பு, 1981ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
விடுதலைப் புலிகளால் ஆயுதப் போராட்டத்தில் இருந்து ஓரம்கட்டப்பட்ட பின்னர், அரசியல் கட்சியாக ஈபிஆர்எல்எவ் பதிவு செய்து கொண்டது.
ஈபிஆர்எல்எவ் கட்சியின் பத்மநாபா படுகொலை செய்யப்பட்டதையடுத்து, கட்சிக்குள் பிளவுகள் ஏற்பட்டன.
இதன் பின்னர், கட்சியின் ஒரு பிரிவு சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து கொண்டது.
அதேவேளை, மற்றொரு பிரிவு பத்மநாபா ஈபிஆர்எல்எவ் என்ற பெயரில் இயங்கி வந்தது. தற்போது பத்மநாபா ஈபிஆர்எல்எவ் கட்சியே தமது பெயரை மாற்றிக் கொள்ளவுள்ளது.
பத்மநாபா ஈபிஆர்எல்எவ் கட்சியின் கூட்டம் யாழ்ப்பாணத்தில் தற்போது நடந்து வருகிறது.
இலங்கையின் பல பகுதிகளில் இருந்தும், கனடா, பிரித்தானியா, சுவிற்சர்லாந்து. ஜேர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளில் இருந்தும் கட்சியின் உறுப்பினர்கள் இந்த மாநாட்டுக்கு வந்துள்ளனர்.
இந்த மாநாட்டிலேயே, ஈழம்’, ‘விடுதலை’ ஆகியவற்றைக் கைவிட்டு, புதிய கட்சியின் பெயரை அறிவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
Aucun commentaire:
Enregistrer un commentaire