சிறிலங்கா கடற்படையின் சிறப்புப் படைப்பிரிவுக்கும், அமெரிக்க கடற்படையின் சீல் படைப்பிரிவுகளுக்கும் இடையில், கூட்டுப் பயிற்சிகளை மேற்கொள்வதற்கான பேச்சுக்களை நடத்தவே, அமெரிக்க கடற்படையின் பசுபிக் சிறப்பு நடவடிக்கைத் தளபதி சிறிலங்கா வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க கடற்படையின் பசுபிக் கட்டளைப் பீடத்தின் சிறப்பு நடவடிக்கைத் தளபதியான, ரியர் அட்மிரல், கொலின் கில்ரெய்ன், நேற்றுமுன்தினம் சிறிலங்கா கடற்படைத் தளபதி, வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
ரியர் அட்மிரல், கொலின் கில்ரெய்ன், அமெரிக் கடற்படையின் சீல் படைப்பிரிவின் முன்னாள் கொமாண்டோ ஆவார்.
இவர், சிறிலங்கா கடற்படைத் தளபதியுடன், சிறிலங்கா கடற்படையின் எஸ்பிஎஸ் எனப்படும், சிறப்புப் படகுப் படையணி மற்றும் அமெரிக்க கடற்படையின் சீல் படையணிக்கும் இடையிலான கூட்டுப் பயிற்சிகளை மேற்கொள்வது தொடர்பாகவே பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
1995ஆம் ஆண்டு பலன்ஸ் ஸ்ரைல் பயிற்சி என்ற பெயரில், சிறிலங்கா படைகளுக்கு, அமெரிக்காவின் சீல் படைப்பிரிவு, பயிற்சிகளை வழங்கி வந்தது.
சிறிலங்காவின் மனித உரிமை மீறல் பிரச்சினைகளை அடுத்து, அந்தப் பயிற்சிகள், பின்னர் இடைநிறுத்தப்பட்டிருந்தன.
மீண்டும் இந்தப் பயிற்சிகளை ஆரம்பிப்பது தொடர்பாகவே தற்போது பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.
சிறிலங்காவின் தற்போதைய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தனவே, 1993ஆம் ஆண்டு, எஸ்பிஎஸ் எனப்படும், சிறப்புப் படகுப் படையணியை உருவாக்கியவராவார். இரண்டு தடவைகள் இதன் கட்டளை அதிகாரியாகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Aucun commentaire:
Enregistrer un commentaire