ஜெனீவாவில் இம்மாதம் 27ம் திகதி ஆரம்பமாகும் ஐ.நா.மனித உரிமை ஆணையத்தின் 19வது கூட்டத்தொடரில் கலந்து கொண்டு, இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக பெரும் ‘யுத்தம்’ செய்யப்போவதாக வரிந்து கட்டிக்கொண்டு நின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு, இப்பொழுது அங்கு செல்வதில்லை என அறிவித்துள்ளது. இந்த திடீர் அந்தர் பல்டி ஏன் என பலரும் மண்டையைப் போட்டு குடைவது நிச்சயம்.
கூட்டமைப்பின் இந்தத் திடீர் முடிவு இலங்கைத் தாய்நாட்டின் மீது கொண்ட பற்றுதலால் அல்ல என்பது மட்டும் நிச்சயம். அண்மையில் இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையில், ‘கூட்டமைப்பினர் ஜெனீவா சென்று புலிகள் செய்த கொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பேற்க வேண்டும். ஏனெனில் புலிகள்தான் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என கூட்டமைப்பு ஏற்றுப் பேசி வந்துள்ளது’ எனத் தெரிவித்திருந்தார்.
அமைச்சர் பசில் ராஜபக்சவின் இந்த கருத்துக்குப் பிறகுதான், தமிழ் கூட்டமைப்பினர் தமது வாலைச் சுருட்டிக்கொண்டு, மீண்டும் அடுப்புச் சாம்பலுக்குள் புகுந்து கொண்ட பூனைகளாக மாறியிருக்கின்றனர் என்பதில் துளியும் சந்தேகமில்லை.
ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கையின் இறுதியுத்த நேர உரிமை மீறல்கள் குறித்து தனக்கு ஆலோசனை வழங்கவென நியமித்த தருஸ்மன் தலைமையிலான மூவர் கொண்ட குழு தயாரித்து கையளித்த அறிக்கையில், இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக மட்டுமின்றி, புலிகளுக்கு எதிராகவும் பாரதூரமான குற்றச்சாட்டுகளைச் சுமத்தியிருந்தது.
ஆனால் இப்பொழுது ஜெனீவா கூட்டம் பற்றியும், இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள் குறித்தும் பேசும் பலர், புலிகள் இழைத்த குற்றங்கள் பற்றி ஒரு சொல்கூடப் பேசுவதில்லை. இந்த யுத்தத்தின் ஒரு தரப்பாக புலிகள் தான் இருந்தார்கள் என்பதைக்கூட பலர் மறந்தது மாதிரி நடந்து கொள்கிறார்கள். உண்மையில் புலிகள் பொதுமக்களை தமக்கு மனிதக் கேடயமாகப் பிடித்து வைத்திருந்த காரணத்தால் தான், இறுதியுத்த நேரத்தில் இவ்வளவு தொகை உயிரிழப்புகள் ஏற்பட்டன என்பதைப் பலர் சிந்திப்பது இல்லை. அதைவிட தமது கட்டளைக்குக் கீழ்படியாது இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் பாதுகாப்புத்தேடி வர முயன்ற ஏராளமான பொதுமக்களை புலிகள் சுட்டுப்படுகொலை செய்ததையும் மறந்தது போல் நடிக்கிறார்கள்.
அதுமாத்திரமின்றி, புலிகள் இயக்கம் கடந்த 30 ஆண்டு காலமாக ஆயிரக்கணக்கான மக்களைப் படுகொலை செய்து வந்துள்ளது. அவர்களில் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், மாற்று இயக்க தலைவர்கள் - உறுப்பினர்கள், அமைச்சர்கள், ஜனாதிபதி, உயர் அரச அதிகாரிகள், கல்விமான்கள், மத குருக்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலரும் அடங்குவர். முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியை இந்திய மண்ணில், அதுவும் தமிழகத்தில் வைத்தே புலிகள் படுகொலை செய்தனர். இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் சபாலிங்கத்தை புலம்பெயர் மண்ணான பிரான்சில் அவரது வீட்டில் மனைவியின் கண்ணெதிரிலேயே சுட்டுப் பொசுக்கினர்.
புலிகளின் இவ்வளவு மனித குல விரோதச் செயற்பாடுகளையும் மிதவாதத் தமிழ் தலைமை எனச் சொல்லிக் கொள்ளும் பிற்போக்குத் தமிழ் தலைமை வேடிக்கை பார்த்துக்கொண்டே காலத்தைக் கழித்தது. அத்துடன் நிறுத்திக் கொண்டது என்றாலும் பரவாயில்லை. ஆனால் புலிகள்தான் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என இன்று தமிழினத்துக்காக ‘காவடியாடும்’ தமிழ் தேசியக் கூட்டமைப்புத் திரும்பத் திரும்பக் கூறி வந்துள்ளது.
இறுதி யுத்த நேரத்தில் ஏராளமான தமிழ் மக்களை அரச படைகள் கொன்றதாக இன்று நீலிக்கண்ணீர் வடிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, அந்த யுத்தத்தில் புலிகளும் தமது சொந்த மக்களையே சுட்டுப்படுகொலை செய்ததை மூடி மறைக்கப் பகீரதப் பிரயத்தனம் செய்கிறது. புலிகள் பல்லாயிரக்கணக்கான மக்களை தமது பாதுகாப்புக்காக ஒரு குறுகலான பிரதேசத்தில் தடுத்து வைத்திருப்பதால் பாரிய மனிதப் பேரழிவு ஏற்படும் என்பதைக் கூட்டமைப்பு நன்கு அறிந்திருந்தும், அந்த மக்களை விடுவிக்கும்படி புலிகளை ஒருபோதும் கோரவில்லை. மாறாக புலிகளின் தலைமையை அழிவிலிருந்து பாதுகாக்கவே நாயாய் ஓடி அலைந்தது.
எனவே புலிகளை தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதி என்று அறிவித்ததின் காரணமாகவும், புலிகளின் மனித உரிமை விரோதச் செயற்பாடுகளை தொடர்ந்து ஆதரித்து வந்ததிற்காகவும், இன்று உலகின் முன்னால் பொறுப்புக் கூற வேண்டியவர்கள் சந்தேகத்திற்கிடமின்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தான். ஆகையால் அவர்கள் நழுவல் போக்கைக் கடைப்பிடிக்காமல் ஜெனீவாவுக்குச் சென்று, புலிகள் 30 ஆண்டுகளாக செய்து வந்த படுகொலைகள், மனித உரிமை மீறல்களுக்கப் பொறுப்பு ஏற்க வேண்டும்.
இந்த விடயத்தில் போரின் ஒரு கட்சிக்காரரான இலங்கை அரசாங்கத்தை நெருக்கிப் பிடிக்கும் அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகள், போரின் மறுதரப்புக் கட்சியான புலிகள் சார்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் நெருக்கிப் பிடிக்க வேண்டும். இரு தரப்பும் தத்தமது நியாயங்களை ஜெனீவாவில் முன்வைப்பதற்கு ஒழுங்கு செய்தால்தான், அது நீதியான செயற்பாடாக இருக்கும்.
இந்த விடயத்தில் ஐ.நா.மனித உரிமை ஆணையமும், சர்வதேச சமூகமும், மனித உரிமைக் கோசம் போடும் அமைப்புகளும் எப்படி நடந்து கொள்ளப் போகின்றன என்பதிலேயே நீதியின் தீர்ப்பு அமையும்
Aucun commentaire:
Enregistrer un commentaire