வடக்கு - கிழக்கு தமிழ் மக்கள் தொடர்பில் தமிழ் சிவில் சமூகம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் மக்கள் தொடர்பிலும் முஸ்லிம் சிவில் சமூகம் உருவாக்கப்படுவதாக தெரிகிறது.
இதன் தொடர்ச்சியாக மலையக தமிழர் தொடர்பில் மலையக சிவில் சமூகம் என்ற அமைப்பை உருவாக்குவதில் தேர்தல் அரசியல் தொடர்புகள் அற்ற மலையக அறிவுஜீவிகளும், சமூக முன்னோடிகளும், ஊடகவியலாளர்களும் கவனம் செலுத்த வேண்டும்.
மலையக அரசியல் தலைவர்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் உரிய வழி காட்டல்களை, அரசியல் கட்சிகளின் அங்கத்தவர்கள் அல்லாதோரை உள்ளடக்கிய இத்தகைய சிவில் அமைப்பு வழங்க வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மனோ கணேசன் மேலும் தெரிவித்ததாவது,
தமிழ் பேசும் வட-கிழக்கு, மலையக, முஸ்லிம் சமூகங்கள் மத்தியில் சிவில் சமூகம் என்ற அமைப்புகள் உருவாவது வரலாற்றின் கட்டாயமாகும். அரசியல் தலைவர்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் உரிய வழி காட்டல்களை இத்தகைய அரசியல் கட்சிகளின் அங்கத்தவர்கள் அல்லாதோரை உள்ளடக்கிய சிவில் அமைப்புகள் வழங்க வேண்டும்.
சமூக நோக்கில் செய்யப்பட வேண்டிய காரியங்கள் மத்தியில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டிய காரியங்களை வரிசைப்படுத்துவதில், தேர்தல் அரசியல் காரணமாக அரசியல் கட்சிகள் பல சந்தர்ப்பங்களில் தவறு விடுகின்றன. இது முழு சமூகங்களையும் பாதிக்கின்றன.
அனைத்தையும் அரசியல்வாதிகள் மாத்திரம் செய்து முடித்துவிடுவார்கள் என்று சமூகத்தில் நிலவும் தவறான கருத்து மாற்றப்படவேண்டும். அதுபோல் சமூகத்தின் அனைத்து நடவடிக்கைகள் பற்றியும் நம்மால் மாத்திரமே தீர்மானிக்க முடியும் என்ற தவறான கருத்து அரசியல் தலைமைகளிடம் இருந்து அகற்றப்பட வேண்டும்.
அரசியல் கட்சிகளின் தலைமை பாத்திரங்களை அங்கீகரிக்கும் அதேவேளையில் சமூகம் தொடர்பிலான சமகாலம் மற்றும் எதிர்காலம் பற்றிய பொதுவான கோட்பாடுகளை உருவாக்கி தருவது என்ற பாத்திரத்தை சிவில் சமூக அமைப்புகள் ஆற்ற வேண்டும். அடிப்படை கோட்பாடுகளை உருவாக்குவதில் இரு தரப்பினர் மத்தியில் கலதுரையாடல்கள் இடம்பெற வேண்டும். இந்த இணைத்த செயல்பாட்டை ஏற்றுக்கொள்ள மறுக்கும் எந்த ஒரு தரப்பையும், சமூகம் நிராகரிக்க வேண்டும்.
இன்று மலையக தமிழ் சமூகம், சமகாலம் மற்றும் எதிர்காலம் பற்றிய வழிகாட்டல்களை தீர்மானிப்பதில் பாரிய சிக்கலை எதிர்நோக்கியுள்ளது. தனிநபர்களின் தான்தோன்றித்தனமான நடவடிக்கைகள் காரணமாக முழு மலையக சமூகமே திக்கு தெரியாத காட்டில் விடப்பட்டுள்ளதா என்ற நியாயமான சந்தேகம் இன்று தென்னிலங்கை முழுக்க வாழும் இந்திய வம்சாவளி மலையக மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
எனவே மலையக சிந்தனையாளர்கள் இதுபற்றி சிந்திக்க வேண்டும். பாரிய சவால்கள் நிறைந்த சூழலில் செயல்படும் வட-கிழக்கு சிவில் சமூக செயல்பாட்டாளர்களை முன்மாதிரியாக கொள்ள வேண்டும். வட-கிழக்கு தமிழ் சிவில் சமூகம் என்ற அமைப்பும், இன்னமும் கட்டமைப்புரீதியாக உருவாக்கப்பட்டுள்ளதாக எனக்கு தெரியவில்லை.
அது எதிர்காலத்தில் சரி செய்யப்படும் என நினைக்கிறன். எனினும் தமிழ் சிவில் சமூக அமைப்பு, முஸ்லிம் மற்றும் மலையக சிவில் சமூக அமைப்புகளின் உருவாக்கம் தொடர்பிலான சிந்தனைக்கு முன் மாதிரியாக அமைந்துள்ளது. மலையக சிவில் சமூக உருவாக்கத்திற்கு வட-கிழக்கின் தமிழ் சிவில் சமூக பிரதிநிதிகள் முழுமையான ஒத்துழைப்புகளை வழங்குவார்கள் என்பது திண்ணம்.
எதிர்காலத்தில் வட-கிழக்கு, மலையக, முஸ்லிம் மக்களை உள்ளடக்கிய ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்களுக்கு உரிய பொது அரசியல் கோட்பாடுகளை இந்த மூன்று சிவில் சமூக பிரதிநிதிகளும் இணைந்து உருவாக்கும் காலம் வரும்
Aucun commentaire:
Enregistrer un commentaire