dimanche 26 février 2012

சனிக்கிழமை வெளியிடப்பட்ட 80 பக்க அறிக்கையில், மே 2009 ல் யுத்தம் நிறைவுக்கு வருவதற்கு முன் நான்கு ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்

மே 2009 இல் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்ட சிறிலங்காவின் உள்நாட்டு யுத்த காலப்பகுதியில், இறுதி நான்கு ஆண்டுகளில் அந்நாட்டின் வடக்கு மாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களில் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் தொடர்பான புள்ளிவபரங்கள் அடங்கிய உத்தியோகபூர்வ அறிக்கையை சிறிலங்காவின் குடிசன மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

'முக்கிய சம்பவங்கள் தொடர்பான பதிவு -2011' [Enumeration of Vital Events-2011] எனப் பெயரிடப்பட்டு சனிக்கிழமை வெளியிடப்பட்ட 80 பக்க அறிக்கையில், மே 2009 ல் யுத்தம் நிறைவுக்கு வருவதற்கு முன் நான்கு ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, வவுனியா மற்றும் கிளிநொச்சி ஆகிய ஐந்து மாவட்டங்களில் மொத்தம் 22,329 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக இறுதி ஐந்து மாத கால யுத்தத்தில் 8,000 வரையானவர்கள் தமது உயிர்களை இழந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குடிசன மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களமானது, EVE-2011 தொடர்பான மதிப்பீட்டு நடவடிக்கைகளை வடக்கு மாகாணத்தில் யூன் 10 தொடக்கம் ஆகஸ்ட் 15 வரை மேற்கொண்டது. வயதுபோனவர்கள் அல்லது நோயாளிகளின் இறப்பு, இயற்கை அழிவு, விபத்து போன்றவற்றால் ஏற்பட்ட இறப்பு, கொலை, தற்கொலை, யுத்த நடவடிக்கைகளின் போது ஏற்பட்ட உயிரிழப்புக்கள், இறப்பிற்கான காரணம் அறியப்படாத சம்பவங்கள் என இந்த அறிக்கையில் இறப்புக்கள் பல்வேறு விதமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

நோயால் இறந்தமை, முதியவர்களின் இறப்பு, இயற்கை அழிவுகளின் போது உயிரிழந்தமை போன்றவை இயற்கை மரணத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன. விபத்து, கொலை, தற்கொலை, தீவிரவாத நடவடிக்கையால் கொல்லப்பட்டமை போன்றவற்றை 'ஏனைய இறப்புக்கள்' என்ற வகைக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

எனினும், 2009 ல் இறந்தவர்களில் 71 சதவீதமானவர்கள் அசாதாரண சூழ்நிலையின் போது தமது உயிர்களை இழந்துள்ளதாகவே அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் 2009ம் ஆண்டிற்கு முற்பட்ட மற்றும் பிற்பட்ட காலப்பகுதியில் மரணித்தவர்களில் பெரும்பாலானவர்கள் இயற்கை காரணங்களால் இறந்ததாகவே EVE -2011 அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2005-2009 காலப்பகுதியில் வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களில் மேற்குறிப்பிட்ட பல்வேறு காரணங்களாலேயே 22,239 பேர் இறந்துள்ளனர். ஆனால் இவர்களில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் அதாவது கிட்டத்தட்ட 11,172 பேர் வரை 2009ம் ஆண்டில் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2009 ல் 7934 பேர் 'ஏனைய காரணங்களால்' மரணித்துள்ளனர் எனவும், 2523 பேர் இயற்கை மரணத்தை அடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறிலங்காவில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தில் கொல்லப்பட்ட 6858 பேரில் 10 வயதுக்குக் குறைந்த 552 சிறார்களும் உள்ளடங்குகின்றனர். இதில் உள்ளடக்கப்படாத 2,635 பேர் காணாமற் போயுள்ளனர்.

தமிழ்ப் புலிகளின் நிழல் நிர்வாகத்தின் தலைநகராக விளங்கிய கிளிநொச்சி மாவட்டத்திலேயே ஜனவரி – மே 2009 வரை அதிகம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். கிளிநொச்சியில் 2,614 பேரும், முல்லைத்தீவில் 1,576 பேரும், யாழ்ப்பாணத்தில் 1,273 பேரும், வவுனியாவில் 1,047 பேரும், மன்னாரில் 348 பேரும் இறந்துள்ளதாக குடிசன மதிப்பீட்டுத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2009 ல் இடம்பெற்ற மரணங்களில் அதிகம் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலேயே இடம்பெற்றுள்ளதாக இவ் அறிக்கை மூலம் அறியமுடிகிறது. ஆனால் இறந்தவர்களில் புலி உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் பொதுமக்களின் எண்ணிக்கை போன்றவற்றை இவ் அறிக்கை வரையறுத்துக் காட்டவில்லை.

யுத்தம் தீவிரம் பெற்றிருந்த 2009ம் ஆண் டின் முதல் ஐந்து மாதங்களிலும் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை தொடர்பில் சிறிலங்கா குடிசன மதிப்பீட்டு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணிக்கைக்கும், அனைத்துலக மனித உரிமைகள் அமைப்பால் வெளியிட்ட புள்ளிவிபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணிக்கைக்கும் இடையில் நீண்ட வேறுபாடு உள்ளது. அதாவது 2009 காலப்பகுதியில் 40,000 வரையானவர்கள் கொல்லப்பட்டதாக அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

வடக்கு மாகாணத்தில் 997,754 பேர் உள்ளதாகவும் இவர்களில் 934,392 பேர் சிறிலங்காத் தமிழர்கள் எனவும் EVE-2011 அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களிலும் 21,860 சிங்களவர்களும், 32,659 முஸ்லீம்களும் வாழ்வதாக அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ் ஐந்து மாவட்டங்களிலும் சிறிலங்காத் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். வடக்கு மாகாணத்தில் வாழும் சிங்களவர்களில் 75 சதவீதமானவர்கள் வவுனியா மாவட்டத்தில் வாழ்வதாகவும், முஸ்லீம்களில் பெருமளவானர்கள் மன்னார் மாவட்டத்தில் வாழ்வதாகவும் அவ் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் குடிசன மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தால் இறுதியாக 1981 ல் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் பிரகாரம், வடக்கு மாகாணத்தின் சனத்தொகை 1,109,404 ஆக இருந்தது. சிறிலங்காவில் 30 ஆண்டுகாலமாகத் தொடரப்பட்ட யுத்தத்தில் 100,000 வரையான மக்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Aucun commentaire:

Enregistrer un commentaire