February 20,2012
காலத்தின் கட்டாயத்தை உணர்ந்து நாம் அனைவரும் ஒன்று பட வேண்டிய நேரம் வந்துவிட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நான் கட்டிய வீடு. எனது வீட்டுக்குள் வர நான் வெட்கப்பட வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு உரிமையுடன் கூறினார் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வி.ஆனந்தசங்கரி. நேற்று முன்தினம் வவுனியா நகர சபை மண்டபத்தில் நடைபெற்ற சமகால அரசியல் கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஆனந்தசங்கரி இப்படிக் கூறினார். வன்னி மாவட்ட கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரான சிவசக்தி ஆனந்தனின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில் தமிழரசுக் கட்சி, ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப்., தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய ஐந்து கட்சிகளும் ஒன்றாக கலந்துகொண்டன. இந்த நிகழ்வில் மேற்படி கட்சிகளின் தலைவர்களான சம்பந்தன், சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் மாவை சேனாதிராசா ஆகியோரும் உரையாற்றினர். நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன், சரவணபவன், சுமந்திரன் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர். அங்கு தொடர்ந்து உரையாற்றி ஆனந்தசங்கரி மேலும் கூறியதாவது: நாம் பிரிந்து நின்று எதனையும் சாதித்துவிடப் போவதில்லை. பட்டம் பதவிகள் தேவையில்லை. நமது தேவை தமிழன் தமிழனாக தலை நிமிர்ந்து வாழ வேண்டும். நமது பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு வேண்டும். நமக்காக, நமது விடிவுக்காக சேவையாற்றி தலைவர்கள் உயிர் நீத்த தியாகிகள் ஆகியோரின் ஆத்மாக்கள் சாந்தியடைய வேண்டுமெனில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று வலியுறுத்தினார் சங்கரி
Aucun commentaire:
Enregistrer un commentaire