ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று சர்வதேச சமூகம் ஒன்றிணைந்து ஆதரவு தெரிவித்திருக்கும் சந்தர்ப்பமானது இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் ஐ.நா. தலையிடுவதற்கான முதற்படியாகும்.
இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன். நேற்று வவுனியா நகரசபை மண்டபத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற சமகால அரசியல் கருத்தரங்கில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்தக் கருத்தரங்கில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்:
இலங்கை இனப்பிரச்சினைக்குத் துரித கதியில் தீர்வு காணப்பட வேண்டும். இலங்கை அரசால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று சர்வதேச சமூகமும் ஐ.நா. அமைப்புக்களும் அழுத்தம் கொடுத்திருப்பது எமது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான நல்லதொரு சந்தர்ப்பமாகும்.
எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் இலங்கை விவகாரம் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இதில் இறுதிக் கட்ட யுத்தத்தின்போது காணாமற் போனவர்கள், சரணடைந்தவர்கள், கொல்லப்பட்டவர்கள் மற்றும் போர்க் குற்றவிவகாரங்கள் தொடர்பாக அழுத்தம் கொடுக்கப்படவுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக நாம் சர்வதேச சமூகத்துக்கும் புலம்பெயர் அமைப்புக்களுக்கும் சர்வதேசத் தலைவர்களுக்கும் தொடர்ச்சியாக உண்மை நிலைப்பாட்டை தெரியப்படுத்தி வந்துள்ளோம்.
இதன் காரணமாகவே ஐ.நா. மனித உரிமைப் பேரவையால் இலங்கை இனப்பிரச்சினை விவகாரம் முன்னெடுக்கப்படும் அளவுக்கு நிலைமை மாறியுள்ளது.
இது இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வுக்கான முதற்படியாகும். இன்று எம் மத்தியில் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகள் அனைத்தையும் விடுத்து இங்கு ஒன்று கூடியுள்ளோம். ஆகவே இனப்பிரச்சினைக்கும் உறுதியானதும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதுமான ஒரு தீர்வினை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதில் முனைப்பாக இருக்கின்றோம்.
எம்மை மிரட்டி அடிபணிய வைத்துவிட முடியாது. நாம் எமது மக்களின் உரிமைகளுக்காகவே குரல் எழுப்புகின்றோம். இதில் எந்த முட்டுக்கட்டை ஏற்பட்டாலும் அவற்றை உடைத்தெறிந்து தீர்வு காண்பதில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை எம்மிடம் உள்ளது என்றார்.
இரா.சம்பந்தன் உரை
இந்த மாநாட்டில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உரையாற்றுகையில் கூறியதாவது:
இனப்பிரச்சினை தொடர்பாக இந்திய அரசும் கொடுத்த அழுத்தங்கள் காரணமாகவே இலங்கை அரசுடன் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டன.
இந்தப் பேச்சுக்கள் ஆரம்ப காலத்தில் சித்தார்த்தன் தலைமையிலான புளொட் அமைப்போ ஆனந்த சங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியோ நமது அமைப்பில் இருக்கவில்லை. இதன் காரணமாகவே அந்தக் கட்சிகளின் பிரதிநிதிகள் இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான பேச்சுக்களில் உள்வாங்கப்படாது போகும் நிலை ஏற்பட்டது. இப்போது அவ்வாறான நிலை இல்லை. எதிர்காலத்தில் தேவையான மாற்றங்கள் மேற்கொள்ளப்படும். அதன் மூலம் எனக்குப் பதிலாக ஆனந்தசங்கரியோ சித்தார்த்தனோ சொல்வதை நான் மறுக்கப் போவதில்லை.
நல்லிணக்க ஆணைக்குழு சிபார்ச்சு செய்துள்ள விடயங்களின் அடிப்படையில் இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வுகாணப்பட வேண்டும் என ஐ.நா. அமைப்பும் வலியுறுத்தியுள்ளது.
நல்லிணக்க ஆணைக்குழு பல்வேறு விடயங்கள் தொடர்பாக சிபார்சுகளை முன்வைத்துள்ளது. அவற்றை நாம் முற்றுமுழுதாக ஏற்காவிட்டாலும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தொடர்பாகவும் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாகவும் முன்வைக்கப்பட்டுள்ள சிபார்சுகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை ஐ.நா. அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
நாம் இனப்பிரச்சினை தொடர்பாக பல கோணங்களிலும் பல மட்டங்களிலும் பேச்சுக்களை நடத்துவதுடன் தீர்வுவிடயத்தில் இந்தியாவின் பங்களிப்பும் அவசியம் என வலியுறுத்தியுள்ளோம். ஆரம்ப கட்டத்தில் இந்தியாவின் அழுத்தம் காரமாகவே இலங்கை அரசு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுக்களை ஆரம்பித்தது. என்றார்
Aucun commentaire:
Enregistrer un commentaire