தமிழ் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரை, அது நான்கு கட்சிகளைக் கொண்டு புலிகளால் உருவாக்கப்பட்ட ஒரு பினாமி அமைப்பாகும். புலிகள் இருக்கும்வரை தமிழ் செல்வனும், அன்ரன் பாலசிங்கமும் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை கிளிநொச்சிக்கு அழைத்து பாடங்கள் நடாத்தி, உத்தரவுகள் வழங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களது அழிவுக்கப் பின்னர், பூனையில்லாத வீட்டில் எலிகள் சட்டி பானை உருட்டும் கதையாக கூட்டமைப்பு மாறிவிட்டது.
கடந்த வருடம் தமிழரசுக்கட்சியின் மாநாடு யாழ்ப்பாணத்தில் நடந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் மாநாடும் நடந்தது. ரெலோ இயக்கத்தின் மாநாடும் வவுனியாவில் நடைபெற்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளின் மாநாடோ அல்லது அதற்கு வெளியில் செயல்படுகிற ஏனைய தமிழ் கட்சிகளின் மாநாடோ இதுவரை நடைபெற்றதாகத் தெரியவில்லை. சில தமிழ் கட்சிகளைப் பொறுத்தவரை அவர்களது வாழ்நாளில் மாநாடு என்ற ஒரு ‘சாமான்’ நடைபெற்றதே கிடையாது.
சில தமிழ் கட்சிகள் நடாத்திய மாநாடுகள் பற்றியும் பிரமித்துக் கதைப்பதற்கு எதுவும் இல்லை. தமிழ் கட்சிகளைப் பொறுத்தவரை செல்வநாயகம், அமிர்தலிங்கம் இருந்த காலங்களில் கூட திருமலை, கல்முனை, உடுவில், ஆவரங்கால், யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் மாநாடு என்ற பெயரில் சில கதம்பக் களியாட்டங்கள் நடந்து வந்திருக்கின்றன. அதற்கு அப்பால் அவற்றை வேறு பெயர் சொல்லி அழைப்பதற்கு அவை லாயக்கற்றவை.
தென்னிலங்கையைப் பொறுத்தவரை, அதிதீவிர முதலாளித்துவக் கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி முதல் தீவிர இடதுசாரிக் கட்சிகள் வரை ஒழுங்காக மாநாடுகள் நடாத்தாத கட்சிகள் இல்லை எனலாம். இந்த விடயத்தில் உரிமையும் ஜனநாயகமும் பேசும் தமிழ் கட்சிகளை விட, தென்னிலங்கைக் கட்சிகள் பலபடி மேலே உள்ளன.
அதிலும் இடதுசாரிக் கட்சிகளைப் பொறுத்தவரை உலகம் முழுவதுமே அவர்களுக்கு என்று ஒரு பொது நடைமுறை உள்ளது. அவர்களைப் பொறுத்தவரை ‘காங்கிரஸ்’ எனச் சொல்லப்படும் மாநாடுகள்தான் கட்சியின் சகல விடயங்களையும் தீர்மானிக்கின்றன. மாநாடுகளில் தெரிவு செய்யப்படும் மத்திய குழு சர்வ வல்லமை பொருந்தியது. அதுதான் எல்லா முக்கிய விடயங்களையும் தீர்மானிக்கிறது. கட்சி ஒரு நாட்டில் அல்லது மாநிலத்தில் அதிகாரத்தில் இருந்தாலும், ஆட்சித் தலைவர் அல்லது பாராளுமன்றக் குழுத் தலைவரை விட கட்சியின் பொதுச் செயலாளரே மேலானவரும் அதிகாரம் வாய்ந்தவருமாக இருப்பார். பெரும்பாலான கம்யூனிஸ்ட் கட்சிகளில், கட்சிப் பொதுச் செயலாளர் அரச அல்லது பாராளுமன்றப் பதவிகள் எதனையும் ஏற்பதில்லை.
உதாரணமாக இந்தியாவில் உள்ள இரு கம்யூனிஸ்ட் கட்சிகளையும் எடுத்துக் கொண்டால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் பொதுச்செயலர் பிரகாஸ் காரத்தோ அல்லது இந்திய கம்யூனிஸ்ட்கட்சியின் பொதுச் செயலர் ஏ.பி.பரதனோ கட்சிக்கு அப்பாற்பட்ட பதவிகள் எதனையும் ஏற்பதில்லை. இந்தக் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லது சட்டசபை உறுப்பினர்கள் தமது சம்பளப் பணத்தைக்கூட கட்சியிடமே கொடுத்துவிட்டு, கட்சி மாதாமாதம் தரும் படியை (அலவன்ஸ்) மட்டும் தமது செலவுக்குப் பெற்றுக் கொள்கிறார்கள்!
இந்த நடைமுறையை எமது பாராளுமன்ற உறுப்பினர்களின், அதிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களின் நடைமுறையுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியுமா? எமது நாட்டில் பெரும் பணம் முதலீடு செய்து பாராளுமன்ற உறுப்பினராக வருவதே, கொழுத்த சம்பளங்களையயும், இதர சலுகைகள் வரப்பிரசாதங்களையும் அனுபவிப்பதற்குத்தானே? இங்கே மக்கள் சேவை என்பது தேர்தல் காலங்களில் மக்களை ஏமாற்றி வாக்குப் பெற உபயோகிக்கும் வார்த்தை மட்டும்தான்.
தமிழ் கட்சிகளைப் பொறுத்தவரை கட்சித் தலைமைக்கு எந்த மதிப்பும் கிடையாது. உள்கட்சி ஜனநாயகமும் கிடையாது. பாராளுமன்றக் குழுத் தலைவரே கட்சிக்காரர்களைவிட உயர்ந்தவர். அவர் வைத்ததே சட்டம். சில வேளைகளில் அவரே ஏககாலத்தில் கட்சித் தலைவராகவும், பாராளுமன்றக் குழுத் தலைவராகவும் இருப்பார். இரா.சம்பந்தன் இதற்கொரு உதாரணம். அவர் மட்டுமல்ல தமிழ் கட்சிகளைப் பொறுத்தவரை புலிப் பினாமிக் கட்சிகளுக்கும் சரி, எதிர்ப்புக் கட்சிகளுக்கும் சரி இது பொருந்தும். இதில் கொள்கை வேறுபாட்டைவிட, தமிழனின் தனித்துவம் தான் பொதுவான குணாம்சமாக இருக்கிறது.
இந்த விடயத்தில் வலதுசாரிக் கட்சியான ஐ.தே.க கூட தேவலை எனலாம். அந்தக் கட்சியில், கட்சித் தலைவரைக் கட்டுப்படுத்தும் ஓரளவு அதிகாரம் கட்சிச் செயற்குழுவுக்கு உண்டு.
தமிழ் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரை, அது நான்கு கட்சிகளைக் கொண்டு புலிகளால் உருவாக்கப்பட்ட ஒரு பினாமி அமைப்பாகும். புலிகள் இருக்கும்வரை தமிழ் செல்வனும், அன்ரன் பாலசிங்கமும் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை கிளிநொச்சிக்கு அழைத்து பாடங்கள் நடாத்தி, உத்தரவுகள் வழங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களது அழிவுக்கப் பின்னர், பூனையில்லாத வீட்டில் எலிகள் சட்டி பானை உருட்டும் கதையாக கூட்டமைப்பு மாறிவிட்டது.
இப்பொழுது தமிழ் தேசியக் கூட்டமைப்பிலுள்ள பெரிய கட்சியான தமிழரசுக்கட்சி தன்னைப் பலப்படுத்துவதில் மும்முரமாக இருக்கிறது. கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு ‘காலம்’ வந்துவிட்டதால், அடுத்த தலைவர் யார் என்ற குடுமிச் சண்டை அங்கு ஆரம்பமாகியுள்ளது. இதில் முன்னணியில் இருப்பவர்கள் மாவை சேனாதிராஜாவும் சுரேஸ் பிரேமச்சந்திரனும் என்று கூறப்படுகிறது. பாராளுமன்ற அரசியலுக்குப் புதியவரானாலும், ‘சப்றா’ நிதி நிறுவன (மோசடி?) அனுபவமும், ‘உதயன்’ பத்திரிகை நிறுவன பலமும், பலமான நிதி ஆதரங்களும் உள்ள கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனும் கூட்டமைப்புத் தலைமைப் பதவியை நோக்கி மெல்ல மெல்லக் காய்களை நகர்த்தி வருகிறார் எனச் சிலர் கூறுகின்றனர்.
இந்த நிலையில் கூட்டமைப்பை அதிகாரபூர்வமாக தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்ய வேண்டும் என்ற பங்காளிக் கட்சிகளின் (இதில் முனைந்து நிற்பவர் சுரேஸ் பிரேமச்சந்திரன்) தொடர் வலியுறுத்தலை புறந்தள்ளிவிட்டு, தமிழரசுக்கட்சி தன்னைப் பலப்படுத்துவதில் முனைந்து நிற்கிறது.
சரவணபவனின் மைத்துனரும், கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது வேட்பாளர் நியமனத்தை எதிர்பார்த்து அதை மைத்துனர் சரவணபவன் சாதுரியமாகத் தட்டிப் பறித்துவிட, அந்தக் கோபம் காரணமாக அவரை விட்டுப் பிரிந்து சென்றவருமான, சு.வித்தியாதரனை தமிழரசுக்கட்சியின் கொழும்புக் கிளையின் செயலாளராக்கியதின் மூலம், சரவணபவனின் காய்நகர்தல்களுக்குத் தடைபோட மாவை சேனாதிராஜா முயன்றுள்ளதாக சிலர் கூறுகின்றனர். அத்துடன் வித்தியாதரனை வடக்கு மாகாணசபையின் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தவும் முயற்சிகள் நடக்கின்றன. இந்த முதலமைச்சர் பதவியில் சரவணபவனுக்கும் ஒரு கண் உண்டு.
தமிழரசுக்கட்சியின் இந்தக் கொழும்புக் கிளை விவகாரம், இன்னொரு பக்கத்தில் மனோ கணேசனை உசுப்பேத்தி விட்டுள்ளது. ஐ.தே.கவின் மடியில் செல்லப்பிள்ளையாக இருந்து கொண்டு, கொழும்பில் வாழ்கின்ற இந்திய வம்சாவழித் தமிழர்களினதும், யாழ்ப்பாணத் தமிழர்களினதும் வாக்குகளைப் பெற்று, ‘சர்க்கஸ்’ அரசியல் செய்துவரும் மனோ கணேசனுக்கு, தமிழரசுக்கட்சி கொழும்பில் கிளை திறந்த விவகாரம் ஆத்திரத்தைக் கிளறிவிட்டுள்ளது. ‘கொழும்பில் வாழ்கின்ற தமிழர்கள் அனைவரும் எனக்கு சீதனமாக வழங்கப்பட்டவர்கள். அப்படியிருக்க இன்னொரு மாப்பிள்ளையாக எப்படி அங்கு தமிழரசுக்கட்சியை கொண்டு வந்து நிறுத்த முடியும்?’ என மனோ கணேசன் காட்டமாக உறுமுகிறார். அது மாத்திரமின்றி, ‘நீங்கள் இங்கே வந்தால், நான் அங்கு வந்து காட்டுகிறேன் பார்’ என யாழ்ப்பாணத்துக்கும் ஒரு ‘விசிட்’ அடித்திருக்கிறார். வன்னி மற்றும் கிழக்கிற்கும் செல்லத் திட்டம் தீட்டியிருக்கிறார்.
தமிழ் கட்சிகள் தேசியமும் சுய நிர்ணயமும் பேசிக் கொண்டு உண்மையில் நடாத்தும் கூத்துக்கள் இவைதாம். ‘குட்டக்குட்ட குனிபவனும் மடையன். குனியக்குனிய குட்டுபவனும் மடையன்’ என்றொரு வழக்கு உண்டு. ஆனால் இங்கே குட்டிக்கொண்டிருக்கும் தமிழ் கட்சிகள் மடையர்கள் அல்ல. தொடர்ந்து எவ்வித பிரக்ஞையும் இல்லாமல் குனிந்து கொணடிருக்கம் தமிழ் பொதுமக்களே மடையர்கள்
Aucun commentaire:
Enregistrer un commentaire