ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக, அமெரிக்கா குறுக்குவழியில் - வதந்திகளைப் பரப்பி உறுப்பு நாடுகளின் ஆதரவைப்பெற முனைவதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
"சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை தொடர்பாக தீர்மானம் ஒன்றை வரைவதற்கு தம்முடன் சிறிலங்கா இணங்கிச் செயற்படுவதாக ஜெனிவாவிலுள்ள இராஜந்திர வட்டாரங்களில் அமெரிக்கா வதந்திகளைப் பரப்புகிறது.
மனிதஉரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் சிறிலங்காவுக்குச் சாதகமான நிலைப்பாட்டை எடுப்பதைத் தடுக்கவே, அமெரிக்கா இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இந்தத் தீர்மானத்தை இணைந்து வரைவதற்கு நாம் இணங்கியுள்ளதாக வதந்தி பரப்புவதன் மூலம், இந்தத் தீர்மானத்துக்கு சிறிலங்காவும் ஆதரவளிப்பதாக உறுப்பு நாடுகளை நம்பவைக்க அவர்கள் முயற்சிக்கிறார்கள்.
சிறிலங்காவின் ஒப்புதலுடன் இந்தத் தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வருகிறது என்று உறுப்புநாடுகள் நம்பினால், அவை இதனைப் பாரதூரமானதொன்றாக கருதமாட்டாது.
உறுப்பு நாடுகளை அமெரிக்கா தவறாக வழிநடத்த முனைகிறது. சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா செய்யும் ஒரு சூழ்ச்சி இது. இந்த வதந்திகளை பலப்படுத்த நாம் அனுமதிக்கப் போவதில்லை.
இந்தத் தீர்மானம் குறித்து அமெரிக்காவுடன் நாம் ஒருபோதும் இணங்கிச் செயற்படப் போவதில்லை.
சிறிலங்காவுக்கு ஆதரவளிக்கும் நாடுகளின் இராஜதந்திரிகளுக்கு இது குறித்து நாம் அறிவிப்போம்.“ என்றும் ஜெனிவாவில் உள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்
Aucun commentaire:
Enregistrer un commentaire