சிரியாவில் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல்; 1000பேர் வரை பலி?
சிரியாவின் டமஸ்கஸ் நகரின் புறநகர் பகுதியில் அந்நாட்டுப் படையினர் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தி புதன்கிழமை நடத்திய தாக்குதலில் 1000 இற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு அரசாங்க செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். கோயுடா பிராந்தியத்தில் புறநகர் பகுதியில் இரசாயன வெடிகுண்டுகளை கொண்ட ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தாம் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதல்களை நடத்தியதாக கூறுவது எதுவித அடிப்படையுமற்ற குற்றச்சாட்டு என சிரிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. கிழக்கு புறநகரப் பகுதிகளிலான சமல்கா, அர்பீன், என்டர்மா ஆகிய பிராந்தியங்களில் உக்கிர ஷெல் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. சிரியாவின் தாக்குதல் நடவடிக்கைகளின்போது இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் சம்பந்தமாக விசாரணைகளை மேற்கொள்ளும் முகமாக ஐக்கிய நாடுகள் குழுவொன்று சிரியாவுக்கு விஜயம் செய்துள்ள நிலையிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. கடந்த மார்ச் மாதம் கான் அல் –- அஸ்ஸல் பிராந்தியத்தில் 26 பேர் பலியாகுவதற்கு காரணமாக அமைந்த தாக்குதல் உட்பட 3 இடங்களில் இடம்பெற்ற தாக்குதல்களில் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டிருந்ததா என்பதைக் கண்டறியவே மேற்படி ஐக்கிய நாடுகள் குழு சிரியாவுக்கு விஜயம் செய்திருந்தது. இந்த தாக்குதல்களில் காயமடைந்தவர்கள் தற்காலிக மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெறும் காட்சிகள் யூரியூப் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் படங்கள் பலவும் வெளியாகியுள்ளன. பலியானவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் பெண்களும் சிறுவர்களும் உள்ளடங்குவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பிந்திய தாக்குதலில் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறுவது ஐக்கிய நாடுகள் இரசாயன ஆயுதங்கள் தொடர்பான விசாரணை ஆணையகத்தின் கடமைகளை நிறைவேற்றுவதை திசை திருப்பும் முயற்சி என சிரிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. சிரியாவில் இடம்பெற்று வரும் மோதல்களில் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக அரசாங்கப் படையினரும் கிளர்ச்சியாளர்களும் ஒருவரை யொருவர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
Aucun commentaire:
Enregistrer un commentaire