இது தொடர்பாக அவர் அமெரிக்காவின் சட்டனூகா நகரில் செவ்வாய்க்கிழமை மக்களிடையே ஆற்றிய உரை வருமாறு: நாம் பொருளாதாரச் சீர்திருத்தங்களையும், முதலீடுகளையும் மேற்கொள்ளா விட்டால், இந்தியா, ஜெர்மனி, சீனா உள்பட உலக நாடுகளுக்கு நாம் வெள்ளைக் கொடியை காட்ட வேண்டியிருக்கும். ஏனெனில் அவை முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன. அந்த நாடுகள் பின்தங்கப் போவதில்லை.
இந்தியா, ஜெர்மனி, சீனா போன்ற நாடுகள் பொருளாதார ரீதியாக முன்னேறி வருகின்றன. எனவே அமெரிக்காவும் சும்மா இருக்க முடியாது. நாம் எதையும் செய்யாமல் இருப்பது, மத்திய நடுத்தர வகுப்பினருக்கு உதவாது. நல்ல சம்பளத்துடன் தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் நாடு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இதன் மூலம் எதிர்கால வளர்ச்சிக்கு வழி அமைக்க முடியும்.
அமெரிக்காவில் கடந்த 1990ஆம் ஆண்டுகளில் இருந்து பார்த்தால், இப்போதுதான் முதல் முறையாக உற்பத்தி சார்ந்த வேலைகள் குறையவில்லை. அவை அதிகரித்து வருகின்றன. வர்த்தகங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பல்வேறு அரசு அமைப்புகளை இணைக்கக் கூடிய 45 உற்பத்தி மற்றும் புத்தாக்க நிறுவனங்களை நாடாளுமன்றம் சட்டமியற்றி உருவாக்க வேண்டும்.
அதேபோல், காற்றாலை, சூரியசக்தி, இயற்கை எரிவாயு உள்பட எரிசக்தித் துறையிலும் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். புதுமையான எரிசக்தி ஆதாரங்கள், எரிசக்தி விலைகளைக் குறைப்பதோடு, அபாயகரமான கரி மாசு மற்றும் வெளிநாட்டு எண்ணெயை நாம் சார்ந்திருப்பது ஆகியவற்றையும் குறைக்கும். எனவே, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள், இயற்கையான எரிபொருள்கள், மின்சார சக்தியில் இயங்கும் வாகனங்கள் ஆகியவற்றை இரட்டிப்பாக்கவும், எண்ணெய் இல்லாமல் வாகனங்களை இயங்கச் செய்வதற்கான ஆராய்ச்சிக்கு பணம் செலவழிக்கவும் வேண்டிய நேரம் வந்துவிட்டது.
நாம் அதிக அளவில் ஏற்றுமதி செய்ய வேண்டும். அமெரிக்கப் பொருள்களை உலகெங்கும் அனுப்பவே நாம் விரும்புகிறோம். ஓராண்டுக்கு முன் கொரியாவுடன் நான் புதிய வர்த்தக உடன்பாட்டில் கையெழுத்திட்டேன். ஏனெனில், அவர்கள் ஏராளமான ஹுண்டாய் கார்களை இங்கு விற்பனை செய்கின்றனர்.
ஆனால், நாம் அவர்களது நாட்டில் நிறைய ஜி.எம். கார்களை விற்பதில்லை. அந்த உடன்பாட்டில் நாம் கையெழுத்திட்ட காரணத்தால் இனி நம் நாட்டின் 3 பெரிய வாகன உற்பத்தியாளர்களும் கொரியாவில் முன்பை விடக் கூடுதலாக 18 சதவீதம் அதிகமான கார்களை விற்க முடியும் என்றார் ஒபாமா.
Aucun commentaire:
Enregistrer un commentaire