lundi 5 août 2013

சமாதானத்துக்கான சர்வதேச விருது கிளிநொச்சி 49 வயது தவச்சிறி சாள்ஸ் விஜயரட்னம் தெரிவு


தவச்சிறி சாள்ஸ் விஜயரட்னம்தவச்சிறி சாள்ஸ் விஜயரட்னம்இலங்கையின் வடக்கே போரினால் பாதிக்கப்பட்ட வன்னிப் பிரதேசத்தில் பெண்கள் மற்றும் சிறுவர்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கு உழைத்து வருகின்ற பெண் ஒருவர் சர்வதேச சமாதான விருதுக்காகத் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்.
கிளிநொச்சி மாவட்டம் திருநகர் வடக்கைச் சேர்ந்த 49 வயது தவச்சிறி சாள்ஸ் விஜயரட்னம் இந்த விருதுக்காகத் தெரிவாகியிருக்கின்றார்.கிராமிய மாதர் அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளராகவும், பிரதேச செயலக மட்டத்திலான பெண்கள் அபிவிருத்தி சம்மேளனத்தின் பொருளாளராகவும் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுவர்கள் மத்தியில் தவச்சிறி சாள்ஸ் விஜயரட்னம் பணியாற்றி வருகின்றார்.
இறுதி யுத்தத்திற்கு முன்பே கணவன் இவரை விட்டுப் பிரிந்து சென்றதனால், தனது பிள்ளைகளுடன் ஆண் உதவியின்றி இவர் வாழ்ந்து வருகின்றார்.
கடந்த 1981 ஆம் ஆண்டு முதல் பொதுச் சேவைகளில் ஈடுபட்டு வந்த இவர், யுத்தத்தினால் இடம்பெயர்ந்து மனிக்பாம் இடைத்தங்கல் முகாமில் இருந்து மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பின்பும் தன்னைப் போன்று ஆண் துணையற்ற பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் உதவும் பணியில் ஈடுபட்டு வருகின்றார்.
இவருடைய பொதுச் சேவையைப் பாராட்டி, அரச நிறுவனங்கள் மகளிர் தினத்தின்போது பாராட்டி கௌரவித்திருக்கின்றன. அந்த வகையில் இவருக்கு இந்த சர்வதேச விருது கிடைத்திருக்கின்றது.

விருதின் பின்னணி

இந்த விருதானது, தனது சமூகத்தில் பாதிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டவர்களுக்கும், உதவியற்றவர்களுக்கும் தொடர்ந்து பணியாற்றுவதற்குத் தன்னை ஊக்குவித்திருப்பதாக அவர் கூறுகின்றார்.
ஆசிய பிராந்திய நாடுகளில் அடிமட்டத்தில் இருந்து தேசிய மட்டத்தில் கணிக்கக் கூடிய வகையில் சமாதானத்தையும், மக்களின் வாழ்க்கையில் மாற்றங்களையும் ஏற்படுத்துவதற்காக உழைக்கும் தலைவர்களான பெண்களைக் கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் 'என்' சமாதான விருது வழங்கப்படுகின்றது.
'என்' (N) சமாதான வலையமைப்பின், இந்த விருது வழங்கும் நடவடிக்கையானது, ஆசிய பிராந்தியத்தில் ஐநா மன்றத்தின் அபிவிருத்தித் திட்டத்தின் (யுஎன்டிபி) கீழ் செயற்பட்டு வருகின்றது.
இந்தோனேசியா, சிறிலங்கா, திமோர் லெஸ்டே, நேபாளம், ஆப்கானிஸ்தான், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் சிறந்த தலைமைத்துவத்தின் மூலம் சமாதானத்தை உருவாக்குவதன் ஊடாக சமூகத்தை வலுவூட்டுகின்ற பெண்களை இனங்கண்டு, அவர்களுக்கு இந்த நிறுவனம் விருது வழங்கி வருகின்றது.
பெண்கள் மட்டுமல்லாமல், பெண் சமத்துவத்திற்காக உழைக்கின்ற ஆண்களையும் இனங்கண்டு இந்த நிறுவனம் விருது வழங்கி கௌரவிக்கின்றது.
இம்முறை – 2013 ஆம் ஆண்டுக்கான இந்த சமாதான விருதுக்காக ஆப்கானிஸ்தான், நேபாளம், பிலிப்பைன்ஸ், சிறிலங்கா, இந்தோநேசியா, திமோர் லெஸ்டே, பிலிப்பைன்ஸ் ஆகிய 7 நாடுகளில் இருந்து ஆளுமைமிக்க 7 பெண்களும், பெண்களின் சமத்துவத்திற்காகப் பாடுபட்ட இந்தோனேசியாவைச் சேர்ந்த உதவி அமைச்சராகிய ஆண் ஒருவரும் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றனர்.

Aucun commentaire:

Enregistrer un commentaire